அனைவரும் புனிதராக அழைப்புப் பெற்றுள்ளோம்

போலந்து நாட்டின் அரசுத் தலைவர் Andrzej Duda அவர்கள், அக்டோபர் 15, இத்திங்கள் காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
இச்சந்திப்பின்போதும், பின் அரசுத்தலைவர் Duda அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின், திருப்பீட வெளியுறவுத்தறைச்செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகியோருடன் மேற்கொண்ட உரையாடல்களின்போதும், புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 1978ம் ஆண்டு, திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டதன் 40வது ஆண்டு கொண்டாட்டங்கள், ஐரோப்பிய ஒன்றிப்புக்கு போலந்தின் பங்களிப்பு, போலந்துக்கும் திருப்பீடத்துக்கும் இடையே நிலவி வரும் நல் உறவுகள், போலந்தில் திரு அவை ஆற்றி வரும் பணிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், திருத்தந்தை இஞ்ஞாயிறன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ‘இந்த உலகிற்கு புனிதர்கள் தேவைப்படுகிறார்கள். எவ்வித விதிவிலக்குமின்றி நாம் அனைவரும் புனிதத்துவத்திற்கு அழைப்புப் பெற்றுள்ளோம். நாம் அதற்கு அஞ்சுவதில்லை’ என எழுதியுள்ளார்.
மேலும், திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் புனிதர் பட்ட நிகழ்வுக்கு முந்தைய நாளான சனிக்கிழமையன்று மாலை, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் இருப்பிடம் சென்று, அவரைச் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
1978ம் ஆண்டு இறையடி சேர்ந்த திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், தன் பணிக் காலத்தின் இறுதி முறையாக, 1977ம் ஆண்டு, ஜூன் 27ம் தேதி நியமனம் செய்த கர்தினால்களில் ஒருவர், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எனப்படும், கர்தினால் ஜோசப் இராட்சிங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.