மறையுரைச் சிந்தனை (அக்டோபர் 19)
உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்சவேண்டாம்!
இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இத்தாலியை ஆட்சி செய்துவந்தவர் சர்வாதிகாரி முசோலினி. அவர் ஆட்சியிலிருந்த போது நடைபெற்ற நிகழ்வு இது.
ஒரு சமயம் முசோலினி மாறுவேடத்தில் திரையரங்கம் சென்றிருந்தார். அப்போது திரையில் அவருடைய படம் வந்தது. அதைப் பார்த்ததும் எல்லாரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். அவர் மட்டும் எழாமல் அமர்ந்துகொண்டு அதைப் பார்த்துக்கொண்டிருந்தார். தன் படத்தைப் பார்த்ததும் எல்லாரும் எழுந்துநின்று தனக்கு மரியாதையை செலுத்துகிறார்களே என்று அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.
அப்போது அவருடைய தோளில் யாரோ ஒருவர் தட்டுவது போன்று இருந்தது. அவர் திரும்பிப் பார்த்தார். அவர் பின்னால் நின்றுகொண்டிருந்த ஒருவர், “ஐயா தயதுசெய்து எழுந்துவிடுங்கள். இல்லையென்றால் நீங்கள் அமர்ந்திருப்பத்தை யாராவது பார்க்க நேர்ந்து அதை கொடுங்கோலன் முசோலினியிடம் போட்டுக் கொடுத்துவிடுவார்கள்… உங்களைப் போன்று எனக்கும் ‘இவனுக்கெல்லாம் மரியாதை செலுத்தவேண்டுமா என்ற எண்ணம் வருகிறது. என்ன செய்ய பயமாக இருக்கின்றது!” என்றார். இதைக் கேட்ட முசோலினிக்குத் தூக்கி வாரிப்போட்டது. எல்லாரும் பயத்தினால்தான் எழுந்து நிற்கிறார்களே அன்றி, உண்மையான மரியாதையினால் அல்ல என்பதை அப்போது அவர் உணர்ந்து கொண்டார்.
‘இதைக் கடைப்பிடிக்கவிட்டால் அவன் என்ன சொல்லுவானோ?, அதைச் செய்யவில்லை என்றால் இவன் ஏதாவது செய்துவிடுவானோ’ என்ற பயத்தில்தான் பலரும் பலநேரங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக இருக்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு முத்தான ஓர் அறிவுரையைத் தருகின்றார். அதுதான் “உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்சவேண்டாம். கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகார உள்ளவருக்கே அஞ்சுங்கள்” என்பதாகும்.
இயேசு இவ்வாறு சொல்வதற்கான காரணத்தையும் தொடர்ந்து சொல்கின்றார். சிட்டுக் குருவிகள் சாதாரணமானவை. அதற்கு அவ்வளவு ஒன்றும் மதிப்பு இல்லை, இயேசு சொல்வது போன்று ‘இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகளை வாங்கிவிடலாம். எடுத்துக்காட்டாக ஒருவர் ‘’நூறு ரூபாய்க்கு இருபது சிட்டுக்குருவிகள்’ என்று விற்றுக்கொண்டிருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவரிடத்தில் நூறு ரூபாய்க்கு இருப்பத்தைந்து சிட்டுக்குருவிகளைத் தாருங்கள் என்று சொல்லி பேரம் பேசினால், அவர் முதலில் தயங்கினாலும் கட்டாயம் தருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. அப்படிப்பட்ட விலைகுறைவான சிட்டுக்குருவிகளையே கடவுள் காப்பாற்றும்போது, கடவுள் பார்வையில் விலைமதிக்கப் பெறாதவர்களாக இருக்கின்ற நம்மைக் கடவுள் காப்பாற்றமாட்டாரா? என்பதுதான் இயேசு முன் வைக்கின்ற கேள்வியாக இருக்கின்றது.
அடுத்ததாக இயேசு சொல்லக்கூடியது, ‘உங்கள் தலைமுடி எல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன’ என்பது. நம்முடைய தலைமுடிகள் எண்ண முடியாத அளவுக்கு கணக்கில் அடங்காதவை. அப்படியிருந்தாலும் அவையெல்லாம் கடவுளுடைய பார்வைக்கு மிக மதிப்புக் குரியவையாக இருக்கின்றன. இப்படி சாதாரண சிட்டுக்குருவிகளும் தலைமுடியும் கடவுளுடைய பார்வையில் மதிப்புக்குரியவையாக இருக்கின்றபோது, படைப்பின் மணிமகுடமாக இருக்கின்ற மனிதர்களாகிய நாம், கடவுளுடைய பார்வையில் எவ்வளவு மதிப்புக்குரியவர்களாக இருப்போம்?. ஆதலால், உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்சவேண்டாம் என்கிறார் இயேசு.
மனிதர்களுக்கு அஞ்சவேண்டாம் எனச் சொல்லும் இயேசு ‘கடவுளுக்கு அஞ்சுங்கள்’ எனச் சொல்கின்றார். கடவுளுக்கு ஏன் அஞ்சவேண்டும் என்றால், அவருக்கு மட்டுமே நம்மை நரகத்தில் தள்ளுவதற்கு வல்லமை இருக்கின்றது. ஆகவே, அப்படிப்பட்டவருக்கு நாம் அஞ்சி நடப்பது தேவையான ஒன்றாக இருக்கின்றது. அறிவிலும் தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்ட இந்த கால கட்டத்தில் மக்களுக்கு இறையச்சமே/ கடவுள் பயமே இல்லை. அதனால்தான் சமூகத்தில் தீமைகள் மலிந்துபோய்விட்டடன. ஒரு சமூகம் கடவுளுக்கு அஞ்சி வாழுகின்ற சமூகமாக இருக்கின்றபோது, அந்த சமூகத்தில் குற்றங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. ஏனென்றால் தவறு செய்தால் இறைவன் தண்டிப்பார் என நினைத்து தவறுகள் செய்யப் பயப்படுவர். ஆனால் ‘கடவுள் என்ன செய்துவிடுவார்?’ என நினைத்துக்கொண்டு தவறுகள் செய்தால், தவறுகள் கூடுமே ஒழிய குறைவதற்கான வழியே இல்லை. ஆதலால்தான், இறைவனுக்கு அஞ்சி வாழ்வது தேவையான ஒன்றாக இருக்கின்றது.
இதைவிடவும் இறைவனுக்கு நாம் ஏன் அஞ்சி வாழவேண்டும் என்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது. விவிலியம் சொல்வது போல ‘இறையச்சம் ஞானத்தின் தொடக்கம்’. ஆதலால் நாம் இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்தோமெனில், ஞானத்தில் வளர்வோம் என்பது உறுதி.
ஆகவே, உயிரைக் கொல்பவர்களுக்கு அஞ்சாமல் எல்லாவற்றிற்கும் ஆதிகாரணரும் ஞானத்தின் ஊற்றுமாக இருக்கின்ற இறைவனுக்கு மட்டுமே அஞ்சி வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Comments are closed.