மறையுரைச் சிந்தனை (அக்டோபர் 23)

விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள்!

யூரி காகரின், டிட்டோச் இவர்கள் இருவரும் ரஷ்யாவைச் சார்ந்த விண்வெளி வீரர்கள். இருவரும் விண்வெளியில் பறந்து சாதனை புரிவதற்காகத் தேர்வு செய்யப்படும் இறுதிக்கட்டத்தில் இருந்தார்கள்.

அப்போதைக்கு விண்வெளியில் ஒருவரைத்தான் அனுப்பமுடியும் என்றொரு நிலை இருந்ததால், அவர்களில் திறமை வாய்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க சோதனை ஒன்று நடத்தப்பட்டது. அந்த சோதனையில் இருவரும் வயர்கள் இணைக்கப்பட்ட கட்டிலில் தனித்தனியாக தூங்க வைக்கப்பட்டார்கள். மறுநாள் காலையில், அவர்கள் இருவரிடமும் வயர்கள் இணைக்கப்பட்ட கட்டிலில் தூங்கிய அனுபவம் எவ்வாறு இருந்தது என்று கேட்கப்பட்டது.

டிட்டோச், இரவில் நன்றாகத் தூங்கிவிட்டதால், அவரால் எதையும் சொல்ல முடியவில்லை. ஆனால் யூரி காகரின் விழிப்போடு தூங்கினார். அதனால் தேர்வாளர்கள் கேட்ட கேள்விக்கு மிகச் சரியான பதிலைச் சொல்லி, விண்வெளியில் பறக்கக்கூடிய வாய்ப்பினைப் பெற்றார். விண்வெளியில் பறந்து வியக்கத்தக்க சாதனையையும் நிகழ்த்தினார்.

விழிப்போடு இருப்பதால் எத்தகைய நன்மை நமக்குக் கிடைக்கின்றது என்பதை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு ஆழமாக சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தன்னுடைய சீடர்களிடத்தில் விழிப்பாய் இருக்கவேண்டும் என்று போதிக்கின்றார். “உங்கள் இடையை வரிந்து கட்டிக்கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துக்கொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்” என்கின்றார்.

ஆண்டவருடைய இரண்டாம் வருகைக்கு ஒவ்வொருவரும் எப்படி இருக்கவேண்டும், எவ்வாறெல்லாம் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்பது பற்றி போதிக்கின்ற இயேசு, அதற்காக கையாளக்கூடிய ஓர் உவமைதான் தலைவர் பணியாளர் உவமையாகும். ஆண்டவருடைய வருகை எந்த நேரத்திலும் நடக்கலாம், இரவிலோ, பகலிலோ, சேவல் கூவும் வேளையிலோ அல்லது சாம வேளையிலோ எந்த நேரத்திலும் நடக்கலாம் அதற்காக நாம் ஒவ்வொருவரும் விழிப்பாகவும் ஆயத்தமாகவும் இருக்கவேண்டும். இதை உணத்துவதற்காகத்தான் இயேசு, திருமண விருந்திற்குச் சென்று, திரும்பி வருகின்ற தலைவர், அவருக்காகக் காத்திருக்கின்ற பணியாளர் உவமையைப் பற்றிப் பேசுகின்றார்.

அந்தக் காலத்தில் இன்றைக்கு இருப்பதுபோன்று போக்குவரத்து வசதிகள். ஆகவே, வெளியே செல்கின்ற ஒருவர் நினைத்த நேரத்திற்குத் திரும்பி வரமுடியாது. இரவு நெடுநேரமாகலாம். ஆகவே, அந்நேரம்வரை அந்த மனிதருக்குக் கீழ் பணிபுரியும் பணியாளர் காத்திருக்கவேண்டும். அவ்வாறு தலைவர் வருகின்றபோது அந்தத் தலைவருக்குக் கீழ் பணிசெய்யும் பணியாளர் காத்திருந்தார் என்றால், அவர் பேறுபெற்றவர் ஆவார், அது மட்டுமல்லாமல் தலைவர் அவருக்குப் பணிவிடை செய்வார் என்கின்றார் இயேசு.

இயேசு சொல்லக்கூடிய இந்த உவமையை ஆண்டவருடைய இரண்டாம் வருகையோடு இணைத்துச் சிந்தித்துப் பார்க்கின்றபோது, நாம் இரண்டு உண்மைகளை அறிந்துகொள்ளலாம். ஒன்று விழித்திருக்கும் பணியாளர் பேறுபெற்ற பணியாளர் ஆவார் என்பதும் இரண்டு, விழித்திருக்கும் பணியாளருக்கு இறைவன் தக்க கைம்மாறு தருவார் என்பதும் ஆகும். இந்த இரண்டையும் சிறுது ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.

முதலாவதாக விழித்திருக்கும் பணியாளர் எந்த வகையில் பேறுபெற்ற பணியாளர் ஆவார் என்று பார்க்கின்றபோது, அந்தப் பணியாளர்மீது தலைவருக்கு உயர்வான மதிப்பு ஏற்படும். அதனால் அவர் அவரை, “நன்று நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளனே, நீ சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தாய். எனவே, பெரிய பொறுப்புகளில் உன்னை நான் அமர்த்துவேன்” என்று சொல்லி அவரைப் பெரிய பொறுப்புகளில் அமர்த்துவார்.

இரண்டாவதாக, விழித்திருக்கும் பணியாளருக்குத் தலைவர் வந்து பணிவிடை செய்வார் என்பது மிக உயர்ந்த பேறு. பணியாளர்களை விலங்கினும் கீழாக நடத்துகின்ற சூழலில், ஒரு தலைவர் அவரிடத்தில் பணிபுரிகின்ற பணியாளருக்குப் பணிவிடை செய்வார் என்றால், அதனை வார்த்தைகளில் எப்படிச் சொல்வது? ஆனாலும் எவர் ஒருவர் தன்னுடைய கடமைகளில் மிகப் பொறுப்போடும் விழிப்போடும் இருக்கின்றாரோ, அப்படிப்பட்டவருக்கு இறைவன் மறுவுலக வாழ்வில் தக்க கைம்மாறு தருவார் என்பது உறுதி. இதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

ஆண்டவருடைய இரண்டாம் வருகையைப் பற்றி சிந்திக்கின்ற நாம், ஆண்டவருடைய வருகைக்காக நாம் விழிப்போடும் ஆயத்தமாகவும் இருக்கின்றோமா? அல்லது வெந்ததைத் தின்று, விதி வந்தால் சாவோம் என்ற மனநிலையில் இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்களே பேறுபெற்றவர்கள் ஆகின்றார்கள். ஆகவே, நாம் ஆண்டவருடைய வருகைக்காக விழிப்போடும் ஆயத்தமாகவும் காத்திருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.