அக்டோபர் 12 : நற்செய்தி வாசகம்

நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா!

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 15-26

அக்காலத்தில் மக்களுள் சிலர் இயேசுவைக் குறித்து, “பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றனர்.

வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்.

இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது: “தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும். சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்?

பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே. நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள். நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா!

வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக்கலங்களையும் பறித்துக் கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார். என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார். ஒருவரை விட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், `நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்’ எனச் சொல்லும்.

திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் காணும். மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரைச் சிந்தனை :

புறந்தள்ளப்படவேண்டிய விமர்சனங்கள்!

துருக்கி நாட்டில் பிறந்தவர் முல்லா நசுருதீன். வேடிக்கையாகக் கதைகள் சொல்லி மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யக்கூடியவர். அப்படிப்பட்டவரை அவர் குள்ளமாக இருக்கிறார் என்பதற்காக மக்களில் ஒருசிலர் ஏளனமாகவும் இளக்காரமாகவும் பார்த்தார்கள். மட்டுமல்லாமல் அவரிடத்தில் அவ்வப்போது வந்து இடக்கு முடக்கான கேள்விகளையும் கேட்டார்கள். அப்போதெல்லாம் முல்லா நசுருதீன் தன்னுடைய சாதூர்யத்தால் அவர்களை வெற்றிகொண்டார்.

ஒரு சமயம் அவர் வேலை விசயமாக வெளியே கிளம்பிக் கொண்டிருக்கும்போது, ஒருவன் வேகவேகமாக அவரிடத்தில் வந்தான். “முல்லா அவர்களே! எனக்கொரு பிரச்சனை ஏற்பட்டிருக்கின்றது. அந்தப் பிரச்சனையை உங்களால்தான் தீர்த்து வைக்க முடியும்” என்றான். “என்ன பிரச்சனை? வேகமாகச் சொல்லுங்கள்” என்றார் முல்லா. “வேறொன்றுமில்லை, நேற்று இரவு நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது, பெரிய எலி ஒன்று என்னுடைய வாய்க்குள் நுழைந்துவிட்டது. அதை எப்படி வெளியே எடுக்கலாம் என்பது தொடர்பாகத்தான் உங்களிடத்தில் ஆலோசனை கேட்க வந்திருக்கிறேன்” என்றான்.

வந்தவன் தன்னிடத்தில் விதண்டாவதாம் செய்யத்தான் வந்திருக்கின்றான் என்பதை உணர்ந்த முல்லா அவனிடம், “வாய்க்குள் போன எலியைப் பிடிக்க நீங்கள் ஒரு பூனையைப் பிடித்து விழுங்கி விடுங்கள். பூனை எலியைப் பிடித்து கொன்றுவிடும்” என்றார். அவ்வளவுதான். முல்லாவைக் கேலி செய்ய வந்தவன் துண்டக் காணோம் துணியக் காணோம் என்று ஓடிவிட்டான்.

சில சமயங்களில் நம்மிடம் விதண்டாவாதம் செய்பவர்களையும் தேவையில்லாமல் நம்மை விமர்சிப்பவர்களையும் விவேகமாகவும் சாதூர்யமாகவும் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டுகின்றார். அதைப் பார்த்த மக்களெல்லாம் வியந்து நிற்கின்றார்கள். ஆனால், பரிசேயக் கூட்டமோ, “பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார்” என்று இயேசுவை விமர்சிகின்றது. தன்னை இவ்வாறு விமர்சித்த பரிசேயக் கூட்டத்திற்கு இயேசு என்ன பதில் சொன்னார், இயேசு யாரைக் கொண்டு பேயை ஓட்டினார் என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு பேச்சிழந்த மனிதரிடமிருந்து பேயை ஓட்டியதும், பேச இயலாத அந்த மனிதர் பேசத் தொடங்குகின்றார். இதனால் மக்களெல்லாம் இயேசுவுக்குப் பின்னால் செல்கின்றார்கள். இதைப் பார்த்து பொறாமை கொள்ளும் பரிசேயர்கள், இயேசுவை எப்படி வீழ்த்தலாம் என்று சூழ்ச்சி செய்து, அவர் ‘பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகின்றார்’ என்று விமர்சிக்கின்றார்கள். உடனே இயேசு தன்னை இவ்வாறு விமர்சித்தவர்களைப் பார்த்து மூன்றுவிதமான பதில்களைச் சொல்லி அவர்களை வாயடைக்கின்றார்.

இயேசு பரிசேயர்களுக்குச் சொல்லும் முதல் பதில், ‘தனக்கு எதிராகப் பிளவுபடும் எந்த அரசும் பாழாய்போய்விடும்’ என்பதாகும். ஓர் அரசாங்கம் எப்போதும் தான் வளரவேண்டும் என்றுதான் நினைவுகுமே ஒழிய, வீழவேண்டும் என்று நினைக்காது. அந்த வகையில் சாத்தான் ஒருவரைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அதன்மூலம் அவரை வெற்றிகொள்ள நினைக்குமே ஒழிய, அவரைவிட்டு வெளியேறி வீழவேண்டும் என்று நினைக்காது. இயேசு சாத்தானின் தந்திரங்களை முறியடிப்படிப்பவர், அப்படியிருக்கும்போது பரிசேயர்கள் சொல்வதுபோன்று அவர் எப்படி பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டமுடியும்?. இது சாத்தானுக்கு எதிராகத் சாத்தானே செயல்படுவது போன்று இருக்காதா? என்பதுதான் இயேசு அவர்களுக்கு முன்பாக வைக்கின்ற பதிலாக இருக்கின்றது.

இயேசு பரிசேயர்களுக்கு கொடுக்கக்கூடிய இரண்டாவது பதில், “நான் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஒட்டுகிறேன் என்றால், உங்களைச் சார்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார்கள்?” என்பதாகும். பரிசேயக் கூட்டத்தைச் சார்ந்த ஒருசிலர் மந்திர சக்தியால் பேய்களை ஒட்டிவந்தார்கள். அவர்களை எல்லாம் பரிசேயர்கள் ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் இயேசு பேய்களை ஓட்டியபோது மட்டும் அவர்கள் அதைப் பெரிய கொலைக் குற்றம்போல் பார்ப்பதை நினைத்துத்தான் இயேசு அவர்களுக்கு தக்க பதில் தருகின்றார்.

Comments are closed.