மறையுரைச் சிந்தனை (அக்டோபர் 16)

உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்”

முன்பொரு காலத்தில் ஷீராவஸ்தி என்ற ஊரில் பஞ்சம் தலை விரித்தாடியது. உண்ண உணவின்றி மக்கள் வாடினர். அந்த ஊரில் பெரும் செல்வந்தர்கள் இருந்தும் உணவின்றி வாடும் ஏழை மக்களுக்கு உதவ முன்வரவில்லை. அதற்குக் காரணம் பஞ்ச காலத்தில் அனைத்தையும் தானம் செய்துவிட்டால், இறுதியில் நாம் பஞ்சத்தில் சிக்கித் தவிக்க நேரிடுமோ என்ற பயமும் சுயநலமும்தான்.

இத்தகைய நிலையைக் கண்ணுற்ற அவ்வூரில் இருந்த துறவி, தன் முன்னே கூடியிருந்த பல செல்வந்தர்களைப் பார்த்து, “கனவான்களே! பஞ்சத்தினால் ஏழை எளிய மக்கள் பெரும் துன்பத்திற்குள்ளாகி இருக்கின்றனர். அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உங்களில் யாருக்குமே கிடையாதா?” என்று கேட்டார். அவர் பேசியதைக் கேட்ட செல்வந்தர்கள் அனைவரும் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தனர்.

துறவி மீண்டும், “ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? உங்களில் ஒருவருக்குக்கூட பிறருக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் கிடையாதா? என்று சற்று உரத்த குரலில் கேட்டார். அப்போது அந்தக் கூட்டத்திலிருந்து ஒரு சிறுமி வெளிப்பட்டு, “ஏன் இல்லை! இதோ நான் இருக்கிறேன் சுவாமி!” என்றாள். சிறுமி இவ்வாறு சொன்னதைக் கேட்ட துறவி உட்பட அங்கு கூடியிருந்த அனைவரும் அந்தச் சிறுமியை வியப்போடு பார்த்தனர்.

பின்னர் துறவி அந்த சிறுமியிடம், “ குழந்தாய்! அருகில் வா! உன்னால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார். அதற்கு அந்த சிறுமி, “இவ்வூர் மக்களுக்கு என்னால் உதவ முடியும்” என்று ஒளிநிறைந்த கண்களோடு பேசினாள். “அதெப்படி முடியும்?” என்று துறவி கேட்டதற்கு அவள், “என் தந்தை பெரிய கோடிஸ்வரர். ஆனாலும் யாருக்கும் உதவ மாட்டார். நான் வீடுவீடாகச் சென்று பிச்சையெடுத்து இவ்வூர் மக்களின் பசியைப் போக்குகிறேன். பிச்சை போடும் தர்மவான்கள் இவ்வூரில் உண்டு” என்றாள். அவளது பேச்சையும் தர்ம சிந்தனையுள்ள உள்ளத்தையும் கண்டு அப்படியே மெய்சிலிர்த்துப் போனார் துறவி.

இதற்குப் பின்பு அந்த சிறுமி தான் சொன்னபடியே வீடுவீடாகச் சென்று பிச்சை எடுத்தாள். ஒரு கோடிஸ்வர வீட்டுச் சிறுமி வீடுவிடாகச் சென்று பிச்சை எடுக்கிறாளே என்ற செய்தி, அத்தனை செல்வந்தர்களின் உள்ளத்தையும் தொட்டது. அவர்கள் உணவுகளையும் தானியங்களையும் அவ்வூரில் இருந்த ஏழை மக்களுக்கு வாரி வாரி வழங்கினர். இதனால் விரைவிலேயே அந்த ஊரில் பஞ்சம் நீங்கியது. அதற்காகப் பாடுபட்ட அச்சிறுமி மிகவும் போற்றப்பட்டாள்.

பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும், பிச்சையெடுத்தாவது அவர்களுடைய பசியைப் போக்க ஏதாவது கொடுக்கவேண்டும் என்று முன்வந்த அந்த சிறுமி உண்மையில் நம்முடைய பாராட்டுக்கு உரியவர்தான்.

உண்மையான வழிபாடு என்பது வெளிப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதும் சாத்திர சம்பிரதாயங்களை மிக நுணுக்கமாகக் கடைப்பிடிப்பதும் மட்டும் இல்லை. அது நம்முடைய உள்ளத்தை தூய்மையாகவும் இரக்கச் சிந்தனையோடு வைத்துக்கொள்வதும் அதன்மூலமாக ஏழை எளியவருக்கு நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொடுப்பதும் ஆகும்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து, பரிசேயர் ஒருவர் தம்முடைய வீட்டில் உணவருந்த வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் அவருடைய வீட்டிற்கு உணவருந்தச் செல்கின்றார். அவ்வாறு அவர் உணவருந்துவதற்கு முன்பாக கைகளைக் கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்புறுகிறார். அப்போது இயேசு அவரிடம், “பரிசேயரே! நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூயமையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன. அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா! உட்புறத்தில் உள்ளவற்றை தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்” என்கின்றார்.

இயேசுவை விருந்துக்கு அழைத்த பரிசேயரும் சரி, இன்ன பிற பரிசேயர்களும் சரி, வெளிப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க எவ்வளவோ முற்பட்டார்கள். ஆனால் உள்ளத்தையோ அவ்வளவு தூய்மையாக வைத்திருக்கவில்லை, இரக்கமே உருவாக இருக்கக்கூடிய இதயத்திலிருந்து வெளிப்படக்கூடிய கருணையினால் யாருக்கும் எதையும் கொடுக்க முன்வரவில்லை. அதனால்தான் இயேசு, “உட்புறத்தில் உள்ளவற்றையும் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்” என்கின்றார்.

நாம் நம்முடைய உள்ளத்திலிருந்து வெளிப்படுகின்ற இரக்கம், அன்பு, கருணை மிகுதியினால் இல்லாதவர்களுக்கு நம்மிடம் இருப்பதைக் கொடுக்க முன்வருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். யோபு தன்னுடைய நிலத்தில் விளைந்தவற்றை முதலில் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டதுத்தான் தான் உண்டதாக விவிலியம் சான்று பகர்கின்றது (யோபு 31:7).

ஆகவே, நாம் நம்முடைய இதயத்திலிருந்து வெளிப்படுகின்ற இரக்க மிகுதியினால் எல்லாருக்கும் அதிலும் குறிப்பாக ஏழைக்கு வாரி வாரிக் கொடுப்போம். வழிபாடு என்பது வெளிப்புற அடையாளங்களில் மட்டும் அடங்கியிருக்க வில்லை, அது உள்ளத் தூய்மையிலும் உதவுவதிலும் அடங்கியிருக்கின்றது என்பதை உணர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்

Comments are closed.