அப்பரெசீதா அன்னை மரியாவின் திருநாளுக்கு வாழ்த்துக்கள்

ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான் செய்திகள்
அக்டோபர் 12, இவ்வெள்ளியன்று, பிரேசில் நாட்டில், அப்பரெசீதா (Aparecida) அன்னை மரியாவின் திருநாள் கொண்டாடப்படுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு மக்களுக்கு இஸ்பானிய மொழியில் ஒரு குறுஞ்செய்தியை, காணொளி வடிவில் அனுப்பியுள்ளார்.

அப்பரெசீதா அன்னை மரியா திருநாளுக்கு திருத்தந்தையின் வாழ்த்து

15வது உலக மாமன்றத்தில் பங்கேற்றுவரும் பிரேசில் நாட்டு ஆயர் வில்சோம் பாஸ்ஸோ (Vilsom Basso) அவர்கள், திருத்தந்தையின் செய்தியை, தன் செல்லிடப்பேசி வழியே பதிவு செய்து அனுப்பியுள்ளார்.
“அப்பரெசீதா அன்னை மரியாவின் திருநாளைக் கொண்டாடும் பிரேசில் மக்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். நதி நீரில் மிதந்துவந்த அன்னை மரியாவை, மீனவர்கள் கண்டுகொண்டதைப் போல, நாமும் நம் உள்ளம் என்ற நதியில் மிதந்து வரும் அன்னை மரியாவைக் கண்டுகொள்வோமாக” என்ற வாழ்த்துச் செய்தியை திருத்தந்தை அனுப்பியுள்ளார்.

டுவிட்டர் செய்தியில் சாத்தானைக் குறித்த எச்சரிக்கை

மேலும், படித்த, பகட்டான சாத்தானைக் குறித்து, இவ்வியாழன் மறையுரையில் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே எண்ணத்தை, தன் டுவிட்டர் செய்தியாகவும் வெளியிட்டுள்ளார்.
“நம்மை பாவத்தில் விழச்செய்யும் சாத்தானை அடையாளம் கண்டு, அதனால் நாம் வெட்கமடைவது மோசமா, அல்லது, மிக நாகரீகமாகத் தோன்றி, நமக்குள் புகுந்து, நம்மை உலகப் போக்கில் அமிழ்த்திவிடும் சாத்தானை அனுமதிப்பது மோசமா? எது உண்மையிலேயே மோசமானது?” என்ற கேள்வி வடிவில் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி இவ்வெள்ளியன்று வெளியானது.

Comments are closed.