மறையுரைச் சிந்தனை (அக்டோபர் 17)
பத்திலொரு பங்கை காணிக்கையாகச் செலுத்துவதை விடவும் நீதியும் கடவுளின் அன்பும் உயர்ந்தவையல்லவா?
ஒரு பணக்காரன், பந்தயக் குதிரை ஒன்றை வாங்கினான். பல பந்தயங்களில் வென்ற பிரபலமான குதிரை அது. அந்தக் குதிரை தனக்குச் சொந்தமானதில் பணக்காரனுக்கு ஏகக் குஷி. அதற்கு அழகான கொட்டகை அமைத்து, அதைக் கவனிக்க வேலைக்காரர்களை நியமித்து, தேனையும் பாலையும் கொடுத்து குதிரையை வளர்த்து வந்தான்.
ஆறு மாதங்கள் கழிந்தன. ஒரு போட்டி வந்தது. அதில் கலந்து கொள்ள தன் குதிரையையும் அழைத்துச் சென்றிருந்தான். ஆனால் அந்தப் போட்டியில் குதிரை கடைசியாக வந்தது. பணக்காரனுக்குக் கடுங்கோபம். குதிரையை விற்றவனிடம் சண்டைக்குப் போனான். “இந்தக் குதிரைக்கு நான் என்னவெல்லாம் கொடுத்தேன் தெரியுமா… அது என்னை ஏமாற்றிவிட்டது” என்று கத்தினான். குதிரைக்குக் தான் செய்ததையெல்லாம் சொன்னான்.
குதிரையை விற்றவனோ அமைதியாக ஒரு கேள்வி கேட்டான். “எல்லாம் கொடுத்தீர்கள் சரி. குதிரைக்கு தினமும் பயிற்சி கொடுத்தீர்களா?” அவர் “இல்லை” என்று சொன்னார். “குதிரை பயிற்சியில்லாமல் தின்று கொழுத்துவிட்டது. அதனால்தான் அதால் ஓட முடியவில்லை” என்று ஒரு போடுபோட்டார். பணக்காரனால் எதுவும் பேசமுடியவில்லை.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் பணக்காரனைப் போன்றுதான் நாமும் பல நேரங்களில், எது முக்கியமோ அதையெல்லாம் செய்யாமல் அற்பக் காரியங்களைச் செய்து, அதிலே திருப்திப்பட்டுக் கொள்கின்றோம். இத்தகைய பின்னணியில் இன்றைய இறைவார்த்தையை சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பரிசேயர்களுக்கும் திருச்சட்ட அறிஞர்களுக்கும் எதிராகத் தன்னுடைய கண்டனக் குரலைப் பதிவு செய்கின்றார். முதலில் பரிசேயர்களைப் பார்த்து, “ஐயோ! பரிசேயரே உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, கறியிலை மற்றும் கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள். ஆனால் நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்; ஆனால் அவற்றையும் விட்டுவிடலாகாது” என்கின்றார்.
இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த பரிசேயர்கள் சட்டங்களை மிக நுணுக்கமாகக் கடைப்பிடிக்கும் ‘சட்டாம்பிகளாக’ இருந்தார்கள். நிலத்தில் விளைவதிலிருந்து பத்தில் ஒரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கவேண்டும் என்று சட்டம் இருந்தது. அதற்காக அவர்கள் சட்டத்தில் சொல்லாதவற்றையும்கூட மிக நுணுக்காகக் கடைபிடித்தார்கள். எடுத்துக்காட்டாக புதினா, கறியிலை, கீரைச் செடிவகைகளில் பத்தில் ஒரு பங்கை காணிக்கையாகப் படைக்கவேண்டும் என்று சட்டத்தில் இல்லை. ஆனாலும் அவற்றிலிருந்து பத்திலிருந்து ஒரு பங்கை காணிக்கையாகப் படைத்தார்கள். அப்படிப்பட்டவர்கள் இவையெல்லாவற்றையும் மேலானதாக இருக்கக்கூடிய நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்தவில்லை.
இறைவாக்கினர் மீக்கா தன்னுடைய திருமுகத்தில் கூறுவார், “ஓ மானிடா! நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே, நேர்மையைக் கடைப்பிடித்தலையும் இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கிறார்?” (6:8). ஆண்டவராகிய கடவுள் நம்மிடமிருந்து நேர்மையையும் இரக்கத்தையும் தாழ்ச்சியையும் கடைப்பிடித்து வாழவேண்டும் என்று எதிர்பார்க்கின்றபோது, அவற்றையெல்லாம் கடைப்பிடிக்காமல் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தங்களுக்கு வசதியான, சாதாரண காரியங்களை மிக நுணுக்கமாகக் கடைபிடிப்பதனால் என்ன பயன் விளைந்துவிடும்? இதைத்தான் இயேசு கிறிஸ்து பரிசேயர்களிடம் சுட்டிக்காட்டுகின்றார்.
பரிசேயர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவில்லை என கடிந்துகொள்ளும் இயேசு, தொடர்ந்து அவர்களுடைய வீண் ஆடம்பரங்களையும் போலி பகட்டுகளையும் கடிந்துகொள்கின்றார். “ஐயோ, பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே. ஐயோ உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் அடையாளம் தெரியாத கல்லறைகள் போல் இருக்கிறீர்கள்” என்று இயேசு அவர்களைக் கடிந்துகொள்கின்றார்.
மக்களுக்கு முன்பாக பக்திமான்களாக, நல்லவர்கள் போன்று வலம்வந்த இவர்கள்தான் ஏழைகளைக் கடுமையாக ஒடுக்கினார்கள்; கைம்பெண்களின் வீடுகளை அபகரித்துக் கொண்டார்கள். இப்படி முன்னுக்குப் பின் முரணான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். அதனாலேயே இயேசு அவர்களைக் கடிந்துகொள்கின்றார்.
நீதிக்கும் கடவுளின் அன்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்து உண்மையான வாழ்வு வாழவேண்டும் என்று சிந்திக்கின்ற நாம், மேலே சொல்லப்பட்ட காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உண்மையான வாழ்க்கை வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நம் இறைவன் பலிகளை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்ற கடவுள்.
ஆகவே, வாழ்வில் எது முக்கியமோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Comments are closed.