வெளிவேடக்காரர்களைக் குறித்து கவனம் தேவை – திருத்தந்தை

இறையருளைப் பெறுவதற்கு தங்கள் உள்ளங்களைத் திறக்க மறுக்கும் வெளிவேடக்காரர்களைக் குறித்து கவனமுடன் செயல்படுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கினார்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் காலை திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கியத் திருத்தந்தை, மக்களைக் குறித்து அக்கறை கொள்ளாமல், சட்டங்கள், விதிகள் ஆகியவற்றைக் குறித்து கவலை கொண்டு, இயேசுவிடம் குற்றம் காண்பதிலேயே குறியாக இருந்த சட்ட வல்லுனர்கள், சதுசேயர்கள் ஆகியோர் கடின உள்ளத்தோடு செயல்பட்டனர் என்பதை, தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
தன் இல்லத்தில் விருந்துண்ண பரிசேயர் ஒருவர் விடுத்த அழைப்பை ஏற்று அங்கு சென்ற இயேசு, கரங்களைக் கழுவாமல் உணவுண்ண அமர்ந்ததைக் கண்டு, அப்பரிசேயர் வியப்படைந்தபோது, அவருக்கு இயேசு கூறிய பதிலை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளிப்புறத்தை மட்டும் தூய்மை செய்துவிட்டு, உள்ளே கொள்ளையும், தீமையும் நிறைந்திருப்பதைக் குறித்து கவலைப்படாத பரிசேயர்களை, இயேசு கடிந்துகொண்டார் என்று கூறினார்.
மற்றொரு தருணத்தில், பரிசேயர்களை நோக்கி, ‘வெள்ளையடிக்கப்பட்டக் கல்லறைகள்’ என்று இயேசு கடிந்துகொண்டதையும், திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும், எப்பணியில் இருந்தாலும், இறுகிப்போன, கடினமான உள்ளத்தைக் கொண்டிராமல், ஆழ்மனதில் அழகுடையவர்களாக, செபத்திற்கும், வறியோருக்கு உதவுவதற்கும், கருணைப்பணிகளை மேற்கொள்வதற்கும் உள்மன சுதந்திரம் கொண்டவர்களாக செயல்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் சிறப்பாகக் கேட்டுக்கொண்டார்.
இறையருளுக்கு நம் உள்ளங்களைத் திறக்கவேண்டும் என்று, இச்செவ்வாய் காலை, திருப்பலியில் கூறிய கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

Comments are closed.