அக்டோபர் 13 : நற்செய்தி வாசகம்

இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் அதிகம் பேறுபெற்றோர்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-28

அக்காலத்தில் இயேசு மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்று குரலெழுப்பிக் கூறினார்.

அவரோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரைச் சிந்தனை :

யார் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்?

முன்பொரு காலத்தில் அரசர் ஒருவர் இருந்தார். ஒருசமயம் அவர் நீண்ட நாள் பயணமாக பக்கத்துக்கு நாட்டிற்குச் சென்றார். அவர் அங்கு சென்ற நேரத்தில் சாலையெங்கும் ஒரே குப்பைக் கூலமாக கிடந்தது. ஆனால் யாரும் அதைக் கண்டுகொள்வதாகத் இல்லை. அவர்கள் பாட்டுக்கு அவர்கள் வழியில் போய்க்கொண்டிருந்தார்கள். இது அந்த அரசருக்கு வியப்பைத் தந்தது. பின்னர் அவர் அந்த நாட்டு அரசரின் அரண்மனைக்குச் சென்றார். அங்கிருந்த அரசர் இவரை இன்முகத்தோடு வரவேற்று, நல்லமுறையில் உபசரித்தார்.

உபசரிப்பின் ஊடே பேச்சுவாக்கில், வந்தவர் அங்கிருந்த அரசரிடம், “மேன்மைதங்கிய அரசரே! உங்களிடத்தில் நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்… நீங்கள் விரும்பினால் நான் அதைச் சொல்கிறேன்” என்றார். “ம்ம்ம், தயங்காமல் சொல்லுங்கள்” என்றார் உள்நாட்டு அரசர். “வேறொன்றுமில்லை. நான் என்னுடைய நாட்டிலிருந்து உங்களுடைய நாட்டிற்குள் வந்தபோது, எங்கு பார்த்தாலும் ஒரே குப்பைக் கூலமாக இருக்கக் கண்டேன். உங்களுடைய நாட்டில் யாரும் வீதிகளை, சாலைகளை சுத்தமாக வைத்திருக்க மாட்டார்களா?” என்று கேட்டார் வந்த அரசர். அதற்கு உள்ளாட்டு அரசர், “தெருக்களையும் சாலைகளையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று எத்தனை முறை இவர்களுக்குச் சொல்வது? யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்களே” என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார்.

இதற்குப் பிறகு இருவரும் தூங்கச் சென்றார்கள். மறுநாள் காலை உள்நாட்டு அரசர் தூங்கி எழுந்து, வந்த அரசரைத் தேடித் பார்த்தபோது அவர் அங்கு இல்லை. உடனே அவர் தன்னுடைய படைவீரர்களை அனுப்பி, “அந்த அரசர் எங்கிருக்கிறார்?” என்று தேடித் பாருங்கள் என்று உத்தரவிட்டார். அவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அப்போது அவர்களுடைய கண்களை அவர்களாலேயே நம்ப முடியாத வண்ணம், அவர் தெருவில் கிடந்த குப்பைக் கூலங்களை எல்லாம் ஒன்றாகக் கூட்டி தீயிட்டு எரித்துக்கொண்டிருந்தார். இதைப் பார்த்துவிட்டு படைவீரர்கள், ஓடிப்போய் தங்களுடைய நாட்டு அரசரிடம் போய் சொன்னார்கள். அவரோ, ‘வந்தவர் நம்முடைய நாட்டில் இருக்கின்ற குப்பைகளைச் சுத்தம் செய்துகொண்டிருக்க, நாம் சுத்தம் செய்யாமல் இருந்தால் மக்களெல்லாம் என்ன நினைப்பார்கள்?’ என்று அவரும் தெருக்களில் கிடந்த குப்பையை ஒன்றாகக் கூட்டி, அவற்றைத் தீயிட்டு எரிக்கத் தொடங்கினார்.

தங்களுடைய அரசர் இவ்வாறு செய்வதைப் பார்த்த படைவீர்களும் அவரைப் போன்று குப்பை கூலங்களை அப்புறப்படுத்தத் தொடங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து நாட்டு மக்களும் தங்களுடைய வீடுகளுக்கு முன்பாக, தெருக்களில், சாலையோரங்களில் கிடந்த குப்பைகளைச் சுத்தம் செய்யத் தொடங்கியதும் நாடே சுத்தமானது.

‘சொல்லில் சிறந்த சொல் செயல்’ என்பார்கள். அந்த வகையில் வேறொரு நாட்டிலிருந்து வந்த அரசர் உள்நாட்டிலிருந்து வந்த அரசரைப் போன்று ‘நாட்டை சுத்தமாக வைத்திருங்கள்’ என்று சொல்லி கொண்டிருக்காமல், அவரே சுத்தம் செய்யத் தொடங்கியதால், அவரை பார்த்துவிட்டு எல்லாரும் சுத்தம் செய்யத் தொடங்கினார்கள். அதனால் நாடு சுத்தமானது.

ஒன்றைச் சொல்வதைவிடவும் அதை கடைப்பிடிப்பது இன்னும் சிறப்பானது. நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மக்கள் கூட்டத்திற்குப் போதித்துக் கொண்டிருக்கும்போது, கூட்டத்திலிருந்து ஒரு பெண்மணி, “உம்மைக் கருத்தாங்கி பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்கின்றார். அதற்கு இயேசு, “இறை இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைபிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்கின்றார்.

லூக்கா நற்செய்தியில் இடம்பெறுகின்ற இந்த நிகழ்வு, நமக்கு ஓர் உண்மையை மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது. அது என்னவென்றால், ஒருவருக்கு அவருடைய பிறப்பினால் அல்ல, அவருடைய செயல்களால், அவர் வாழ்வினால் மட்டும் பெருமை சேரும் என்பதாகும். ஏனென்றால் இந்த நிகழ்விற்கு முன்பாக பரிசேயர்கள் இயேசுவை தேவையற்ற விதத்தில் விமர்சித்தார்கள். யூத குலத்தில் பிறந்தாலே மிகப்பெரிய பேறு என்று நினைத்த அவர்கள், இயேசுவுக்கு எதிராக என்னவெல்லாமோ செய்தார்கள். அதனால்தான் இயேசு, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைபிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்கின்றார். அதாவது ஆபிராகாமின் வழிவந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு எப்படியும் வாழ்பவர்களையும் விடவும் எந்த குலத்தில் பிறந்தாலும் இறைவார்த்தையைக் கேட்டு நடப்பவர்கள் இன்னும் அதிகமாய் பேறுபெற்றவர்கள் என்கின்றார்.

நாம் நம்முடைய பிறப்பின் அடிப்படையில் பெருமை பாராட்டிக் கொண்டிருக்கின்றோமா? அல்லது இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கின்றவர்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இறைவார்த்தையைக் கேட்டு அதை கடைபிடிப்பவர்கள் ஆவோம், அதன்வழியாக இன்னும் அதிகமாகப் பேறுபெற்றவர்கள் ஆவோம். இறையருள் நிறைவாய் பெறுவோம்.

– மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Comments are closed.