ஜெபமாலை மாதா வணக்கமாதம். அக்டோபர் 12.

கன்னிமரி எலிசபெத்தம்மாளை வினவுகிறார்.

வயது முதிர்ந்த உறவினளின் இரகசியத்தை அறிந்த உடனே அவளைக் காண வேண்டும் என்று மரியின் மனம் தவிக்கின்றது . ” அந்நாளில் மரி எழுந்து மலைப் பிரதேசத்தில் உள்ள யூதாவின் நகரை நோக்கி விரைந்து சென்றார் ” லூக் 1:39 -59.

மரியிடம் இருந்து மனுரூபம் எடுத்து ,அவரது இருண்ட உதரத்தில் வல்லமையற்றவராகப் பலவீனராகப் படுத்த நாதர் , அவர் பிரியம் போல் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல இணங்குகிறார். குழந்தையின் கைப்பொம்மை போல . ஈடேற்ற அருள் வழியில் முதல் அடி எடுத்து வைத்தல் இப்பிரயாணம் . மனுமக்களை ஈடேற்றக் கடவுள் செய்ததென்ன ? மக்களின் கரங்களில் , அதிகாரத்தில் , தம்மைக் கையளித்து விடுகிறார் . மாமரி இந்தப் பதவிக்கு ஏற்றவர் . இந்நாள் முதல் அவர் எங்கு சென்றாலும் ஏசுவைக் கொண்டுவருவார் . திருச்சபைச் சரிதையும் இதை விளக்குகிறது. எங்காவது தேவதாய்க்கு விஷேஷ வணக்கம் வளருமேயாகில் , அது தேவ நற்கருணைப்பக்தியில் மலர்ந்து பழுக்கும் . லூர்துநகர் காட்சியிலும் , அற்புத நீரூற்றிலும் தோன்றியது லூர்துமாதாவின் பக்தி . இப்போது தேவ நற்கருணைச் சுற்றுப் பிரகாரத்தில் தானே பெரும் புதுமைகள் பூக்கின்றன .

பெருந்தன்மையும் தாராள சிந்தையும் உள்ள அன்னையின் அன்பை இங்கு காணலாம் . மலைக்காடு- பாதையோ கஷ்டம் – ஐந்து நாள் பிரயாணமா – அதற்கும் மேலா – உண்ண , உறைய எவ்வளவு சிரமம் ! குளிரும் , பனியும், வெயிலும் இலேசா? அன்பு சிரமம் அறியாது . உறவினளின் மகிழ்ச்சியை இரசித்தவளாய் புள்ளி மானைப் போல் துள்ளி ஓடுகிறார் இக்குழந்தை . (பதினான்கு வயதானாலும் குழந்தை தானே ) இந்த இளமங்கை விருந்தாடும் நோக்கோடு போகவில்லை . வயது முதிர்ந்த எலிசபெத்துக்கு பனி புரியும் கருத்தோடு செல்கிறார். வழியில் வயிற்றிலிருக்கும் தெய்வக் குழந்தை என்ன ஞான மகிழ்ச்சித் தேனைத் தாயின் உள்ளத்தில் பொழிந்திருக்க வேண்டும் ! தாய்க்குத் தம் மகனின் காட்சி , சிந்தை , செபம் , இது அன்னையின் அலுவல் . நம் பிரயாணங்களில் இயேசுவைத் தங்க வைத்து நாம் மட்டும் போகலாகாது . இயேசுவின் சிந்தையையாவது தாங்கிச் செல்ல வேண்டும் .

Comments are closed.