அக்டோபர் 17 : நற்செய்தி வாசகம்
பரிசேயரே உங்களுக்குக் கேடு! ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு!
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 42-46
அக்காலத்தில் இயேசு கூறியது: “ஐயோ! பரிசேயரே உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, கறியிலை மற்றும் கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள்.
ஆனால் நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்; ஆனால் அவற்றையும் விட்டுவிடலாகாது. ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே.
ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் அடையாளம் தெரியாத கல்லறைகள் போல் இருக்கிறீர்கள். மக்களும் கல்லறைகள் எனத் தெரியாமல் அவற்றின் மீது நடந்து போகிறார்கள்.”
திருச்சட்ட அறிஞருள் ஒருவர் அவரைப் பார்த்து, “போதகரே, இவற்றைச் சொல்லி எங்களை இழிவு படுத்துகிறீர்” என்றார். அதற்கு அவர், “ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! ஏனென்றால் நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை
முன்னுக்குப் பின் முரணான மனிதர்கள் – வெளிவேடக்காரர்கள்
அந்நகரில் இருந்த பிரபலமான கல்லூரி ஒன்றில் பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவர் மெத்தப் படித்த மேதாவி. நிறைய நூல்களைக் கரைத்துக் குடித்தவர். எந்தத் தலைப்பைக் குடுத்தாலும் அதைப் பற்றி மணிக்கணக்கில் பேசக்கூடியவர். ஆனால் அவர் தன்னோடு பணிபுரியும் சக பேராசிரியர்களையும் ஏன் மாணவர்களையும் கூட சரியாக மதிப்பதில்லை. எப்போதும் அகங்காரத்தோடும் ஆணவத்தோடும் அவர் நடந்துகொண்டார். இச்செய்தி கல்லூரியின் முதல்வருடைய காதுகளுக்கு எட்டியது. முதல்வர் அந்தப் பேராசிரியருக்கு சரியான பாடம் கற்றுத் தர நினைத்தார்.
ஒருநாள் குறிப்பிட்ட அந்த பேராசியருக்கு பாராட்டுக் கூட்டம் நடந்தது. அந்த பாராட்டுக் கூட்டத்திற்கு முதல்வர் அழைக்கப்பட்டிருந்தார். ஏனைய பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
முதல்வர் பேசவேண்டிய நேரம் வந்ததும், அவர் எழுந்து பேசத் தொடங்கினார், “பேராசிரியரைப் பற்றி நிறையச் சொல்லலாம். பேராசிரியர் ஒரு மெத்தப் படித்த மேதாவி, நடமாடும் நூலகம்” என்றார். இவ்வார்த்தைகள் அந்த பேராசிரியரின் உள்ளத்தில் ஆணவத்தை ஏற்படுத்தியது. தன்னைபோன்ற அறிவாளி, எல்லாம் தெரிந்தவர் இந்த உலகத்தில் யாரேனும் உண்டா?’ என்று அவர் பெருமிதம் கொண்டார்.
முதல்வர் தொடர்ந்து பேசினார், “பேராசிரியர் நடமாடும் நூலகம் என்று சொன்னேனே ஒழியே, அவர் தான் கற்ற நூல்கள் அனைத்தின்படி வாழ்கிறவர் என்று சொல்லவில்லை. ஒரு நல்ல மனிதருக்கு/ பேராசிரியருக்கு அழகு, தான் கற்ற நூல்களின்படி வாழ்வது” என்றார். இதைக் கேட்டதும் அந்தப் பேராசிரியருக்கு தன்னுடைய தவறு புரிந்ததது. தான்தான் அப்படி கற்ற நூல்களின்படி வாழ்வதில்லை என்பதை அப்போது அவர் உணர்ந்துகொண்டார்.
நூல்கள் நிறையக் கற்பதைவிடவும், கற்றுக்கொண்டதன்படி வாழ்வதே ஒருவருக்கு அழகு என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பரிசேயர்களைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார். காரணம் அவர்கள் மக்களுக்கு நிறைய செய்திகளைப் போதித்தார்கள். பத்திலொரு பகுதியை கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்தினார்கள். ஆனால் அவர்களுடைய வாழ்வோ முன்னுக்குப் பின் முரணானதாக இருந்தது. வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் அவர்கள் வெளிவேடத்தனமான வாழ்வு வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அதனால்தான் இயேசு அவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார்.
இயேசுவின் சீடர்களாக இருக்கக்கூடிய நாம் வெறுமனே பக்திமான்களாக இருக்கின்றோமா? அல்லது நம்பிக்கையை நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் அறிக்கையிடுகின்றவர்களாக இருக்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
தூய யாக்கோபு தன்னுடைய திருமுகத்திலே பக்திமான்களுக்கும் செயல்வீரர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி குறிப்பிடுவார். பக்திமான்கள் என்பவர்கள் ஒரு சகோதரன் அல்லது சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் ‘நலமே சென்றுவாருங்கள்; குளிர்காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வார்கள் என்றால் அவர்கள்தான் பக்திமான்கள். அவர்களால் இந்த சமூகமும், கடவுளும் எந்த விதத்திலும் மகிழ்ச்சியடையப் போவதில்லை.
இதற்கு மாறாக செயல்வீரர் என்பவர் தன்னை நாடி வரும் பசித்தவர்களுக்கு உண்ணக் கொடுப்பார்; தங்க இடமில்லாதவருக்கு இடம் கொடுப்பார்; ஆடையில்லாதவருக்கு ஆடை கொடுப்பார். இப்படிப்பட்டவரால் மக்களும் கடவுளும் மகிழ்வார்கள்.
ஆகையால் நாம் பெயரளவுக்கு பக்திமான்கள் /கிறிஸ்தவர்கள் என்று வாழாமல் செயல்வீரர்களாக வாழ முன்வர வேண்டும். ஏனென்றால் நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாகும் என்பது யாக்கோபுவின் ஆழமான சிந்தனை ( 2:17).
பரிசேயர்கள் இயேசுவின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாவதற்கு இன்னொரு காரணம் அவர்கள் மக்களிடமிருந்து மதிப்பையும் மரியாதையையும் பெற நினைத்தார்கள். ஆனால் அவர்கள் அந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் தகுந்தவர்களாக இல்லை; வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாகவே இருந்தார்கள். இயேசுவின் சீடர்களாகிய நாம், மக்கள் நமக்குத் தரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் தகுந்தவர்கள்தானா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நமது சொல்லும் செயலும் இணைந்துபோகவேண்டும். வழிபாடு நமது வாழ்வோடு ஒத்துப்போகவேண்டும்.
மத்தேயு நற்செய்தி 7:21 ஆம் வசனத்தில் இயேசு கூறுவார், “என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகில் உள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்” என்று.
ஆகவே, நாம் பரிசேயர்களைப் போன்று சொல்வீரர்களாக அல்லாமல் செயல்வீரர்களாகவும், வழிபாடும் நமது வாழ்வும் ஒத்துப் போகும்படி வாழ்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Comments are closed.