திருஅவையின் புனிதர்கள் வரிசையில் இணையும் 7 அருளாளர்கள்

அருளாளர்கள், திருத்தந்தை 6ம் பவுல், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ ஆகியோர் உட்பட, ஏழு அருளாளர்கள், அக்டோபர் 14, இஞ்ஞாயிறன்று காலை, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் திருப்பலியில் புனிதர்களாக அறிவிக்கப்பட உள்ளனர்.
1963ம் ஆண்டு முதல், 1978ம் ஆண்டு வரை, கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்திய அருளாளரான திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், மனித உயிருக்கு வழங்கப்படவேண்டிய மாண்பை, தன் உரைகளிலும், மடல்களிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர்.
இவரோடு இணைந்து, புனிதராக அறிவிக்கப்படவிருக்கும் சான் சால்வதோர் பேராயர், அருளாளர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், வறியோரின் சார்பாக குரல் எழுப்பி வந்தவர். இவர் மேற்கொண்ட சமூக நீதி போராட்டத்தின் காரணமாக, திருப்பலி நிகழ்த்திய வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டவர்.
1817ம் ஆண்டு, இத்தாலியின் பெஸ்காரா எனுமிடத்தில் பிறந்து, தன் பெற்றோரையும், உறவுகளையும் படிப்படியாக இழந்து, 9வது வயதிலேயே ஆனாதையானவர், நுன்சியோ சுல்பிரிசியோ. இளவயது முதல் நோயுற்ற இவர், தன் 19வது வயதில் இறைவனடி சேரும்வரை, நோயுற்றோருக்கு பணியாற்றிவந்தவர். இவரை, 1963ம் ஆண்டு, அருளாளராக அறிவித்த திருத்தந்தை 6ம் பவுல் அவர்களோடு இணைந்து, இஞ்ஞாயிறன்று இவரும் புனிதராக அறிவிக்கப்படுகிறார்.
மேலும், திரு இருதய பக்தி சபையை நிறுவிய, இத்தாலிய அருள்பணியாளர், பிரான்செஸ்க்கோ ஸ்பிநெல்லி, இத்தாலியைச் சேர்ந்த மறைமாவட்ட அருள்பணியாளர் வின்சென்சோ ரொமானோ, இயேசுவின் ஏழைப் பணியாளர் சபையை உருவாக்கிய ஜெர்மன் நாட்டு அருள் சகோதரி, மரிய கத்தரீனா காஸ்பெர், மறைப்பணியாளர்கள் சபையொன்றை உருவாக்கிய ஸ்பெயின் நாட்டு அருள் சகோதரி நசாரியா இஞ்ஞாசியா ஆகிய நால்வர் உட்பட, ஏழு அருளாளர்கள், இஞ்ஞாயிறன்று புனிதர்களாக அறிவிக்கப்படுகின்றனர்.

Comments are closed.