செல்வங்களைத் துறப்பது, சீடரின் அடிப்படை பண்பு – திருத்தந்தை

செல்வங்களை விட்டு விலகவும், துன்பங்களை ஏற்றுக்கொள்ளவும் கூடிய உள்ளத்தை சீடர்கள் பெறவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 18, இவ்வியாழன் காலை, தன் மறையுரையை வழங்கினார்.

அக்டோபர் 18ம் தேதி சிறப்பிக்கப்பட்ட நற்செய்தியாளரான புனித லூக்காவின் திருநாள் திருப்பலியை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருத்தந்தை, வறியோர் பெறும் சிறப்பான பேறுகள் என்ற மறையுண்மையை உலகிற்கு வெளிப்படுத்திய புனித லூக்கா என்று, இத்திருநாளின் துவக்க மன்றாட்டில், கூறியுள்ள கருத்தை மையப்படுத்தி தன் மறையுரை எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

செல்வங்களைத் துறப்பது, ஒரு சீடருக்குத் தேவையான அடிப்படை பண்பு என்று குறிப்பிட்டத் திருத்தந்தை, தங்களை வந்தடைந்த துன்பங்களை ஏற்றுக்கொள்வதிலும் சீடர்கள் உறுதியான மனம் கொண்டிருந்தனர் என்று குறிப்பிட்டார்.

கிறிஸ்தவர்கள் அடையும் துன்பங்கள் இன்றும் தொடர்கின்றன என்பதை விளக்க, அக்டோபர் 17, இப்புதனன்று, ஆயர் ஒருவர், மாமன்றத்தில் பகிர்ந்த நிகழ்வை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

கத்தோலிக்க மறையை வெறுக்கும் ஒரு நாட்டில், ஒரு கத்தோலிக்க இளையவரை, அடித்து, ஒரு குழிக்குள் தள்ளிய மக்கள், அவர் மீது மண்ணைப் போட்டு, அவரது கழுத்துவரை நிரப்பியபின், ‘இயேசு கிறிஸ்துவை மறுதலிக்க உனக்கு இறுதி வாய்ப்பு தருகிறோம்” என்று சொன்னபோது, அவ்விளையவர் முடியாது என்று மறுக்கவே, அவர் தலையில் ஒரு கல்லை போட்டு அவரைக் கொன்றனர் என்ற நிகழ்வை கூறியத் திருத்தந்தை, இந்த நிகழ்வு, முதல் நூற்றாண்டில் நிகழவில்லை மாறாக, இரு மாதங்களுக்கு முன் நிகழ்ந்தது என்று குறிப்பிட்டார்.

புனித லூக்கா திருநாளுக்கென வழங்கப்பட்டுள்ள முதல் வாசகத்தில், திருத்தூதர் பவுல், தன்னைச் சுற்றி இருந்தவர்கள் தன்னைவிட்டு சென்றுவிட்டனர் என்பதைக் குறிப்பிடுவதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நம் கிறிஸ்தவ விசுவாசத்திற்காக, நாமும் மற்றவர்களால் வெறுத்து ஒதுக்கப்படுவோம் என்று எடுத்துரைத்தார்.

சிலுவையில் தொங்கிய வேளையில், இயேசுவும் தன் தந்தையால் கைவிடப்பட்டதைப் போல் உணர்ந்தார் என்பதை, தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் மத நம்பிக்கைக்காக துன்புறும் அனைவருக்காகவும் சிறப்பாக வேண்டிக்கொள்ளுமாறு விண்ணப்பித்தார்.

இதற்கிடையே, தன் மறையுரையின் தொடர்ச்சியாக, ‘சீடரின் பாதை ஏழ்மையாகும். சீடர்கள் ஏழையானவர்கள், ஏனெனில், அவர்களின் செல்வம் இயேசுவே’  என்ற சொற்களை, இவ்வியாழனன்று, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.