திருத்தந்தையைச் சந்தித்த தென் கொரிய அரசுத்தலைவர்
தென் கொரியாவின் அரசுத் தலைவர் மூன் ஜே-இன் அவர்கள், அக்டோபர் 18, இவ்வியாழன் மதியம் 12 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
இச்சந்திப்பின்போதும், திருப்பீடச் செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின், திருப்பீட வெளியுறவுத்தறைச்செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகியோருடன், அரசுத்தலைவர் மூன் ஜே-இன் அவர்கள் மேற்கொண்ட உரையாடல்களின்போதும், இரு கொரிய நாடுகளுக்குமிடையே இடம்பெற்றுவரும் இணக்க உணர்வுகள் குறித்து மகிழ்ச்சி வெளியிடப்பட்டது.
திருத்தந்தைக்கும் கொரிய குடியரசின் தலைவருக்கும் இடையே இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, வட கொரியாவை சந்திக்க வரும்படி அந்நாட்டு தலைவரிடமிருந்து தான் கொண்டு வந்திருந்த அழைப்பை வழங்கினார் தென் கொரிய அரசுத் தலைவர்.
அத்துடன், கொரிய தீபகற்பத்தில், ஒப்புரவு, சமாதானம், மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் வளமான வாழ்வு ஆகியவை உருவாக செபிக்குமாறு, தென் கொரிய அரசுத் தலைவர், மூன் ஜே-இன் அவர்கள் திருத்தந்தையிடம் சிறப்பாக விண்ணப்பித்தார்.
கடந்த ஆண்டு, மே மாதம் 10ம் தேதி முதல், அரசுத் தலைவராகப் பதவி வகித்துவரும் கத்தோலிக்கரான மூன் ஜே-இன் அவர்கள், வடகொரியாவுடன் நட்புறவை வளர்க்க முயற்சி செய்து, இவ்வாண்டில் ஏப்ரல், மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் மும்முறை இரு நாடுகளுக்கும் இடையே கூட்டங்களை நடத்தி, வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் அவர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
வட கொரியாவிலிருந்து தென் கொரியாவுக்கு குடிபெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த மூன் ஜே-இன் அவர்கள், இளவதிலேயே, மனித உரிமைகளுக்கென போராட்டங்களில் ஈடுபட்டதுடன், அவ்வுரிமைகளுக்காக வாதாடும் வழக்குரைஞராகவும் திகழ்ந்தார்.
தென் கொரியாவின் மொத்த மக்கள் தொகையில் 11 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.
Comments are closed.