அக்டோபர் 20 : நற்செய்தி வாசகம்
நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார்.
மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார். மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார்.
ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார். தொழுகைக்கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதில் அளிப்பது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
ஏனெனில் நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை :
“மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிடமகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார்”
2008 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஒரிசா மாநிலத்தில் உள்ள கந்தமால் மாவட்டத்தில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் அகில உலகம் அறிந்த செய்தி.
2008 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி இரவு, சுவாமி லக்ஷ்மானந்தா சரஸ்வதி மர்மநபர்களால் தாக்கப்பட்டதற்கு அங்கிருந்த கிறிஸ்தவர்கள்தான் காரணம் என்று மதவெறியர்கள் கிறிஸ்தவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள். இச்செய்தி கந்தமால் மாவட்டத்தில் உள்ள தியங்கியா என்ற ஊரில், கிறிஸ்தவ விசுவாசத்தில் வேரூன்றி இருந்த போரிஹிடோ (Porikhito) என்பவருக்குத் தெரியவந்தது. அவர், தனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கும் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, இரவோடு இரவு தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு மகள்களையும் கூட்டிக்கொண்டு மலைப்பாங்கான ஊராகிய ரைகியாவில் விட்டுவர சென்றார்.
போரிஹிடோ, தியாங்கியாவிலிருந்து ரைகியாவிற்குத் தப்பித்துச் சென்ற செய்தி எப்படியோ மதவெறியர்களுக்குத் தெரியவந்தது. உடனே அவர்கள் புறப்பட்டுச் சென்று, போரிஹிடோவையும் அவருடைய மனைவி மற்றும் இரண்டு மகள்களையும் பிடித்து, அவருடைய சொந்த ஊரான தியாங்கியாவிற்கு இழுத்துக்கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் போரிஹிடோவை ஒரு மரத்தில் கட்டிவைத்து அடி அடியென அடித்தார்கள். அடிக்கும்போதே ‘நீ கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்குத் திரும்பினால், உன்னைக் கொல்லாமல் விட்டுவிடுவோம்’ என்று சொல்லிச் சொல்லலி அடித்தார்கள். அப்போது போரிஹிடோவோ, “நான் ஒருபோதும் கிறிஸ்தவ மதத்தை விட்டு வெளிவர மாட்டேன்” என்றார். இதனால் அவரை அடித்துத் துன்புறுத்திய மதவெறிக் குப்பல் இன்னும் கடுமையாக அடித்தது.
இதற்குக்குப் பின் அவர்கள் போரிஹிடோவை மரத்திலிருந்து அவிழ்த்து, சாலையில் தரதரவென இழுத்துச் சென்று, அவருடைய கைகளையும் கால்களையும் முறித்துப் போட்டார்கள். பின்னர் அவர்கள் அவருடைய உடலில் பெட்ரோல் ஊற்றி, எரித்துக் கொன்றுபோட்டார்கள். அவ்வாறு அவர்கள் அவரை எரிக்கும்போது ‘இயேசு இயேசு’ என்று சொல்லிக்கொண்டே அவர் இறந்தார். இதற்கிடையில் தியாங்கியாவில் இருந்த ஒருசில நல்ல உள்ளம் படைத்த இந்துப் பெண்கள் போரிஹிடோவின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளையும் மதவெறியர்களின் கையிலிருந்து காப்பாற்றி, ஒரு பள்ளிக்கூடத்தில் பத்திரமாக வைத்தார்கள். மீட்புக் குழுவினர் வந்துதான் அவர்களை மீட்டார்கள்.
“தன்னுடைய உயிர் போனாலும் பரவாயில்லை, கிறிஸ்தவ விசுவாசத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன், கிறிஸ்துவை மறுதலிக்கவும் மாட்டேன்” என்று சொல்லி கிறிஸ்துவுக்காக உயிரையே துறந்த போரிஹிடோவின் சாட்சிய வாழ்வு நமது பாராட்டிற்கு உரியதாக இருக்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிடமகனும் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையில் மறுதலிக்கப்படுவார்” என்கின்றார்.
இயேசுவின் இவ்வார்த்தைகள் ஆழமான சிந்தனைக்குரியதாக இருக்கின்றன. இன்றைக்குப் பலர், பணிப்பெண்ணையும் அரண்மனை சேவகனையும் கண்டு பயந்து இயேசுவை மறுதலித்த பேதுருவைப் போன்று அடுத்தவர் என்ன நினைப்பாரோ?, என்ன பேசுவாரோ? என நினைத்துக்கொண்டு கிறிஸ்தவ அடையாளத்தை மறைத்துக்கொண்டு வாழ்வதைப் பார்க்க முடிகின்றது. இப்படிப்பட்டவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ள அருகதை அற்றவர்கள். கிறிஸ்துவை மறுதலித்து வாழும் இப்படிப்பட்டவர்களைக் கிறிஸ்துவும் கடவுளின் தூதர் முன்பாக மறுதலிப்பார் என்பது உறுதி.
ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக எத்தகைய இடர்வரினும், துன்பங்கள், சவால்கள் வந்தாலும் கிறிஸ்தவ விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்து, கிறிஸ்துவை இறைவன் என ஏற்று, எல்லார் முன்னிலையிலும் அறிக்கையிடுபவர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள், எவருக்கு முன்னாலும் ஆண்டவர் இயேசுவைப் பற்றி துணிவுடன் அறிக்கையிட தூய ஆவியார் ஆற்றலையும் வல்லமையையும் தந்திடுவார், அப்படிப்பட்டவர்களை இயேசு கடவுளின் தூதர் முன்பாக ஏற்றுக்கொள்வார் என்பது உண்மை.
நாம் உயிருக்குப் பயந்து கிறிஸ்தவை மறுதலித்து வாழும் கோழைகளா? அல்லது எத்தகைய இடர்வரினும் ஆண்டவர் இயேசுவை ஆழமாக நம்பி, அவரைத் துணிவுடன் அறிக்கையிடுபவர்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். கடவுள் தம் ஆவியால் கோழை உள்ளத்தை நமக்கு அருளவில்லை. வலிமையையும் அன்பும் விவேகமும் கொண்ட உள்ளத்தையே அருளினார் என்பார் தூய பவுல் (2 திமோ 1:17).
ஆகவே, நாம் வலிமையையும் அன்பும் விவேகமும் கொண்ட உள்ளத்தினராய் இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
– மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Comments are closed.