அக்டோபர் 15 : நற்செய்தி வாசகம்
யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32
அக்காலத்தில் மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: “இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர்.
இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்.
தீர்ப்புநாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர்.
ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா! தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவை விடப் பெரியவர் அல்லவா!”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை :
அவநம்பிக்கையோ கொல்லும்; நம்பிக்கைதான் வெல்லும்!
ஹங்கேரி நாட்டைச் சார்ந்த கரோலி டாகாக்ஸ் இலக்கைக் குறிபார்த்து, அநாயாசமாகச் சுட்டு வீழ்த்துவதில் கில்லி. அவர் ஹங்கேரி ராணுவத்தில் சேர்ந்தபோது, அவருடைய துப்பாக்கி சுடும் அசாத்தியத் திறமையை அந்தப் படைப்பிரிவே வியந்து பார்த்தது. ராணுவ முகாமில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடக்கும். உடனிருக்கும் வீரர்கள் எல்லாம் நிறுத்தி, நிதானமாக இலக்கைக் குறிபார்த்துக்கொண்டிருக்க, டாகாக்ஸ் மிகச் சரியாக இலக்கைத் தாக்கிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்.
“திறமைக்கு மரியாதை” உரிய நேரத்தில், உரியவருக்கு எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைப்பதில்லை. அது டாகாக்ஸுக்கும் நடந்தது. 1936 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடக்கவிருந்தது. `ஹங்கேரியின் துப்பாக்கி சுடும் குழுவில் டாகாக்ஸுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும்; அவர் ஒலிம்பிக்கில் ஹங்கேரிக்குப் பதக்கம் வாங்கித் தருவார்’ என அவரின் சக வீரர்களும் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அந்தக் குழுவின் பெயர்ப் பட்டியலில்கூட டாகாக்ஸின் பெயர் இல்லை. `ஒரு சாதாரண சார்ஜென்ட்டுக்கு, ராணுவத்திலிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதி கிடையாது; உயர் அதிகாரிகள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்’ என ராணுவத் தரப்பில் காரணம் சொல்லப்பட்டது. இதற்காக டாகாக்ஸ் கலங்கவில்லை. இறைவன்மீதும் தன்மீதும் நம்பிக்கை வைத்து வாய்ப்பு வரட்டும் எனக் காத்திருந்தார். தன் துப்பாக்கிப் பயிற்சியை இடைவிடாமல் தொடர்ந்துகொண்டே இருந்தார்.
இரண்டே ஆண்டுகளில் ராணுவத்தில் அந்த விதிமுறை தளர்த்தப்பட்டது. ‘இனி, டாகாக்ஸுக்கு எந்தத் தடையும் இல்லை. எப்படியும் 1940-ம் ஆண்டு டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வார்; ஹங்கேரிக்குத் தங்கம் கிடைக்கும்’ என்ற எதிர்பார்ப்பு ஹங்கேரி தேசம் முழுக்க எகிறிக்கொண்டிருந்த நேரம் அது. அப்போது ராணுவப் பயிற்சியின்போது தவறுதலாக விழுந்த கையெறி குண்டு ஒன்று, மிகச் சரியாக டாகாக்ஸின் வலது கையில் விழுந்தது. அந்த விபத்தில் அவருடைய துப்பாக்கி சுடும் வலது கை மிக மோசமாக சேதமடைந்தது. “அவ்வளவுதான்! டாகாக்ஸின் ஆட்டம் முடிந்தது” என்று எல்லோரும் முடிவெடுத்து, அவரை மறந்துவிட்டு, அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள். ஆனால், டாகாக்ஸ் தன் லட்சியத்தையோ, இறைவன்மீதும் தன்மீதும் கொண்ட நம்பிக்கையையோ கைவிடத் தயாராக இல்லை. அவருக்கு கை போனதை ஒரு குறையாக எடுத்துக்கொள்ளவில்லை. யாருக்கும் தெரியாமல் தன் இடது கையைக்கொண்டு துப்பாக்கிச் சுடப் பயிற்சியெடுத்தார். இடைவிடாத பயிற்சி. அதற்குப் பலனும் கிடைத்தது.
1939 ஆம் ஆண்டு, இலையுதிர்காலம். ஹங்கேரியில் தேசிய துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது. அதில் டாகாக்ஸ் கலந்துகொள்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கலந்துகொண்டார். இடது கையாலேயே சுட்டு, வெற்றிக்கோப்பையைக் கைப்பற்றினார். ஒட்டுமொத்த ஹங்கேரியும் அவரைத் திரும்பிப் பார்த்தது. அவர் மீதான எதிர்பார்ப்பு ஹங்கேரி மக்களுக்குக் கூடிக்கொண்டே போனது. டாகாக்ஸ் அவர் பாட்டுக்குத் தன் பயிற்சியில் மூழ்கியிருந்தார். 1940 ஆம் ஆண்டிலும் 1944 ஆம் ஆண்டிலும் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள், இரண்டாம் உலகப் போர் காரணமாக ரத்து செய்யப்பட்டன. 1948 ஆம் ஆண்டு, தனது 38-வது வயதில் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டி. அதில் கலந்துகொண்டார் டாகாக்ஸ்.
அப்போது துப்பாக்கி சுடுவதில், முடிசூடா மன்னனாக உலக சாம்பியனாக இருந்தவர் அர்ஜன்டினாவைச் சேர்ந்த வேலியென்டே, டாகாக்ஸ் போட்டிக்கு வந்திருப்பதை ஆச்சர்யத்தோடு பார்த்தார். அவரருகே போனார். டாகாக்ஸுக்கு நடந்த விபத்தைக் கேள்விப்பட்டதாகவும், இப்போது எப்படி இருக்கிறார் என்றும் விசாரித்தார். பிறகு, விளையாட்டாக “சரி என்ன இந்தப் பக்கம்?’ என்று கேட்டார். “அது ஒண்ணுமில்லை. துப்பாக்கி சுடுறதுல உலக சாதனை செய்யணும்னு ஆசை. கத்துக்கறதுக்காக இங்கே வந்திருக்கேன்’ என்றார் டாகாக்ஸ்.
அன்றைக்கு 25 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் டாகாக்ஸ் நிகழ்த்தியது உலக சாதனை. ஆம், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார் டாகாக்ஸ். போட்டி முடிந்ததும் வேலியென்டே, டாகாக்ஸின் அருகே வந்தார். “நீங்க துப்பாக்கி சுட நல்லா கத்துக்கிட்டீங்க. வாழ்த்துகள்!” என்று சொல்லி விடைபெற்றுப் போனார். அதோடு டாகாக்ஸின் சாதனை முடிந்துவிடவில்லை. 1952, ஃபின்லாந்தின் ஹெல்சின்கி (Helsinki)-யில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் டாகாக்ஸ் கலந்துகொண்டார். அதே 25 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டி, அதிலும் டாகாக்ஸுக்கு தங்கக் கோப்பை. போட்டி முடிந்ததும் வேலியென்டே வந்தார். “வாழ்த்துகள் டாகாக்ஸ்! அளவுக்கு அதிகமாகவே துப்பாக்கி சுட நீங்கள் கற்றுக்கொண்டுவிட்டீர்கள். இது, நீங்கள் எனக்குத் துப்பாக்கி சுடக் கற்றுக்கொடுக்கவேண்டிய நேரம்” என்றார்.
“கரோலி டாகாக்ஸ் அவ்வளவுதான், அவருடைய ஆட்டம் முடிந்துபோனது” என்று சொல்லிக்கொண்டிருக்கும்பொது கரோலி டாகாக்ஸ் இறைவனையும் தன்னையும் நம்பினார். அதனால் யாருமே எதிர்பாராத வண்ணம் ஒலிம்பிக் போட்டியில் இரண்டுமுறை தங்கம் வென்றார். அவநம்பிக்கைதான் கொல்லும். ஆனால் நம்பிக்கையோ என்றைக்கும் வெல்லும் என்பதற்கு கரோலி டாகாக்ஸின் வாழ்க்கை ஒரு சான்று.
நற்செய்தி வாசகத்தில் யூதர்கள் இயேசுவின்மீது நம்பிக்கை வைக்காமல் அடையாளம் கேட்கின்றார்கள். அதனால் அவர்கள் “தீய தலைமுறையினரே” என்ற இயேசுவின் கடுஞ்சொல்லுக்கு உள்ளாகிறார்கள். நாம் யூதர்களைப் போன்று இயேசுவின்மீது நம்பிக்கை வைக்காமல் அவருடைய கடுஞ்சொல்லுக்கு உள்ளாகப் போகின்றோமா? அல்லது அவர்மீதும் நம்மீதும் நம்பிக்கை வைத்து நூற்றுவத் தலைவனைப் போன்று, கரோலி டாகாக்ஸிசைப் போன்று இயேசுவின் பாராட்டையும் ஆசிரையும் பெறப் போகிறோமா?. சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவன் மீதும் நம்மீதும் நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
– மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Comments are closed.