அஞ்சாதீர்கள், இறைவனின் அருளை நீங்கள் பெற்றுள்ளீர்கள்

மரியா, அஞ்ச வேண்டாம். கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்’ என்ற தலைப்புடன், உலக இளையோர் கொண்டாட்டங்களுக்கு தயாரிக்கும் விதமாக மடகாஸ்கர் நாட்டில் இடம்பெற்றுவரும் இளையோர் மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்று வானதூதர் மரியாவை நோக்கிக் கூறிய வார்த்தைகளை, இன்று, இறைவன் நம் ஒவ்வொருவரையும் நோக்கிக் கூறுகிறார் என, மடகாஸ்கர் நாடு முழுவதுமிருந்து அந்நாட்டின் Mahajanga எனுமிடத்தில் கூடியிருக்கும் இளையோரை நோக்கிக் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று அன்னையை நோக்கி அருளை வழங்கிய இறைவன், இன்று இளையோரை அன்புடனும், மதிப்புடனும், பாசமுடனும் உற்று நோக்கிகுகிறார் என தன் செய்தியில் கூறியுள்ளார்.
நம் அச்சங்களையும் பலவீனங்களையும் அறிந்துள்ள இறைவனிடம், அன்னை மரியாவைப் போல் நம்மை முற்றிலுமாக கையளிப்போம் என்ற அழைப்பையும் மடகாஸ்கர் இளையோரிடம் விடுத்துள்ளார் திருத்தந்தை.
கடவுளின் குரலுக்கு செவிமடுத்து தராள மனதுடன் பதிலுரையுங்கள், தனியாக உணராமல், திருஅவை எனும் குடும்பத்தின் அங்கமாக எப்போதும் உணருங்கள், இயேசு நம் ஒவ்வொருவரையும் அன்புகூர்கிறார் என்ற செய்தியை அறிவியுங்கள், உங்களின் எதிர்காலம், மற்றும், உங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக அயராமல் உழையுங்கள், ஆகிய விண்ணப்பங்களுடன், தன் செய்தியை நிறைவுச் செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.