துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக, 10 இலட்சம் குழந்தைகளின் செபமாலை

உலகெங்கும் துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக, குறிப்பாக, பாகிஸ்தானில் மரணதண்டனை வழங்கப்பட்டு சிறையில் துன்புறும் ஆசியா பீபி அவர்களுக்காக, அக்டோபர் 18, இவ்வியாழனன்று, உலகின் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 10 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இணைந்து, செபமாலை செபிக்கும்படி, Aid to the Church in Need என்ற பிறரன்பு அமைப்பு அழைப்பு விடுத்தது.

துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக, 2005ம் ஆண்டு முதல், இவ்வமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த முயற்சியில், இவ்வாண்டு, தேவநிந்தனை செய்ததாக பொய் குற்றம் சாட்டப்பட்டு, பாகிஸ்தான் சிறையில், கடந்த 10 ஆண்டுகளாக அடைபட்டுக் கிடக்கும் ஆசியா பீபி அவர்களுக்கு, சிறப்பான செபங்கள் எழுப்பும்படி வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

அண்மையில், Aid to the Church in Need அமைப்பினரால் பிரித்தானியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த ஆசியா பீபி அவர்களின் கணவர் ஆஷிக் அவர்களும், மகள் ஆயிஷாம் அவர்களும் விடுத்த சிறப்பான விண்ணப்பத்தைத் தொடர்ந்து, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று இவ்வமைப்பினர் கூறியுள்ளனர்.

19 வயது நிறைந்த இளம்பெண் ஆயிஷா அவர்கள், தான் கடந்த 10 ஆண்டுகளாக தன் அன்னையை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், தன் அன்னைக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவு, தற்போது, செபங்கள் தேவைப்படுகின்றன என்றும், இக்கூட்டத்தில் விண்ணப்பித்தார்.

2015ம் ஆண்டு, ஏப்ரல் 15ம் தேதி, புதனன்று, ஆசியா பீபி அவர்களின் கணவரும், மகளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, புதன் மறைக்கல்வி உரைக்குப் பின் சந்தித்து அவரிடமிருந்து ஆறுதலும், ஆசீரும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.