இயேசு வரலாறு – பகிருங்கள் சகோதரர்களே

இயேசுவின் பிறப்பு

ரோமப் பேரரசிற்கு உட்பட்ட கலிலேயா நகரில் இருந்தது நாசரேத்து என்னும் ஓர் கிராமம். மலைகளின் பின்னால் மறைக்கப்பட்டிருந்த நாசரேத் நகரம் வணிகர்கள் கடந்து செல்லும் ஒரு நகரமாக இருந்ததால் ஒட்டகங்களும், வியாபாரிகளின் சத்தமும் அந்த நகரத்தை எப்போதுமே சூழ்ந்திருந்தன.

ரோம உளவாளிகள் வணிகர்களின் வடிவில் நாசரேத் நகர் இருக்கும் கலிலேயா, எருசலேம் நகரை உள்ளடக்கிய யூதேயா போன்ற ரோமப் பேரரசுக்கு உட்பட்ட நகரங்களில் உலவிக் கொண்டிருப்பது வழக்கம். அந்த பயத்தின் காரணமாக ரோமப் பேரரசருக்கு எதிராக எந்தக் குரல்களும் அங்கே எழுவதில்லை. மக்கள் தங்கள் வேலை உண்டு தாங்கள் உண்டு என்னும் மனநிலையில் தங்களுடைய கடமைகளை ஆற்றிக் கொண்டிருந்தார்கள். கி.மு 1009ல் தாவீது மன்னன், பின் கி.மு 971 இல் அவருடைய மகனான ஞானத்தின் இருப்பிடம் என்று புகழப்படும் சாலமோன் மன்னன் போன்றவர்கள் கொடிகட்டிப் பறந்த சுதந்திர மண் இப்போது ரோமப் பேரரசின் கீழ் வந்து அகஸ்து சீசர் என்னும் மன்னனுக்கு கப்பம் கட்டிக் கொண்டிருந்தது. கடவுளின் வழியை விட்டு மக்கள் விலகிப் போகும் போதெல்லாம் அடிமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்னும் உறுதியான எண்ணம் யூத மக்களிடம் இருந்தது.

கலிலேயா கிராமம் உழைப்பாளிகள் நிறைந்த கிராமம். அந்த கிராமத்தில் தச்சு வேலை செய்து கொண்டிருந்தான் ஒரு இளைஞன். மரப்புழுதி சூழ்ந்திருந்த அவன் கடையில் மர சாமான்கள் புதிது புதிதாக பிறந்து கொண்டிருந்தன. உழைப்புக்குச் சற்றும் சலிக்காத அவன் தன்னுடைய வேலையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான். தன் வாழ்க்கைக்காக தானே உழைத்துப் பணம் சம்பாதிக்க வேண்டிய நிலையில் இருந்தான் அவன். அவனுடைய பெயர் யோசேப்பு. யூத ஏட்டுச் சுருள்களை வாசிப்பதும், தன்னுடைய கடமையைச் செய்வதுமாக சென்று கொண்டிருந்தது அவனுடைய வாழ்க்கை. எதற்கும் அதிர்ந்து பேசாத, எதிர்ப்பைக் கூட மென்மையாகக் காட்டும் மனம் படைத்தவனாக இருந்தான் யோசேப்பு.

அவருக்கு திருமண ஒப்பந்தம் முடிந்திருந்தது. மணப்பெண்ணின் பெயர் மரியா. அழகிலும், அமைதியிலும் மரியா தனித்துவத்துடன் இருந்தாள். தனக்கு மனைவியாக ஒரு அழகான, கலாச்சார மீறல் இல்லாத ஒரு பெண் அமையப்போவதை நினைத்து யோசேப்பு மிகவும் மகிழ்ந்தார். தன்னுடைய உழைப்பை அதிகமாகச் செலுத்தி தன் மணவாழ்க்கைக்காக அதிகம் பொருளீட்டத் துவங்கினாள். மரியாவும், யோசேப்பைக் கணவனாக அடைவதில் பெருமையடைந்தாள். தாவீது மன்னனின் பரம்பரையில் வந்த யோசேப்பின் பூர்வீகமும், அவருடைய கடவுள் நம்பிக்கையும், கடினமாக உழைக்கும் போக்கும், மென்மையான மனப் பாங்கும் மரியாவின் உள்ளத்தில் யோசேப்பைக் குறித்த கனவுகளை கிளறிவிட்டிருந்தன.

அந்த ஆனந்தமான சூழலில் ஒரு சூறாவளியாக வந்தது தேவதூதன் ஒருவரின் காட்சி. மரியா தன்னுடைய வீட்டில் அமர்ந்திருக்கையில் திடீரென அவளுக்கு முன்னால் வந்து நின்றான் அவன். ஒளிவெள்ளம் தன்னைச் சூழ ஒரு தேவதூதன் தன் முன்னால் வந்து நிற்பதைப் பார்த்த மரியா திகைத்தாள். வந்திருப்பது தேவதூதன் என்பதை அறிந்ததும் அவளுடைய உள்ளம் பதை பதைத்தது. ஏதேனும் தவறு செய்துவிட்டோமோ என்று அஞ்சி நடுங்கினாள். படித்தும் கேட்டும் மட்டுமே பழக்கமான தேவதூதன் ஒருவனை நேரில் பார்ப்பது எவ்வளவு திகிலூட்டக் கூடியது என்பதை மரியா அன்று உணர்ந்தாள்.

‘அருள் நிறைத்தவளே வாழ்க’ தூதன் சொன்னான். மரியா குழம்பினாள். நான் அருள் நிறைந்தவளா ? சாதாரணமான குடும்பத்தில் உள்ளவள் நான். நான் எப்படி அருள் நிறைந்தவளாக முடியும் ? மரியாவின் மனதில் பயம் கேள்விகளை விதைத்தது.

‘கடவுள் உம்முடன் இருக்கிறார். நீர் பெண்களுக்குள் மகிமையானவர்’ தூதன் மீண்டும் சொல்ல மரியா குழப்பத்தின் உச்சிக்குத் தாவினாள். என்ன சொல்கிறார் தூதர். நான் பெண்களுக்குள் பாக்கியம் செய்தவளா ? அப்படி என்ன பாக்கியம் செய்தேன் ? ஒரு வேளை யோசேப்பைத் திருமணம் செய்யப்போவதைத் தான் குறிப்பிடுகிறாரோ ? மரியாவின் மனதில் கேள்விகள் நிற்காமல் வழிந்தன.

தேவதூதன் அவளை ஆறுதல் படுத்தினான். ‘மரியே அஞ்சவேண்டாம். நீர் கடவுளின் அருளைப் பெற்றவர். நான் ஒரு ஆனந்தச் செய்தியை சொல்லத் தான் வந்திருக்கிறேன். நீர் ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்று பெயரிடுங்கள். அவர் முடிவில்லாத ஒரு ஆட்சியைத் தருவார். மன்னர் தாவீதின் அரியணை இனிமேல் அவருக்குச் சொந்தமாகும்’ தேவதூதன் சொல்ல மரியா வியந்தாள்.

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே. இப்போதுதான் மண ஒப்பந்தமாகியிருக்கிறேன். அதற்குள் எப்படி எனக்குக் குழந்தை பிறக்கும் ? மரியாள் கேட்டாள்.

நீர் கருத்தாங்குவது கடவுளின் ஆவியால் தான். தூய ஆவி உம் மேல் இறங்கும், நீர் கருத்தரிப்பீர். தூதன் சொல்ல மரியாள் என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தாள். மண ஒப்பந்தமாகி இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு செய்தி வருகிறதே. கடவுளின் ஆவியால் தான் கர்ப்பமானேன் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா ? என்று மரியாவின் மனதில் ஏராளம் கேள்விகள். ஆனாலும் சிறுவயது முதலே இறைபக்தியில் வளர்ந்த மரியாவால் எதையும் மறுத்துச் சொல்ல முடியவில்லை. தூதனின் செய்தியை ஏற்றுக் கொண்டாள்.

மரியா கர்பமாய் இருக்கும் செய்தி யோசேப்பின் காதுகளை எட்டியது. யோசேப்பு அதிர்ந்தார். அன்பும், மரியாதையும் வைத்திருந்த மரியா தனக்குத் துரோகம் செய்து விட்டாளே என்று மனதுக்குள் எரிச்சலும், ஆத்திரமும், கோபமும் கொண்டார். இவ்வளவு அன்பு வைத்திருக்கும் தன்னை மரியா எப்படி துரோகம் செய்யலாம், தன்னிடம் எதுவும் சொல்லாமல் இப்படி ஒரு தவறைச் செய்திருக்கிறாரே என்று யோசேப்பு உள்ளம் உடைந்தார். மரியாவைத் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என்று முடிவெடுத்தார். ஆனாலும் மரியா கர்ப்பமாய் இருக்கும் செய்தியை ஊருக்குத் தெரியப்படுத்த அவருடைய மென்மையான மனது இடம் தரவில்லை. எனவே காதும் காதும் வைத்தது போல திருமண ஒப்பந்தத்தை உடைத்துப் போடவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

மனதுக்குள் கவலை வந்து அமர்ந்து கொள்ள தூக்கமில்லாமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தார் யோசேப்பு. எப்போது தூங்கிப் போனார் என்று தெரியாது அவருடைய தூக்கத்தில் வந்து நின்றார் அதே தேவதூதன். தூதன் யோசேப்பின் கனவில் புன்னகைத்தான்.

யோசேப்பு வருத்தப் பட வேண்டாம்.மரியா கர்ப்பமாய் இருப்பது மரியா செய்த தவறல்ல, அது கடவுளின் வரம். கடவுளின் மகனைத் தான் அவர் ஈன்றெடுக்கப் போகிறார். எனவே நீர் வருத்தப்படாமல் மரியாவை மணமுடிக்கலாம்.

திடுக்கிட்டு விழித்த யோசேப்பின் காதுகளின் தேவதூதனின் குரல் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. இயல்பிலேயே இளகிய மனமும், இறைபக்தியும் கொண்ட யோசேப்பு தூதனின் சொல்லை ஏற்றுக்கொண்டார்.

ரோம் பேரரசை ஆட்சி செய்து கொண்டிருந்த அகஸ்து சீசர் ஒரு கட்டளை பிறப்பித்தார். அதன்படி அவருடைய பேரரசுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதுவும் அவர்கள் வசிக்கும் இடத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய இயலாது அவர்களுடைய பூர்வீக கோத்திரம் எங்கேயோ அங்கே சென்று தான் அவர்கள் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும். மக்கள் தொகையைக் கணக்கிட்டு தனக்குச் சேரவேண்டிய வரியைத் தராமல் ஏமாற்றும் மக்களைக் கண்டறிய வேண்டும் என்னும் நோக்கமே அவரிடம் இருந்ததாக மக்கள் உள்ளுக்குள் கொதிப்படைந்தார்கள். ஆனாலும் பேரரசிடமிருந்து நேரடியாகவே வந்த அந்த அரசாணையை யாரும் மீறத் துணியவில்லை. பொதுவாக சிற்றரசர்களிடமிருந்தே அரசாணைகள் வரும். அப்படிப் பார்த்தால் அப்போது அங்கே ஆட்சி செய்து கொண்டிருந்த ஏரோதிடமிருந்தே கட்டளை பிறந்திருக்க வேண்டும். ஏரோதை அகஸ்து சீசர் நம்பவில்லையா ? அல்லது இந்தக் கட்டளை வீரியத்துடன் பரவ வேண்டுமென்று நினைத்தாரா தெரியவில்லை. கட்டளை சீசரிடமிருந்தே வந்தது.

மரியாவுக்கு அப்போது நிறைமாதம். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறந்து விடக் கூடும் என்னும் நிலையில் இருந்தார். மன்னனின் கட்டளையை மீறவும் முடியாமல், எல்லோருமே செல்லவேண்டும் என்னும் கட்டாயத்தினால் மரியாவை வீட்டில் விட்டுச் செல்லவும் முடியாமல் யோசேப்பு தவித்தார். யோசேப்பும் மரியாவும் யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்னும் இடத்துக்குச் செல்ல வேண்டி இருந்தது.

பெத்லகேம் கலிலேயாவிலிருந்து சுமார் நூற்று ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. பயணம் குறைந்த பட்சம் மூன்று நாட்கள் நீடிக்கலாம். நடந்தோ கழுதையின் மீதமர்ந்தோ தான் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை. ஊர் பரபரப்பாய் இருந்தது. மக்கள் குடும்பம் குடும்பமாக உணவுப் பொட்டலங்களுடனும், கூடாரமடிக்கத் தேவையான பொருட்களுடனும் பெத்லேகேமுக்குச் செல்லத் துவங்கியிருந்தார்கள். யோசேப்பும் ஒரு கழுதையை ஏற்பாடு செய்து அதில் மரியாவை அமரவைத்து பெத்லேகேமை நோக்கிய பயணத்தைத் துவங்கினார்.

மூன்று நாள் பயணத்தின் முடிவில் அவர்கள் பெத்லேகேமை அடைந்தனர். பெத்லகேம் நெரிசல் காடாய் மாறியிருந்தது. எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். பல்வேறு இடங்களில் தங்கியிருந்த மக்கள் அனைவரையும் மன்னனின் ஆணை பெத்லேகேமுக்கு அழைத்து வந்திருந்தது. மக்கள் வெள்ளம் சாலைகளில் கரைபுரண்டோடிக் கொண்டிருந்தது. யோசேப்பு விடுதி ஒன்றை அணுகினார். விடுதிகளின் படிகளிலும் மக்கள் அமர்ந்திருந்தார்கள். விடுதிக் காப்பாளனை அணுகிய யோசேப்பு தனக்கு ஒரு படுக்கை வசதி வேண்டுமென்று வினவினார். விடுதிக் காப்பாளன் சிரித்தான். பெத்லகேம் நகரில் எந்தப் படுக்கையும் காலியாக இல்லை. எப்போதோ நிறைந்து விட்டது என்றான். யோசேப்பு திகைத்தார். மரியாவோ நிறை மாத கர்ப்பத்தில், விடுதிகளோ நிறைந்து வழியும் நிலையில். யோசேப்பு கெஞ்சினார். எப்படியேனும் மரியாவுக்கு ஒரு இடம் அளிக்கவேண்டும் என்று விண்ணப்பம் வைத்தார். மரியாவின் கண்களில் பேறுகால வலி மிதந்தது. மரியா எப்போது வேண்டுமானாலும் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும் நிலையில் இருப்பதைக் கண்ட விடுதிக் காப்பாளனின் மனைவி மனது வைத்தார்.

‘ஒரு இடம் இருக்கிறது அங்கே உங்களால் இருக்க முடியுமா என்று தெரியவில்லை’

‘எந்த இடமானாலும் பரவாயில்லை. மரியாவுக்குத் தேவையான தனிமையும், ஓய்வும் கிடைத்தால் போதும்’ யோசேப்பு சொன்னார்.

‘விடுதியின் பின்னால் ஒரு தொழுவம் இருக்கிறது. தங்கிக் கொள்ளுங்கள்.’

‘தொழுவமா ?’ யோசேப்பு வினாடி நேரம் திகைத்தார். அப்போதைய நிலையில் ஏதேனும் ஒரு இடம் அவருக்குத் தேவையாய் இருந்தது. ஒருவேளை அந்த இடம் வேண்டாமென்று சொன்னால் அதை ஆக்கிரமிப்பதற்கும் தயாராய் இருந்தது முண்டியடித்துக் கொண்டிருந்த கூட்டம்.

‘மிக்க நன்றி’ மரியா நன்றி சொன்னாள்.

யோசேப்பும் மரியாவும் தொழுவத்தை நோக்கி நடந்தார்கள்.

தொழுவம் மாடுகளாலும், அவற்றின் கழிவுகளாலும் நிரம்பியிருந்தது.

இரவு.

ஓய்வெடுப்பதற்காக மக்கள் விடுதிகளின் அறைகளிலும், கூடாரங்களின் உள்ளேயும் புகுந்து வெகுநேரமாகி இருந்தது. அந்த இரவில், தொழுவத்தில் கால்நடைகள் கண்ணயர்ந்திருந்த வேளையில் மரியா குழந்தையைப் பெற்றெடுத்தாள். மரியா தாயானாள். குழந்தையைக் கிடத்துவதற்கும் அந்தத் தொழுவத்தில் நல்ல இடம் இருக்கவில்லை. இருந்த துணிகளில் குழந்தையைப் பொதிந்து அவர்கள் தீவனத் தொட்டியில் கிடத்தினார்கள். வீதிகளும், விடுதிகளும் இயேசுவின் பிறப்பை அறியாமல் சலசலத்துக் கொண்டிருக்க,

வரலாற்று நாயகன் இயேசு வைக்கோல் மீதில் துயின்றார்.

இயேசு வரலாறு 2. ஞானிகள் வாழ்த்தும், ஏரோது மன்னனின் பயமும்

Image result for 3 wise men and child jesus

கிழக்கு தேசத்தில் மூன்று வானியல் ஞானிகள் இருந்தார்கள். அவர்கள் காலத்தின் மாற்றங்களையும், வானத்தின் நிகழ்வுகளையும் வைத்து சம்பவங்களை அறிந்து கொள்ளும் திறன் படைத்தவர்கள். அதிலும் குறிப்பாக வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களை வைத்து உலகில் நடக்கும் முக்கிய சம்பவங்களை கணிப்பதில் அவர்கள் சிறந்து விளங்கினார்கள்.

ஒருநாள் அவர்கள் வானத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போது அதைக் கண்டார்கள்.

ஒரு வால் நட்சத்திரம். வழக்கத்துக்கு மாறாக, ஒரு புத்தம் புதிய வால் நட்சத்திரம். இதுவரை பார்த்த நட்சத்திரங்களிலிருந்து வேறுபட்டுத் தோன்றிய வால் நட்சத்திரம் அவர்களுடைய கவனத்தில் ஆர்வத்தைக் கூட்டியது. அவர்கள் அந்த நட்சத்தித்தின் தோன்றல் காரணம் குறித்து தங்களுக்குள் பேசத் துவங்கினார்கள்.

தங்கள் கலந்துரையாடலின் முடிவில் அந்த வால்நட்சத்திரம் புதிய அரசன் பிறந்திருப்பதன் அடையாளம் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். வால்நட்சத்திரம் யூதேயா நாட்டின் மேல் தன்னுடைய வெளிச்ச வாலை நீட்டிக் கொண்டிருந்தது.

அப்படியானால், யூதேயா நாட்டில் ஒரு மன்னன் பிறந்திருக்க வேண்டும். யூதேயாவின் மன்னன் ஏரோதின் அரண்மனையில் தான் அவன் பிறந்திருக்க வேண்டும். ஞானிகள் யூதேயா நோக்கிப் பயணம் செய்ய முடிவெடுத்தார்கள். ஏரோதின் அரண்மனைக்குச் சென்று புதிய மன்னனைக் கண்டு வணங்கி அவருக்கு பரிசுகள் அளிக்க வேண்டும் என்பது அவர்களுடைய எண்ணம்.

ஞானிகள் தங்களுக்குள்ளே கலந்துரையாடிக் கொண்டு, விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து, பொன், தூபம், நறுமணப் பொருளான வெள்ளைப் போளம் இவற்றை காணிக்கையாக எடுத்துக் கொண்டு நல்ல ஒட்டகங்களில் ஏறி ஏரோது மன்னனின் அரண்மனையை நோக்கி பயணித்தார்கள். அரண்மனை யூதேயா நாட்டின் தலை நகரான எருசலேமில் இருந்தது.

அரண்மனையைச் சென்றடைந்த ஞானிகள் ஏரோது மன்னனைக் கண்டு வணங்கினார்கள். தனக்கு முன்னால் வந்திருக்கும் ஞானிகளைக் கண்ட ஏரோது நெற்றி சுருக்கினான். காரணம் புரியாமல் குழம்பினான்.

‘வாருங்கள் ஞானியரே. உங்கள் வரவு நல்வரவாகுக. நீங்கள் யார்? . என்ன சேதி ?’ மன்னன் கேட்டான்.

ஞானியர்கள் மன்னனின் முன்னால் தலை வணங்கி தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

‘அரசே என் பெயர் காஸ்பர், இவர் மெல்கியர், பெல்தாசர் நாங்கள் மூவரும் யூதர்களின் அரசரைக் காண வந்திருக்கிறோம்’ ஞானிகள் சொன்னார்கள்.

‘நான் தான் இந்த நாட்டின் மன்னன். உங்களுக்குத் தெரியாதா ?’ மன்னன் புன்னகைத்தான்.

‘அரசே மன்னிக்க வேண்டும். யூதர்களுக்கு அரசனாக வேண்டிய ஒரு பாலகன் பிறந்திருக்கிறானே. அவரைக் காண வந்திருக்கிறோம்’

‘என்ன உளறுகிறீர்கள். அரண்மனையில் என்னுடைய வாரிசுகள் யாரும் பிறக்கவில்லை. உங்களுக்கு யாரோ தவறான தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்’ மன்னன் சொன்னான்.

‘இல்லை அரசே. மக்கள் யாரும் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை, வானத்து நட்சத்திரம் சொல்லிற்று. அதனால் தான் வந்தோம்.’

‘வானத்து நட்சத்திரமா ? புரியவில்லையே ?’ மன்னன் கேட்டான்.

‘ம் அரசே. வானத்தில் புதிதாய் வால் நட்சத்திரம் ஒன்றைக் கண்டோம். அதன் பொருள் ஒரு மீட்பர், ஒரு மாபெரும் மன்னன் பிறந்திருக்கிறார் என்பது தான். அந்த அரசர் யூதேயாவில் தான் பிறந்திருக்கிறார். அதனால் தான் இங்கே வந்தோம்’

‘நீங்கள் தவறாகக் கணித்திருப்பீர்கள். இங்கே புதிய அரசன் பிறக்கவில்லை’

‘அதெப்படி அரசே அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள். ஒரு வேளை அரண்மனையில் பிறக்காத ஏதேனும் குழந்தை நாளை அரசராகலாம் இல்லையா ?’ ஞானிகள் சொன்னதும் மன்னன் அதிர்ந்தான்.

‘என்ன சொல்கிறீர்கள்’

‘ம் அரசே. புதிய அரசர் பிறந்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர் அரண்மனையில் பிறக்கவில்லை என்பதும் இப்போது தெளிவாகி விட்டது. அப்படியானால் அவர் நாட்டில் வேறு ஏதோ ஒரு வீட்டில் தான் பிறந்திருக்க வேண்டும்’ ஞானிகள் உறுதியுடன் சொன்னார்கள்.

‘சரி. நீங்கள் அரண்மனையிலேயே சில நாட்கள் தங்கியிருங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்’ மன்னன் கூறினான்.
ஞானிகள் அகன்றதும் மன்னன் அரண்மனைப் பணியாளனை அழைத்தான்,

‘எல்லா தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருக்கும் மறைநூல் அறிஞர்கள் அனைவரையும் உடனே அரண்மனையில் ஒன்று கூட்டு’ என்று ஆணையிட்டான். மன்னனின் ஆணைப்படி அனைவரும் அரசர் முன்னிலையில் ஒன்று திரண்டனர்.

‘நான் உங்களை எதற்குக் கூட்டி வந்திருக்கிறேன் தெரியுமா ?’ மன்னன் கேட்டான்.

‘இல்லை அரசே. ஏதோ அவரச நிலை என்பது மட்டும் புரிகிறது’ தலைமைக் குரு சொன்னார்.

‘கிழக்கு திசை நாட்டிலிருந்து மூன்று ஞானிகள் அரண்மனைக்கு வந்திருக்கிறார்கள். யூதர்களின் புதிய அரசனைச் சந்திப்பதற்காக !’ மன்னன் சொல்லி நிறுத்தினான்.

‘புதிய மன்னனா ?’

‘ம். அப்படித் தான் அவர்கள் சொன்னார்கள். புதிய வால் நட்சத்திரம் ஒன்றைக் கண்டார்களாம். அதன் படி ஒரு புதிய மீட்பர் நம்முடைய நாட்டில் தோன்றியிருக்க வேண்டும் என்பது அவர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கை’

மன்னன் சொல்லச் சொல்ல அனைவரும் குழம்பிப் போய் ஒருவரையொருவர் பார்த்தார்கள்.

‘எனக்கு இப்போது ஒரு விஷயம் தெளிவாக வேண்டும். அரசரோ, மீட்பரோ, மெசியாவோ ஒருவர் நம்முடைய நாட்டில் பிறக்கிறார் என்றால் அவர் எங்கே பிறப்பார் ? அரண்மனையில் அவர் பிறக்கவில்லை ! அப்படியானால் எங்கே பிறந்திருக்கக் கூடும் ?’

‘பெத்லகேம் !’ மறைநூல் அறிஞர் ஒருவர் சொன்னார்.

‘பெத்லகேம் ? என்ன சொல்கிறீர்கள் ? அந்த கிராமத்திலா அவர் பிறப்பார். அது ஒரு பின் தங்கிய கிராமம் அல்லவா ? அங்கே இருப்பவர்கள் எல்லோரும் சாதாரண ஏழைகள் அல்லவா ? ஞானிகளோ, அரச பரம்பரையினரோ அங்கே இல்லையே ?’ மன்னன் சந்தேகக் கேள்விகளை அடுக்கினான்.

‘ஆனால் மறைநூல் வார்த்தை அப்படிச் சொல்கிறது அரசே ?’

‘மறை நூல் வாக்கு சொல்கிறதா ?’

‘ ஆம்.. அரசே. மீக்கா எனும் தீர்க்கத் தரிசி ஒருவர் பல நூறு ண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார்’

‘என்ன சொல்லியிருக்கிறார். தெளிவாகச் சொல்லுங்கள்’ மன்னனின் குரலில் அதிர்ச்சி மெலிதாக வெளிப்பட்டது.

‘யூதா நாட்டு பெத்லேகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை. ஏனெனில் என் மக்களாகிய இஸ்ரயேலரை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார். என்பதே அந்த வாக்கு அரசே’

‘அப்படியானால் ஞானிகள் சொன்னது உண்மையாக இருக்கலாம். மீட்பர் ஒருவர் பெத்லேகேமில் பிறந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்களா ?’ மன்னன் மீண்டும் கேட்டான்.

‘அப்படி ஒரு முடிவிற்குத் தான் வரவேண்டியிருக்கிறது அரசே. வானியல் ஞானிகள் சொன்னது உண்மையா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் அது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் மீட்பர் பெத்லேகேமில் பிறந்திருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன’ அவர்கள் உறுதியுடன் சொல்ல ஏரோது ஏகமாய் கலங்கினான். தன் அரியணை பறிபோய் விடுமோ என பரிதவித்தான்.

இந்தச் செய்தி எருசலேம் முழுவதும் பரவியது.எருசலேம் வாழ் மக்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியூட்டுவதாகவும், கலக்கமூட்டுவதாகவும் இருந்தது.

மன்னன் ஞானிகளை அழைத்தான்.

‘ஞானிகளே. என்னிடம் உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள் விண்மீனைக் கண்டது உண்மை தானே ?’ மன்னன் அதிகாரத் தோரணையில் கேட்டான்.

‘ம் அரசே. மன்னனிடம் நாங்கள் பொய் சொல்வோமா ?’ ஞானிகள் பதில் சொன்னார்கள்.

‘சரி. நான் மறைநூல் அறிஞர்களையும், தலைமைக் குருக்களையும் அழைத்து விசாரித்தேன். நீங்கள் சொல்லும் மீட்பர் பெத்லேகேமில் பிறந்திருக்கக் கூடும் என்பது அவர்களின் கணிப்பு’ மன்னன் சொன்னான்.

‘நன்றி அரசே. நாங்கள் சென்று அவரைக் கண்டு வணங்க வேண்டும். நாங்கள் புறப்படலாமா ?’

‘கண்டிப்பாக. நீங்கள் பெத்லகேம் சென்று அவரைத் தரிசியுங்கள். அவரைத் தரிசித்தபின் என்னிடம் வந்து அவருடைய இருப்பிடத்தைத் தெரியப்படுத்துங்கள். அவரை நானும் வணங்கவேண்டும். என்னுடைய நாட்டில் மீட்பர் பிறந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு நான் அரச மரியாதை செலுத்த வேண்டும். எனவே நீங்கள் பாலனைக் கண்டு வணங்கியபின் என்னிடம் வந்து சொல்லுங்கள்’ மன்னன் சொன்னான். அவர்கள் கண்டு வந்து சொன்னதும் பாலனைக் கொன்றுவிடவேண்டும். அரசராக நான் இருக்கும் வரை இன்னொரு அரசர் இந்த நாட்டில் பிறக்கக் கூடாது. ஏரோது உள்ளுக்குள் சதித்திட்டம் தீட்டினான்.
ஞானிகள் மகிழ்ச்சியுடன் பயணத்தைத் தொடங்கினார்கள். அவர்கள் வால்நட்சத்திரம் இருக்கும் திசை நோக்கி நடந்து கொண்டே இருந்தார்கள். வால் நட்சத்திரம் அவர்களுக்கு முன்னால் நகர்ந்து கொண்டே இருந்தது. சென்று கொண்டிருந்த விண்மீன் ஒரு இடத்தில் வந்ததும் நின்றது. அதன் ஒளி ஒரு குடிசையின் மீது படர்ந்தது. விண்மீன் நின்றதைக் கண்டதும் ஞானிகள் உற்சாகமடைந்தார்கள். அந்த குடிசைக்குள் விரைந்து சென்றார்கள்.

அது ஒரு தொழுவம். அங்கே மரியாவின் கைகளில் ஒரு குழந்தை. கந்தல் துணியால் சுற்றப்பட்ட கள்ளம் கபடமற்ற மழலை முகம். அருகிலேயே யோசேப்பு. சுற்றிலும் கால்நடைகள்.

ஞானிகள் ஒரு வினாடி திடுக்கிட்டனர். வானத்தில் அதிசய வால்நட்சத்திரம். பூமியில் தொழுவத்தில் அரசரா ? இத்தனை எளிமையாய் ஒரு மீட்பரா என்று வினாடி நேரம் உள்ளுக்குள் கேள்விகளை உருட்டியவர்கள் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தனர்.

பட்டாடைகள் தொழுவத்தின் அழுக்கில் புரள, தங்களுக்கு முன்பாக விழுந்து கிடக்கும் மூன்று ஞானிகளைக் கண்ட மரியாவும், யோசேப்பும் பதறினார்கள்.

‘ஐயா நீங்கள் யார் ? எங்கிருந்து வருகிறீர்கள்’ யோசேப்பு கேட்டார்.

‘நாங்கள் கிழக்கு திசையிலிருந்து வரும் ஞானிகள். நீண்ட தூரம் பயணித்து இங்கே வந்திருக்கிறோம். அரசரைக் காண்பதற்காக !’ அவர்கள் சொன்னார்கள்.

‘இந்தக் குழந்தையைப் பற்றி உங்களுக்குச் சொன்னது யார் ?’ யோசேப்பு வியந்தார்.

‘வானம் ‘

‘வானமா ?’

‘ம். வானத்தில் ஒரு அதிசய வால் நட்சத்திரம் தோன்றியது. அதுதான் எங்களை வழிநடத்தியது !. இவரைக் காணும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். ஞானிகள் சொன்னார்கள்’.

‘இதோ பொன்…’ இது எனது காணிக்கை. ஒரு ஞானி தன் ஒட்டகத்தில் சுமந்து வந்திருந்த மூட்டையை குழந்தையின் முன்னால் வைத்தார்.

‘இது தூபம். சாம்பிராணி… என்னுடைய காணிக்கை’ இரண்டாவது ஞானி காணிக்கை படைத்தார்.

‘இதோ வெள்ளைப் போளம். இது என்னுடைய காணிக்கை’ மூன்றாவது ஞானி பேழையைத் திறந்து காணிக்கை கொடுத்தார்.

பொன் மிக விலையுயர்ந்த அந்தஸ்தின் அடையாளம். தூபம் என்பது வழிபாட்டுக்குரியவர் என்பதன் அடையாளம். வெள்ளைப்போளம் மிகவும் நறுமணம் மிகுந்த பொருள். இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது இதை கல்லறையில் வைப்பதும் அரச குலத்தினரின் வழக்கம். மரியாவும், யோசேப்பும் நடப்பதையெல்லாம் வியப்புடன் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

ஞானிகள் குழந்தையை வணங்கிவிட்டு விடைபெற்று அரண்மணை நோக்கி பயணித்தார்கள்.

இரவு. ஞானிகள் ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுத்தார்கள்.

அவர்கள் மூவருமே அன்று ஒரு கனவு கண்டார்கள். கனவில் ஒரு தேவதூதன் தோன்றினான்.
‘ஞானிகளே. நீங்கள் ஏரோது மன்னனின் அரண்மனைக்குச் செல்லவேண்டாம். அவனுக்கு எந்தத் தகவலையும் அளிக்க வேண்டாம். வேறு வழியாக உங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்’

கனவு கண்ட அவர்கள் திடுக்கிட்டு விழித்தார்கள். அனைவரும் ஒரே கனவைக் கண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்கள். இது கடவுளின் கட்டளை தான். நாம் நம்முடைய பயணத்தை மாற்றிக் கொள்வோம். இனிமேல் எருசலேமிற்கே செல்லவேண்டாம். வேறு வழியாக நம்முடைய நாட்டுக்குப் போவோம். மன்னனின் கட்டளையை மீறலாம், ஆனால் கடவுளின் கட்டளையை மீறக் கூடாது !’ ஞானிகள் முடிவெடுத்தார்கள்.

அதே இரவில் யோசேப்பும் ஒரு கனவு கண்டார். கனவில் கடவுளின் தூதன் யோசேப்பை நோக்கி,
‘யோசேப்பு ! நீர் எழுந்து குழந்தையையும் எடுத்துக் கொண்டு எகிப்து நாட்டுக்குச் செல்லும். இங்கே ஏரோது மன்னன் குழந்தையைக் கொல்ல சூட்சி செய்கிறான். நான் சொல்லும் வரை நீங்கள் எகிப்திலேயே தங்கியிருங்கள்’ என்றான்.

யோசேப்பு உடனே எழுந்தார். மரியாவை எழுப்பி, இயேசுவையும் எடுத்துக் கொண்டு அந்த இரவிலேயே எகிப்தை நோக்கிப் பயணித்தார்.

இயேசு வரலாறு 3 : பாதகர்கள் கையில் பாலகர்கள்

Image result for Herod kills kidsஇதற்கிடையில் ஏரோது மன்னன் ஞானிகளின் வருகைக்காகக் காத்திருந்தான். நாட்கள் கடந்து கொண்டேயிருந்தன. ஞானிகளைக் காணவில்லை !

ஞானிகள் தன்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டனர் என்பது ஏரோதுக்கு விளங்கியது. தன்னுடைய ஆணையை மீறி ஞானிகள் செயல்பட்ட கோபமும், தன்னுடைய அரசாட்சிக்கு ஆபத்தாக ஒரு அரசன் தோன்றியிருக்கும் கோபமும் அவருக்குள் பெரும் எரிமலையாக உடைந்து சிதறியது. குழந்தையைக் கொல்லவேண்டும் என்ற தன்னுடைய திட்டம் தோல்வியில் முடியுமோ என்னும் கவலை அவனை ஆட்கொண்டது. ஆனால் எப்படியும் குழந்தையைக் கொன்றே ஆகவேண்டும் என்னும் வெறி அவனுக்குள் ஊறியது. யார் அந்தக் குழந்தை ? அவன் எப்படி இருப்பான் ? அவனுடைய பெற்றோர் யார் ? எதுவுமே ஏரோதுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவனிடம் இருக்கும் ஒரே ஒரு செய்தி, அந்தக் குழந்தை பெத்லேகேமில் இருக்கிறது !. ஆனால் பெத்லகேம் நகரமோ ஆட்களின் கூட்டத்தால் பிதுங்கி வழிகிறது. அங்கே எப்படிக் கண்டு பிடிப்பது குழந்தையை ?

அவனுடைய மனதுக்குள் ஒரு கொடூரமான எண்ணம் பிறந்தது. எந்தக் குழந்தை என்று கண்டுபிடிப்பது தானே கஷ்டம். எந்தக் குழந்தையுமே உயிரோடு இல்லாவிட்டால் அந்தக் குழந்தையும் இறந்து போகும் அல்லவா ? அப்படியானால் எல்லா ஆண்குழந்தைகளையும் கொல்வதற்குச் சட்டம் இயற்றலாமா ? அப்படி ஒரு கொடூரமான சட்டம் இயற்றினால் சீசரின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமா ? ஏரோது பலவாறாகச் சிந்தித்தான். ஆனால் அவனுடைய மனதில், தன்னுடைய சிம்மாசனத்துக்கு எங்கிருந்தும் எந்த விதத்திலும் போட்டி வந்து விடக் கூடாது. தான் இறக்கும் வரை மன்னனாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் பாறைபோல நின்றது. மனதைக் கல்லாக்கிக் கொண்டு உத்தரவிட்டான்.

‘உடனே சென்று பெத்லேகேமிலும் அதன் சுற்றுப் புறங்களிலுள்ள ஊர்களிலும் இருக்கும் இரண்டு வயதுக்குட்பட்ட அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்று விடுங்கள்’ மன்னனின் ஆணை கோபத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது.

மன்னனின் பணியாளர்கள் மறுபேச்சுப் பேசி பழக்கமில்லாதவர்கள். ஆணையைப் பொறுக்கிக் கொண்டு பெத்லேகேமிற்குச் சென்றார்கள்.

‘இங்கே உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளையெல்லாம் கொல்லவேண்டும் என்பது மன்னனின் ஆணை !’ வீரர்கள் சொல்ல மக்கள் அதிர்ந்தார்கள்.

‘என்ன ? குழந்தைகளைக் கொல்வதா ?’

‘பாலகர்களைப் படுகொலை செய்ய மன்னன் ஆணையிட்டிருக்கிறானா ?’

‘இருக்காது. கூடாது….ஐயோ… வேண்டாம்..’ மக்கள் அலறினார்கள். தாய்மார்கள் கதறினார்கள். ஆனால் மன்னனின் வீரர்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் நகருக்குள் நுழைந்தார்கள்.

சிலருடைய கைகளிலே பளபளப்பான வாள். சிலருடைய கைகளிலே கூர்மையான ஈட்டி. அவர்கள் பெத்லேகேமின் வீடுகளுக்குள் நுழைந்தார்கள். அங்கே தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை வாளினால் வெட்டித் துண்டாக்கினார்கள்.

அன்னையரின் மடியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை இழுத்து தாய்மாரின் முன்னிலையிலேயே வெட்டித் துண்டாக்கினார்கள். பால் குடித்துக் கொண்டிருந்த பச்சைக் குழந்தைகளும் படுகொலைக்குத் தப்பவில்லை. தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் மார்பை கூர் ஈட்டிகள் குத்திப் பிளந்தன. ஈவு இரக்கமில்லாத படுகொலை நிகழ்ச்சி ஒன்று அங்கே அரங்கேறியது.

தங்கள் குழந்தைகள் தங்கள் கண் முன்னாலேயே படுகொலை செய்யப்படுவதைக் கண்ட பெற்றோர் கதறினர். எதிர்க்கும் வலுவில்லாத அவர்களுடைய அலறல் ஒலிகளால் பெத்லகேம் நிரம்பியது. தெருக்களும் வீடுகளும் மழலைகளின் இரத்தத்தால் நனைந்தது.

பெத்லேகேமின் குழந்தைகள் எல்லாம் மடிந்தபின் அடுத்திருந்த ஊர்களுக்கும் வீரர்கள் சென்றார்கள். அங்கும் வீரர்கள் படுகொலையை நிகழ்த்தினார்கள். எல்லா குழந்தைகளும் கொல்லப்பட்டபின் வீரர்கள் மன்னனிடம் சென்றார்கள்.

‘அரசே… உமது கட்டளை நிறைவேற்றப் பட்டது. பெத்லேகேமிலும் அதன் சுற்றுப் புற ஊர்களிலும் குழந்தைகளோ, சிறுவர்களோ யாருமே இப்போது உயிருடன் இல்லை’

‘யாரும் தப்பவில்லையே ?’

‘இல்லை அரசே. ஒரு உயிர் கூட தப்பவில்லை’ வீரர்கள் உறுதிபடச் சொன்னார்கள்.

ஏரோது மன்னன் மகிழ்ந்தான். தன்னுடைய அரசுக்கு எதிராகத் தோன்றிய பாலகன் இறந்து விட்டான் என்று களிப்படைந்தான். ஞானிகள் சொன்ன பாலகன் மடிந்து போயிருப்பான் என்று மகிழ்ந்தான். தன்னுடைய அரசுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தீர்ந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

அவன் கொல்லத் தேடிய இயேசுவோ எகிப்து நாட்டில் மரியாவின் மடியில் அமைதியாகத் துயின்று கொண்டிருந்தார்.

இயேசு வரலாறு 4 : இயேசுவின் மழலைக் காலம்

 

யூதர்களுக்கு ஒரு வழக்கம் இருந்தது. அதன்படி, ஆண்குழந்தை பிறந்தால் பிறந்த எட்டாவது நாள் அவனை ஆலயத்துக்குக் கொண்டு சென்று விருத்த சேதனம் செய்ய வேண்டும். தலைப்பேறான மகன் என்றால் அவனை ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்க வேண்டும். அப்படி அற்பணிப்பதன் அடையாளமாக ஒரு ஜோடி மாடப் புறாக்களையோ, ஒரு ஜோடி புறாக் குஞ்சுகளையோ பலியிடவேண்டும். இயேசுவும் தலைப்பேறான மகன் என்பதால் அவருக்கும் இந்த சடங்குகள் செய்யவேண்டியிருந்தது. எனவே மரியாவும், யோசேப்பும் இயேசு பிறந்த எட்டாவது நாளில் குழந்தையை எடுத்துக் கொண்டு எருசலேம் தேவாலயத்துக்குச் சென்றார்கள்.

எருசலேமில் சிமியோன் என்றொருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு இறைபக்தர். ஆண்டவருடைய மெசியாவைக் காண்பதற்கு முன்னால் ( மெசியா என்றால் அனுப்பப்பட்டவர் என்பது பொருள் ) சாவதில்லை என்று கடவுளின் ஆவியால் வரம் அருளப்பட்டிருந்தவர் அவர். இயேசு ஆலயத்துக்கு வந்த அதே நாளில் சிமியோனின் உள்ளத்துக்குள் ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது.
‘சிமியோன் எழுந்து எருசலேம் தேவாலயத்துக்குப் போ… உனக்கு அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. தாமதிக்காதே… போ.. ஆலயத்துக்குப் போ…’

சிமியோன் தன் உள்ளத்துக்குள் ஒலிக்கும் குரலுக்கான காரணத்தை அறியாமல் குழம்பினார். ஆனாலும் ஆலயத்துக்குரிய ஆடைகளை அணிந்து கொண்டு சிமியோன் எருசலேம் தேவாலயத்துக்கு விரைந்தார்.

மரியா குழந்தையைக் கையில் ஏந்தியபடி எருசலேம் தேவாலயத்துக்குள் நுழைந்தார். ஆலயத்தின் உள்ளே சிமியோன் அமர்ந்திருந்தார். தனது உள்ளத்தில் ஒலித்த குரலுக்கான காரணத்தை அறியவேண்டுமென்று அவருடைய மனம் துடித்துக் கொண்டிருந்தது. தனக்குக் கடவுள் காட்டப் போகும் அதிசயம் என்னவாக இருக்கும் என்று அவருடைய உள்ளம் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. மரியா ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் சிமியோனின் கண்கள் பிரகாசமடைந்தன. அவருடைய கையில் இருந்த இயேசுவைக் கண்டதும் அவருக்குள் மீண்டும் அதே குரல் ஒலித்தது.
‘உனக்கு நான் வரமளித்திருந்தேன். இப்போது கடவுளை உன் கண்கள் கண்டு கொண்டன !’

உள்ளத்துக்குள் ஒலித்த கடவுளின் குரலைக் கேட்டதும் சிமியோன் துள்ளி எழுந்து குழந்தையை நோக்கி ஓடினார். குழந்தை இயேசுவைக் கைகளில் அள்ளி எடுத்தார்.

முன்பின் தெரியாத ஒரு நபர் ஓடி வந்து தன் கைகளில் இருந்த குழந்தையை அள்ளி எடுத்ததைக் கண்ட மரியா திகைத்தார். அதற்குள் சிமியோன் குழந்தையை கைகளில் ஏந்தி,
‘கடவுளே உம்முடைய வார்த்தையின் படி உமது அடியானாகிய என்னை இப்போது அமைதியுடன் செல்ல அனுமதித்து விட்டீர். இதோ… இந்தக் குழந்தையே கடவுளின் ஒளி. இஸ்ரயேல் மக்களின் இருள் அகற்றும் ஒளி. மக்கள் அனைவரின் மீட்புக்காகவும் நீர் அனுப்பிய உம் மகனை என் கண்கள் கண்டு கொண்டன. இதோ இந்தக் குழந்தை இஸ்ரயேல் மக்கள் பலருடைய வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாக இருப்பான்’ என்றார்.

மரியாவும், யோசேப்பும் சிமியோனின் வார்த்தைகளைக் கேட்டு பரவசமடைந்தார்கள். மரியாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. சிமியோன் மரியாவின் பக்கம் திரும்பி
‘உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்’ என்றார்.

மரியாவுக்கு அந்த வார்த்தைகளின் பொருள் விளங்கவில்லை. அமைதியாய் நின்றார்.

அங்கு அன்னா என்றொரு பெண் இறைவாக்கினரும் இருந்தார். எண்பத்து நான்கு வயதான அவர் எருசலேம் தேவாலயத்திலேயே அல்லும் பகலும் திருப்பணி செய்து வந்தார். அவரும் குழந்தை இயேசுவைக் கண்டதும் பரவசமடைந்தார்.

‘இதோ.. இந்தக் குழந்தை தான் நம்முடைய மீட்பர். இவர் கடவுளின் மகன். இவரால் தான் மனுக்குலம் மீட்படையப் போகிறது’ என்று அனைவரிடமும் இயேசுவைப் பற்றிப் புகழ்ந்து பேச ஆரம்பித்தார்.

மரியாவும், யோசேப்பும் நிகழும் அனைத்தையும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பின் யூத மரபுப்படி பாலன் இயேசுவுக்குச் செய்ய வேண்டிய விருத்தசேதனத்தை நிறைவேற்றி, ஆலயத்தில் பலிகளை இட்டபின் கலிலேயாவில் இருந்த தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பினார்கள்.

அவர்களுடைய சிந்தனைகள் முழுவதும் சிமியோனையும், அன்னாவையுமே சுற்றிச் சுற்றி வந்தன. அவர்கள் குழந்தை இயேசுவை பாசம் வழிய, பக்தியுடன் பார்த்தார்கள்.

எகிப்தில் இயேசுவும் குடும்பமும் கிலியோபாலிஸ் என்னுமிடத்தில் தங்கியிருந்தது. அந் நகரத்திலிருந்து சுமார் பத்து மைல் தொலைவில் தான் பிரமிக்க வைக்கும் பிரமிடுகள் இருந்தன. இயேசுவின் மழலைக்காலம் எகிப்தியரின் பிரமாண்டமான கற் சிலைகளோடு கழிந்தது. தாயார் இயேசுவுக்கு மழலையிலேயே ஒரு போதனையை ஊட்டி வளர்த்தினாள். ‘நமது கடவுள் ஒருவரே’.

வருடங்கள் இரண்டு உருண்டோடின. ஏரோது மன்னன் நோயில் விழுந்தான். எத்தனையோ தாய்மாரின் அழுகை காரணமாய் இருந்திருக்கலாம், அல்லது அவனால் கொடூரமாக கொல்லப்பட்ட அவனுடைய உறவினர்களே காரணமாக இருக்கலாம், அல்லது அவனுடைய அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக எழுந்த மக்களின் சாபம் காரணமாக இருக்கலாம். அவன் வலியினால் துடித்தான். உடலெங்கும் வீக்கம் காணப்பட்டது. நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டான். தன்னுடைய சாவுக்காய் யாரும் சங்கடப் படப் போவதில்லை என்று அவனுக்குத் தோன்றியது. முப்பத்து ஏழு ஆண்டுகள் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஏரோது மன்னனின் ஆட்சி அவனுடைய பரிதாபமான சாவுடன் முற்றுப் பெற்றது.

ஏரோதின் மரணத்துக்கு முன் அவன் உயில் ஒன்றை எழுதி வைத்திருந்தான். அதன்படி அவனுடைய ஒரு மகன் ஆர்கிலேயு யூதேயாவின் மன்னனாக முடிசூட்டப் பட வேண்டும். யூதேயா முழுவதுக்குமான பேரரசராக ஆர்க்கிலேயு முடிசூட்டப் பட்டாலும் கலிலேயா அவனுடைய கட்டுப்பாட்டுக்கு வராது, அது ஏரோதின் இன்னொரு மகனான ஏரோது அந்திபாஸ் ஆளுகைக்குள் வந்தது. ஏரோதின் சாவுச் செய்தியை அறிந்த யோசேப்பும் மரியாவும், குழந்தை இயேசுவுடன் நாடு திரும்ப முடிவெடுத்தனர். ஆர்க்கிலேயு ஆளும் பகுதிகளில் வாழ்வதைத் தவிர்க்க விரும்பிய யோசேப்பு எருசலேமில் தங்கலாம் என்னும் தன்னுடைய எண்ணத்தை விட்டு விட்டு மீண்டும் கலிலேயாவுக்கே திரும்பினார். தச்சு வேலை செய்து தன்னுடைய வாழ்க்கையைத் தொடரலாம் என்று முடிவெடுத்து நாசரேத்துக்கே திரும்பினார். இரண்டு வருட ஆச்சரியமும், பயமும், நாடோடித்தனமானதுமான வாழ்க்கை முடிவுக்கு வர யோசேப்பு சற்று மன நிம்மதியுடன் தன்னுடைய தச்சு வேலையைத் துவங்கினார்.

இயேசு வரலாறு 5 : இளமையில் இயேசு

Image result for Jesus at age 12

சிறுவயது இயேசு தந்தையின் தச்சுக் கூடத்தில் விளையாடி வளர்ந்தார். தந்தை செய்து தரும் மரவேலைப்பாடுள்ள பொருட்களை வைத்து விளையாடுவதில் மிகுந்த விருப்பம் அவருக்கு. இயல்பிலேயே இயற்கையோடும் பறவைகள் விலங்குகளோடும் மிகவும் அன்பு கொண்டவராக இருந்தார் இயேசு. இயற்கையின் அழகை ரசிப்பதும், அதைக் குறித்த கேள்விகளை எழுப்புவதும், பறவைகளோடு நேசமாய் பேசி விளையாடுவதுமாய் ஆனந்தமாய் இருந்தது அவருடைய மழலைக்காலம்.

தந்தை அவருக்கு இறைவாக்கினர்களின் ஏட்டுச் சுருள்களை வாசித்து விளக்கம் சொல்வதுண்டு. தலை முறைகளின் கதைகளையும், ஆதாம் துவங்கி சில தலைமுறைகளுக்கு முன்பு வரை நடந்த கதைகளையும் தந்தை அவருக்கு விளக்கிச் சொல்ல அதை ஆர்வமாய்க் கேட்டு வளர்ந்தார் இயேசு. குறிப்பாக மோசேயின் கதைகளும், இறைவாக்கினர்களின் பணிகளும், தாவீது மன்னன், சாலமோன் மன்னன் போன்றவர்களுடைய இறை புகழ்ச்சிப் பாடல்கள் இவற்றை அவர் வாசித்து நேசிக்கத் துவங்கினார். திரும்பத் திரும்ப தந்தையிடமிருந்து கதைகள் கேட்டுக் கேட்டு அவை அவருடைய மனதில் பசுமரத்தாணி போல பதிந்தது.

அவருடைய அன்பு மிகவும் பரந்து பட்டதாக இருந்தது. அழகிய பறவை முதல், அசிங்கமான பூச்சிகள் வரை எல்லாவற்றையும் ஒரே போல பாவித்தார். தந்தையிடமும், தாயிடமும் காட்டும் அன்பை அனைவரிடமும் காட்டினார். அவருடைய பரந்து பட்ட அன்பைக் கண்ட தந்தை வியந்தார்.

சிறுவயதிலேயே அருகிலிருக்கும் மலைகளுக்குச் சென்று ஏறி விளையாடுவது இயேசுவுக்குப் பிடித்தமானதாக இருத்தது. சிறுவர்களோடு சண்டையிடாமலும், போட்டியிடாமலும் விளையாடுவது அவருடைய பாணியாய் இருந்தது.

வாரத்தின் கடைசி நாளான ஓய்வு நாளில் எந்த வேலையையும் செய்யாமல் இருக்கும் சட்டத்தை யோசேப்பு கடைபிடித்து வந்தார். அவர் அந்த நாளில் எந்த வேலையும் செய்வதில்லை. தச்சு வேலை, தங்கள் கால்நடைகளைக் குளிப்பாட்டுவது போன்ற வேலைகள் மட்டுமல்லாமல், சிறு சிறு வேலைகளான விளக்கை ஏற்றி வைப்பது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற வேலைகளைக் கூட செய்ய சட்டம் அனுமதிப்பதில்லை. யோசேப்பு இயேசுவுக்கும் அவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தார்.

இயேசுவுக்குப் பிடித்தமான இன்னொரு இடம் தொழுகைக் கூடம். அங்குள்ள குருக்களிடம் ஆலோசனைகளும், அறிவுரைகளும் பழைய ஏட்டுச் சுருள்களில் எழுதப்பட்டிருக்கும் செய்திகளுக்கான விளக்கங்களும் இயேசுக்குத் தேவையாக இருந்தது. எனவே எப்போதெல்லாம் கலந்துரையாடல்கள், விளக்கங்கள் நடந்தாலும் அங்கே தவறாமல் கலந்து கொண்டார். குருக்களுக்குப் பணிவிடைகள் செய்தும் மறைநூல் அறிவை வளர்த்தார். ஆனால் தான் கற்றதையெல்லாம் அப்படியே ஒப்புக்கொள்ள இயேசுவுக்கு மனம் வரவில்லை. சின்ன வயதிலேயே மறைநூல் அறிஞர்களின் பேச்சுக்கும், நடத்தைக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளை உணரும் பக்குவம் வந்திருந்தது. ஏன் என்று கேள்வி எழுப்பும் ஞானம் வந்திருந்தது.

இயேசுவுக்கு பதினோரு வயது நிரம்பியபோது நாட்டில் மிகப்பெரிய கலகம் ஒன்று பிறந்தது. ஆளும் ஏரோது மன்னனுக்கு விரோதமாக யூதாஸ் என்னும் போராளி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் கிளர்ச்சியாளர்கள் வளர்ச்சியடைய ஏரோது விடவில்லை. அவனுடைய குரூரம் விஸ்வரூபமெடுத்து தலைவிரித்தாடியது. கண்களில் கோபத்தின் கடல் கொந்தளித்தது. இரு விழிகளும் எரிமலையாய் தெரிந்தன. ஆணையிட்டான். கிளர்ச்சியாளர்களைச் சிலுவையில் அறைய ஆணையிட்டான். கிளர்ச்சியாளர்கள் பலவந்தமாய் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவருமே அடித்து நொறுக்கப்பட்டனர். கொல்லப்பட்டனர். சிலுவையில் அறையப்பட்டு !. அப்படிச் செத்தவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டாயிரம்.

அந்த நிகழ்வு சிறுவன் இயேசுவின் மனதில் என்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கக் கூடும் ? கிளர்ச்சி செய்தால் மரணம் நிச்சயமென்றா ? அல்லது ஆளும் அரசுக்கு எதிராக யாரும் வாய்திறக்கக் கூடாது என்றா ? அல்லது ஏதேனும் பய உணர்வுகளையா ? தெரியவில்லை. ஆனால் சிலுவை மரணம் என்பது எப்படிப் பட்டது என்பதை நேரில் கண்டறியும் வாய்ப்பு அவருக்கு பதினோரு வயதிலேயே வாய்த்தது !

இப்படிப்பட்ட அனைத்து விதமான கொடுமைகளிலிருந்தும் தங்களை மீட்க ஒரு மீட்பர் வருவார் என்று மக்கள் அனைவரும் நம்பினார்கள். அவர்களுடைய நம்பிக்கையைப் பயன்படுத்தி பலர் தான் தான் மெசியா என்று சொல்லிக் கொண்டு அவர்களிடம் உரையாற்றுவதும், பின் அவர்கள் போலிகள் என்று தெரியவருவதும் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருந்தது. இயேசு சிறுவனாக விளையாடிக்கொண்டிருந்த காலத்திலும், திதேயுஸ் என்னும் ஒருவன் தான் தான் கடவுள், மீட்பர் என்று சொல்லித் திரிந்தான். மக்கள் அவனிடம் ஏதேனும் அருங்குறிகள் செய்து காட்டுமாறு விண்ணப்பம் வைத்தனர். அவன் மக்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஒலிவமலையில் ஏறி நின்று, எருசலேம் தேவாலயத்தின் சுவர் இடிந்து விழட்டும் என்றார். சுவருக்குக் காது கேட்கவில்லை. அது அப்படியே நின்றது. திதேயுஸின் மீட்பர் பிம்பம் உடைந்தது. இந்த செய்திகளெல்லாம் மக்கள் எந்த அளவுக்கு ஒரு மீட்பரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்பதை இயேசுவுக்குப் புரியவைத்தன.

அறிவிலும் ஞானத்திலும் தொடர்ந்து வளந்து வந்த இயேசு பன்னிரண்டு வயதுப் பாலகனானார்.

பாஸ்கா விழாக் காலம்.

இயேசுவின் பன்னிரண்டாவது வயதில் வந்த பாஸ்கா வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும், இயேசுவின் வாழ்க்கைக்கு ஒரு சிறு முன்னுரை போலவும் அமைந்தது.

பாஸ்கா என்பது யூதர்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் ஒரு விழா. அந்த விழாவிற்காக சுற்றிலுமுள்ள எல்லா ஊர்களிலுமிருந்தும் மக்கள் திரண்டு எருசலேம் தேவாலயத்துக்கு வருவது வழக்கம். அந்நாட்களில் வாகன வசதிகள் ஏதும் இல்லாததால் மக்கள் கூட்டம் கூட்டமாக ஒவ்வொரு ஊர்களிலிருந்தும் கால்நடைகள் மற்றும் தேவையான உணவுப் பொருட்களுடன் எருசலேம் நோக்கி பெரும்பாலும் நடந்தே செல்வார்கள். பெரும் பேரணி போல மக்கள் கூட்டம் செல்வதனால் பயணக் களைப்பிலிருந்தும், கொள்ளையர்களின் தாக்குதல் பயத்திலிருந்தும் தப்பிவிடலாம் என்பது தான் அவர்களின் எண்ணம்.

நாசரேத் ஊர் மக்களும் ஒரு நாளைக் குறிப்பிட்டு அந்த நாளில் எருசலேம் செல்வதென்று முடிவு செய்தார்கள். அதன்படி அவர்கள் பயணத்தையும் துவங்கினார்கள். யோசேப்பு, மரியா, இயேசு மூவரும் அந்தப் பயணத்தில் ஈடுபட்டிருந்தனர். இயேசு முதன் முறையாக எருசலேம் தேவாலயத்துக்குச் செல்கிறார்.

பயணம் எருசலேம் தேவாலயத்தை அடைந்தது. மக்கள் திரள் திரளாக வந்து எருசலேம் ஆலயத்தை முற்றுகையிட்டார்கள். இயேசுவும் எருசலேம் ஆலயத்துக்கு வந்தார். எருசலேம் என்னும் புனித நகரம் இயேசுவின் மனதுக்குள் இருந்த ஆன்மீக ஊற்றுகளைத் திறந்து விட்டது மோரியா மலைமீது கட்டப்பட்டிருந்த எருசலேம் தேவாலயத்தைக் கண்டதும் இயேசுவின் மனதுக்குள் சொல்ல முடியாத பரவசம் பாய்ந்தோடியது. அவர் எருசலேம் தேவாலயத்தைப் பயபக்தியுடன் பார்த்தார். அவருடைய பாதங்கள் ஆலய முற்றத்தில் பதிந்தன. ஆலயம் பெருமையடைந்தது. பாலன் எருசலேம் தேவாலயத்தைச் சுற்றி நடந்தார். தான் வந்து சேரவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டோம் என்ற ஒரு எண்ணம் அவருக்குள் நிழலாடியது. ஏதோ ஓர் பூர்வ ஜென்ம ஈர்ப்பு அந்த ஆலயத்தோடு தனக்கு இருப்பதாய் அவர் உணர்ந்தார். ஆலயத்தை நேசிக்கத் துவங்கினார். ஆலயத்தைச் சுற்றி நடந்தார். ஒவ்வோர் இடமாக தன் பாதங்களைப் பதித்தும், தன் கை விரல்களால் தொட்டுத் தடவியும் ஆலயத்தை தனக்குள் குறித்துக் கொண்டார்.

ஆலயத்தின் அழகு வாசலருகே வந்தார். அழகு என்பது அந்த வாசலின் பெயர். யோசேப்பும் குடும்பமும் ஆலயத்துக்குள் நுழைவதற்கான வரிப் பணத்தைச் செலுத்தி விட்டு ஆலயத்துள் நுழைந்தார்கள். எருசலேம் தேவாலயம் இருந்த யூதேயா சுதந்திர நாடாக இல்லாததால் ஆலயத்துக்குள் செலவிடுவதற்கென சீசரின் உருவம் பொறித்த நாணயம் இருந்தது. தங்களிடம் இருக்கும் வெள்ளியையோ, பொன்னையோ அந்த நாயணமாக மாற்றி தான் ஆலயத்துள் செலவிட முடியும். அந்த பணம் மாற்றுவதற்கென தனியே ஆட்கள் கடைவிரித்திருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் தலைமைக் குருக்களின் ஆட்களோ, அல்லது ஆளுநரின் ஆட்களோ தான். அவர்கள் பாதிக்குப் பாதி பணம் கொடுத்து கொள்ளை லாபம் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

‘ஆலயத்துக்குள் எதற்கு பணம் தேவை ? கடவுளை வழிபட அல்லவா ஆலயத்துக்கு வருகிறோம் ?’ இயேசுவின் கேள்விக்கு யோசேப்பு விளக்கம் கொடுத்தார்.

‘ஆலயத்தில் பலியிடும் வழக்கம் இருந்தது. பல்வேறு காரணங்களுக்காக, வெள்ளைப் புறாக்களையோ, ஆடுகளையோ ஆலயத்தில் பலியிடுவார்கள். அப்படிப் பலியிடும் பொருட்களை ஆலயத்தில் தான் வாங்க வேண்டும். அதுவும் மிக மிக அதிக விலை கொடுத்து ! அந்த பணத்திலும் ஒரு நல்ல சதவீதம் அதை நடத்த அனுமதிக்கும் ஆலய தலைமைக் குருவுக்கோ, ஆளுநரின் ஆட்களுக்கோ தான் செல்லும். இதெல்லாம் இங்கே காலம் காலமாக நடக்கும் வழக்கம் தான். ‘

இயேசுவுக்கு யோசேப்பின் பதில் திருப்தி தரவில்லை. ஏன் ஆலயத்தில் பலியிடவேண்டும் ? ஆண்டவரின் ஆலயத்தில் மாமிசம் கருகும் வாசமும், இரத்தம் ஒழுகும் வாசமும் தேவையா ? ஏழைகள் ஏன் தங்கள் பணத்தைச் செலவிட்டு காணிக்கை செலுத்த வேண்டும் ? இதையெல்லாமா கடவுள் எதிர்பார்க்கிறார் ? முதன் முதலாக ஆலயத்தில் நுழைந்து ஆலயத்தின் நிலையைப் பார்த்த இயேசுவின் மனதுக்குள் கேள்விகள் வட்டமடித்தன.

இயேசுவின் தாயும், தந்தையும் கூட்டத்தினருடன் கலந்து விழா நிகழ்ச்சிகளிலும், வழிபாடுகளிலும் ஈடுபட, சிறுவன் இயேசு மட்டும் தனியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.
ஆலயத்தில் அன்று எங்கு பார்த்தாலும் குருக்களின் நடமாட்டம். ஏட்டுச் சுருளைக் கையில் ஏந்தி நீளமான ஆடைகள் அணிந்து உலாவிக் கொண்டிருந்தார்கள் அனைவரும். இயேசுவுக்கோ மனதுக்குள் கேள்விகள் துருதுருத்துக் கொண்டிருந்தன. இவற்றுக்கெல்லாம் சரியான விளக்கம் எங்கிருந்தேனும் வாங்க வேண்டும். எப்போதும் எருசலேம் ஆலயத்துக்கு வருவது சாத்தியமில்லை. எனவே இப்போதே யாரிடமேனும் விவாதிக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் இயேசு ஆலயத்துள் நடந்தார்.
ஆலயத்தின் ஒரு பிரிவில் மறைநூல் அறிஞர்களும், குருக்களும் வேதநூல்களைப் பற்றியும், சட்டங்களைப்பற்றியும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். எல்லாரும் வயதிலும், அனுபவத்திலும் தலை நரைத்தவர்கள். இயேசுவும் அவர்களுடைய கூட்டத்தில் சென்று அமர்ந்து கொண்டார்.

அறிஞர்கள் தங்களிடையே வந்து அமர்ந்த சிறுவனை வினோதமாய்ப் பார்த்தார்கள்.

‘என்ன தம்பி, வழி தப்பி வந்துவிட்டாயா ? வெளியே போய் விளையாடு. இது பெரியவர்கள் உரையாடும் இடம்’ ஒருவர் சொன்னார்.

‘பெரியவர் என்பதை எதை வைத்து அளவிடுகிறீர்கள் ? வயதை வைத்தா ? இல்லை புரிந்து கொள்ளும் திறனை வைத்தா ? புரிந்து கொள்ளும் திறனை வைத்தென்றால் அது எனக்கு இருக்கிறது’ இயேசு சொன்னார். அவர்களால் பதில் பேச முடியவில்லை. சிறுவன் இயேசுவை அவர்கள் வியப்புடன் பார்த்தார்கள்.

‘எதைப் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறாய் ? உன்னால் புரிந்து கொள்ள முடியாது’

‘உண்மை தான் சில விஷயங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. காலங்காலமாக எல்லா இறைவாக்கினர்களும் அன்பைப் போதித்துக் கொண்டிருந்த பூமி இது. ஆனால் ஆலயத்தில் நாணயம் மாற்றுமிடத்திலும் ஏழைகள் ஏய்க்கப் படுகிறார்கள், பலிகள் இடுவதை ஆலயம் கட்டாயமாக்கியது போல் தோன்றுகிறது. புறாக்களை வெட்டவேண்டுமென்றும், ஆடுகளை பலியிட வேண்டும் என்றுமா ஆமோஸ் இறைவாக்கினரும், எரேமியா தீர்க்கத்தரிசியும் முழங்கினார்கள் ? எனக்கு இவையெல்லாம் புரியவில்லை’ இயேசு சொல்ல கூட்டம் அதிர்ச்சியடைந்தது.

பன்னிரண்டு வயதுப் பாலகனுக்கு இறைவாக்கினர்களைப் பற்றித் தெரிந்திருக்கிறது ! ஆலய நிகழ்வுகள் பற்றித் தெரிந்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கங்களுக்கு எதிராகப் பேசும் துணிச்சல் இருக்கிறது என்று வியந்தார்கள். ஆனால் அவர்களிடம் அவற்றுக்கான பதில் இல்லை.

இயேசு அத்துடன் நிற்கவில்லை. கூடி இருந்த மக்கள் கூட்டம் எல்லாம் அமைதியாய் கைகட்டி மறை நூல் அறிஞர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்க இயேசு தொடந்து கேள்விகள் கேட்டார்..

‘ஏன் அந்தச் சட்டம் இருக்கிறது ? அந்தச் சட்டத்தினால் என்ன நன்மை ? அப்போதைய காலகட்டத்தில் வரையப்பட்ட சட்டங்கள் இந்த காலத்துக்குப் பொருந்துமா ?’ மறைநூல் அறிஞர்கள் தங்கள் வாழ்நாளில் அப்படியெல்லாம் யோசித்துக் கூட பார்த்ததில்லை. எது எழுதப்பட்டிருக்கிறதோ, அதை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவித்துக் கொண்டிருந்தவர்களால் இயேசுவின் அறிவு சார் வேள்விகளுக்குப் பதில் கூற முடியவில்லை. இயேசு நிறுத்தவில்லை, எதிரே இருப்பவர்கள் தங்கள் வாழ்நாளில் பெரும்பாகத்தை சட்டங்களைக் கிரகிப்பதில் செலவிட்டவர்கள் என்பதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. எல்லா சட்டங்களிலும் இருந்த நியாயமின்மையைச் சுட்டிக் காட்டினார். அவர்களுடைய விவாதம் சூடு பிடித்தது. திருப்பிக் கேள்விகள் கேட்டவர்களுக்கெல்லாம் தயங்காமல் விளக்கமளித்தார். ஆலயத்தில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்த இயேசு தன் தாயையும், தந்தையையும், ஊரையும் மறந்து விட்டார். உரையாடலுக்குள் மூழ்கினார்.

இயேசு ஆலயத்திலேயே தங்கி விட்ட செய்தி தெரியாத மரியாவும், யோசேப்பும், நாசரேத் ஊர் மக்களும் பாஸ்கா விழா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தங்கள் ஊருக்குத் திரும்பினார்கள். சிறுவன் இயேசுவும் கூட்டத்தில் விளையாடிக் கொண்டிருப்பான். பக்கத்து வீட்டுச் சிறுவர்களுடன் சேர்ந்து தங்களுக்கு முன்னால் சென்றிருப்பான் உணவு வேளை வரும்போது தங்களைத் தேடி வருவான் என்று அவர்கள் நினைத்தார்கள்.

ஆனால் அது நடக்கவில்லை. அன்று இரவுவரை இயேசு தாயைத் தேடி வரவில்லை. மரியாவின் பதட்டம் அதிகரித்தது. மறுநாள் காலையில் முதல் வேலையாக பயணிகளிடையே இயேசுவைத் தேடினார்கள். உறவினர்கள், நண்பர்கள், சிறுவர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள்.. அனைவரும் விசாரிக்கப் பட்டார்கள். ஆனால் யாரும் இயேசுவைப் பார்க்கவில்லை.

மரியாவின் கண்களில் கண்ணீர் வழிய மனசுக்குள் படபடப்பு வந்து ஒட்டிக் கொண்டது. யோசேப்பு அவளைப் சமாதானப் படுத்தி எருசலேமுக்குச் சென்று தேட முடிவெடுத்தார். எருசலேமில் எங்கேனும் வழி தெரியாமல் இயேசு திணறிக் கொண்டிருக்கக் கூடும் என்று அவர் கருதினார்.

‘நீங்கள் எல்லோரும் ஊருக்குச் செல்லுங்கள். நாங்கள் எருசலேமுக்குத் திரும்பச் சென்று இயேசு அங்கே இருக்கிறானா என்று பார்த்து வருகிறோம். ஒருவேளை நீங்கள் அவனைக் கண்டால் வீட்டிலேயே இருக்கச் சொல்லுங்கள். ‘ பயணிகளிடம் கூறிவிட்டு யோசேப்பும், மரியாவும் எருசலேமை நோக்கி ஓடினார்கள்.

எருசலேமிற்கு வந்து எருசலேம் நகரைச் சுற்றிச் சுற்றி தேடினார்கள். விளையாட்டு திடல்கள், நதிகள், அழகிய இயற்கைக் காட்சிகள் அடங்கிய இடங்கள் எல்லா இடங்களிலும் தேடினார்கள். எங்கும் இயேசு இல்லை.

கடைசியாக எருசலேம் ஆலயத்துக்குள் நுழைந்தார்கள். ஆலயத்துக்குள் இயேசு இருப்பார் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. ஆலயத்துக்குள் அவர்கள் நுழைந்தபோது அங்கே ஒரு பெரிய கூட்டம் இருந்தது. அவர்கள் நடுவே சிறுவன் இயேசு !

‘அது யார் ? நமது மகன் தானே ?’ மரியா ஆனந்தமாய்க் கேட்டாள்.

‘ஆம். ஆனால் இந்த பெரியவர்களின் சபையில் அவன் என்ன செய்கிறான் ?’ யோசேப்பு குழம்பினார்.

அவர்கள் கூட்டத்தை நெருங்கினார்கள். நெருங்க நெருங்க இயேசுவின் தெளிவான குரலும், அவருடைய கேள்விகளும், விளக்கங்களும் எல்லாம் பெற்றோரின் காதுகளில் விழுந்தன.

‘இவனுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் ? இவன் இதுவரை இங்கே வந்ததேயில்லையே ?’ தந்தை வியந்தார். மரியாவோ மகனைப் பார்த்த சந்தோசத்தில் அவனை நோக்கி ஓடினாள். கட்டியணைத்து முத்தமிட்டாள்.

‘மகனே… ஏன் இப்படிச் செய்துவிட்டாய் ? எங்களைத் தனியே அலையவிட்டு விட்டாயே ? எவ்வளவு கவலைப்பட்டோம் தெரியுமா ?’ மரியா ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.

‘ஏன் அம்மா என்னைத் தேடினீர்கள் ?’

இயேசுவின் கேள்வி மரியாவைத் திடுக்கிட வைத்தது. சட்டென்று ஓரடி விலகினாள். முகத்தில் அழுகையும், சோர்வும், புரியாமையும் தெரிய பேசினாள்.

‘அம்மா அப்பாவை தவிக்க விட்டுவிட்டு இங்கே கூட்டத்தில் வந்து பேசிக்கொண்டிருக்கிறாயே ? வீட்டுக்குச் போக வேண்டாமா ? ‘

‘வீட்டில் தானே அம்மா நிற்கிறேன். என் தந்தையின் வீட்டில் தானே நிற்கிறேன் ! என் தந்தையின் அலுவல்களில் தானே ஈடுபட்டிருக்கிறேன் !!’ இயேசு சொன்னார். மரியா தடுமாறினாள். அவளுக்கு இயேசுவின் பதில் புரிந்தது போலவும், புரியாதது போலவும் இருந்தது.

இயேசு மரியாவின் முகத்தைப் பார்த்தார். அவளுடைய கன்னங்களில் வழிந்த கண்ணீர்த் துளிகளைப் பார்த்தார்.

‘வாருங்கள் அம்மா.. வீட்டுக்குப் போகலாம்’ அமைதியாய்ச் சொன்னார்.

தாய் இயேசுவை அணைத்துக் கொண்டார். அவர்கள் மூவரும் ஆலயத்தை விட்டு வெளியேறினார்கள். கூட்டத்தினர் மொத்தமும் இயேசுவையும், அவருடைய குடும்பத்தினரையும் வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தனர். அவர்கள் நாசரேத் நோக்கி நடக்கத் துவங்கினர். மரியாவின் மனதுக்குள் இயேசு சொன்ன வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டே இருந்தன. மகன் தவறிழைக்கிறானா, தான் தவறிழைக்கிறோமா அல்லது இரண்டு பேருமே சரியாய் தான் இருக்கிறோமா என சரமாரியான கேள்விகள் மரியாவுக்குள் கண்மண் தெரியாமல் ஓடிக் கொண்டே இருந்தன.

அதன்பின் இயேசு தன் தந்தையுடன் தச்சுத் தொழில் கற்கத் துவங்கினார். வருடங்கள் ஓடிக் கொண்டிருந்தன. இயேசுவின் தந்தை யோசேப்பு மறைந்தார்.

இயேசுவின் மேல் குடும்பத்தைக் காப்பாற்றும் கடமை வந்தது. தச்சுத் தொழிலைச் செய்யத் துவங்கினார். நாசரேத் நகர்வழியாகச் செல்லும் பயணிகளிடமெல்லாம் பல்வேறு விஷயங்களைப் பேசுதல் அவருடைய வழக்கமாக இருந்தது. வாழ்வியல் பற்றியும் துன்பியல் பற்றியும் சொன்ன பல்வேறு வேதங்கள், மதங்களின் அடிப்படைக் கருத்துக்களையெல்லாம் அவர் ஆர்வமுடன் அறிந்து கொண்டார். இந்தியாவின் வேதநூல்கள், சூத்திரங்கள், மஹாபாரதம் உட்பட பல்வேறு நாடுகளின் முக்கியமான நூல்களை அவர் வாசித்து வளர்ந்தார். வாழ்க்கை என்பது மாயை. கடலில் விழுந்துக் கரைந்து போகும் ஒரு துளி மழை நீர் போன்றதே வாழ்க்கை, கதிரவன் வந்து தின்று விட்டுப் போகும் பனித்துளியே வாழ்க்கை என்னும் தத்துவங்கள் அவரை வசீகரிக்கவில்லை. அவருடைய பார்வை எப்போதுமே ஏழைகளைச் சார்ந்தும், அவர்களுக்கு உள்ளன்போடு உதவி செய்யும் சிந்தனைகளைச் சார்ந்துமே இருந்தன.

எருசலேம் தேவாலயத்தில் பதினோரு வயதில் அவர் கண்ட காட்சி ஆரம்பம் என்றால் தினசரி வாழ்வில் அவர் அதன் விஸ்வரூபத்தைக் கண்டு வந்தார். சமாரியர்கள், யூதர்கள் பிரிவினையும். மக்களை மத அடிமைத்தனத்தில் மூழ்கடிக்கச் செய்யும் மதவாதிகளின் அடக்குமுறையும். பயத்தில் விழவைக்கும் அரசியலும் அவரை மிகவும் பாதித்தன. இவற்றுக்கு எதிராக தன்னுடைய குரல் உயரவேண்டும் என்றும். தன்னுடைய வாழ்வின் அர்த்தமே சமுதாய அடித்தட்டு மக்களின் மனதில் ஏற்படக் கூடிய மறுமலர்ச்சியில் தான் அடங்கியிருக்கிறது என்பதும் அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையாய் இருந்தது.

அவருடைய பணிவாழ்வின் அடிப்படை புரட்சி செய்து அரசைப் பிடிப்பதில் இருக்கவில்லை. தெளிவான சிந்தனையை அவர் வகுத்துக் கொண்டார். மாற்றம் என்பது மனங்களில் வருவது. போர்க்களத்தில் பெறப்படுவதல்ல. மக்களுக்கு உண்மையை அறிந்து கொள்ளும் ஆர்வத்தையும், வாய்ப்பையும் வழங்க வேண்டும். உண்மை உணரும் மக்கள் தங்கள் அடிமைத்தனங்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். போதனையின் முக்கிய இரண்டு அம்சமே கடவுளை நேசி, மனிதனை நேசி என்பதாக இருக்கவேண்டும் என்று தனக்குள் தெளிந்த சிந்தனைகளை எழுதிக் கொண்டார். தன்னளவில் தெளிவற்ற மனிதன் பிறரைத் தெளிய வைத்தல் சாத்தியமில்லை என்பதை அவர் அறிந்திருந்தார்.

பன்னிரண்டு வயது முதல் பதினெட்டு ஆண்டுகள் தச்சுத் தொழிலிலும், உலகைப் படிப்பதிலும் ஆர்வம் காட்டிய அவருடைய தனி வாழ்க்கை, முப்பதாவது வயதுடன் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் இயேசுவின் தந்தை யோசேப்பு மறைந்து விட்டிருந்தார். தன்னுடைய பணி உளிகளைக் கொண்டு மரங்களைச் செதுக்குவதல்ல, சிந்தனைகளைக் கொண்டு மனங்களைச் செதுக்குவது என்று தனது முப்பதாவது வயதில் முடிவெடுத்தார் இயேசு. அன்னையையும், தொழிலையும் வீட்டிலேயே விட்டு விட்டு வீதிக்கு வந்தார் !

அதே நேரத்தில் எருசலேமில் ஒரு சலசலப்பு. யோவான் என்னும் மனிதர் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார். மக்களை தங்கள் பாவ வழிகளை விட்டு விலகி நீதியான பாதைக்கு வர அழைப்பு விடுக்கிறார். விரைவில் மீட்பர் வரப்போகிறார் என்று முழங்குகிறார். இயேசுவின் காதுகளில் அந்த செய்தி விழுந்தது. அவரைச் சந்தித்து தன்னுடைய பணி வாழ்வை ஆரம்பிப்பதே சரியாக இருக்கும் என்று முடிவெடுத்த இயேசு யோவானைத் தேடிப் புறப்பட்டார்.

மக்கள் கூட்டம் யோவானை மொய்க்கத் துவங்கியது. கூட்டம் கூட்டமாக மக்கள் அவரிடம் வந்து தண்ணீரில் மூழ்கி யோவானின் குழுவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

அந்த யோவான் இயேசுவின் உறவினர் !

இயேசு வரலாறு 6 : பாலைவனத்தில் கூக்குரல்

 

அது போந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்த காலம். அன்னா, கயபா இருவரும் மிகவும் செல்வாக்குடைய தலைமைக் குருக்களாக இருந்தார்கள். யூதேயா ரோமப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்தது, ரோமப் பேரரசை அப்போது திபேரியு சீசர் அரசாண்டு வந்தார்.

ஆலயக் குருக்களாகப் பணியாற்றிவந்த செகரியாவுக்கும், எலிசபெத்துக்கும் வயதான காலத்தில் கடவுளின் அருளினால் பிறந்தவர் தான் இந்த யோவான். அவர் ஒட்டக ரோமத்தினால் ஆன ஆடையை அணிந்து கொண்டு, தோல் கச்சையினால் இடையை வரிந்து கட்டிக் கொண்டு வெட்டுக்கிளிகளையும், காட்டுத் தேனையும் உண்டு வந்தார். அவருடைய பணி கடவுளுக்கான வழியில் மக்களைச் செலுத்துவதே.

அவர் யோர்தான் நதிக்கரையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சுற்றித் திரிந்து உரத்த குரலில் ‘மனம் திரும்புங்கள். நீங்கள் செல்லும் வழி கோணலானது. கடவுளுக்கான வழியில் திரும்புங்கள். அதற்கு அடையாளமாக இந்த யோர்தான் நதியில் மூழ்கி எழுங்கள். இது தான் நீங்கள் மனம் திரும்பியதற்கான அடையாளம். என்னிடம் வாருங்கள் உங்களுக்கு நான் திருமுழுக்கு செய்து வைக்கிறேன்’ என்று முழங்கிக் கொண்டிருந்தார்.

அவருடைய துணிச்சல் அசாத்தியமானது. அவருடைய எச்சரிக்கை சாதாரண மக்களையும் அவர்களுடைய தவறான பாதையையும் நோக்கி மட்டும் இருக்கவில்லை. யூதேயாவின் ஆளுளர் போந்தியு பிலாத்துவையும் எச்சரித்தார், ஏரோது மன்னனின் மகனை நோக்கியும் எச்சரிக்கை வீசினார், ரோமப் பேரரசர் சீசரை நோக்கியும் எச்சரிக்கை விடுத்தார். அவருடைய எச்சரிக்கைக்கு போலித்தனமான மதத் தலைவர்கள் யாருமே தப்பவில்லை.

யோர்தான் நதி பல சரித்திர முக்கியத்துவங்களைக் கொண்டது. இந்த யோர்தான் நதியில் மூழ்கச் செய்து தான் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எலிசா என்னும் தீர்க்கத் தரிசி படைவீரன் ஒருவனின் தொழுநோயைக் குணமாக்கியிருந்தார். இந்த யோர்தான் நதி தான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இஸ்ரயேல் மக்கள் நடந்தபோது தண்ணீர் இரண்டு பக்கங்களிலும் விலகிக் கொள்ள பாதை அமைத்துக் கொடுத்தது. அதே யோர்தான் நதியில் இப்போது யோவான் திருமுழுக்கு வழங்கிக் கொண்டிருந்தார்.

சிலர் அவரைப் பைத்தியக் காரனாகப் பார்த்தார்கள். தலைமைக் குருக்களும், மறை நூல் அறிஞர்களும் அவரைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் ஏழை எளிய மக்களும், கடவுளின் மேல் பக்தியும் , பயமும் கொண்டிருந்த மக்களும் யோவானிடம் சென்று திருமுழுக்குப் பெற்றார்கள். யோவானின் பெயர் நகரம் முழுவதும் பரவியது. அவரிடம் வரும் மக்களின் கூட்டமும் அதிகரித்தது.

தங்களை விட நீதிமான்கள் யாருமே இல்லை என்று ஆணவத்தில் நடந்த பரிசேயர்களும், நாத்திகர்களான சதுசேயரும் கூட யோவானிடம் வரத் துவங்கினர். அவர்களைக் கண்ட யோவான் ஆச்சரியமடைந்தார்.

‘விரியன் பாம்புக் குட்டிகளே ! கடவுளின் சினத்திலிருந்து தப்பிக்கும் வழியை நீங்கள் கண்டு கொண்டீர்களே ! வாருங்கள். திருமுழுக்குப் பெறுங்கள். திருமுழுக்கு என்பது வெறும் ஆரம்பம் தான். நீங்கள் உங்கள் தீய வழிகளை விட்டு விட்டு நீதியோடும், நியாயத்தோடும் நடக்க வேண்டும். அது தான் கடவுளுக்குப் பிடித்தமானது’ யோவான் குரலுயர்த்திச் சொன்னார்.

‘நீர் தான் கடவுள் அனுப்பிய இறைவாக்கினரா ?’

‘நான் கடவுளின் இறைவாக்கினர் அல்ல. கடவுளின் வருகையை ஆயத்தம் செய்ய வந்திருப்பவன்’ யோவான் சொன்னார்.

‘கடவுளின் வழியை ஆயத்தம் செய்யவா ? அப்படியானால் இன்னொருவர் வருவாரா ?’

‘ஆம்.. எனக்குப் பின்னால் ஒருவர் வருவார். அவருடைய காலணிகளைத் தொடும் தகுதி கூட எனக்கில்லை’

‘அவர் எங்கள் முற்பிதா ஆபிரகாமை விடப் பெரியவரா ?’

‘மூடர்களே. கடவுள் நினைத்தால் இந்தக் கற்களிலிருந்து கூட ஆபிரகாமுக்குச் சந்ததிகள் தோன்றச் செய்வார். எனவே கடவுளின் அருள் பெற்ற ஆபிரகாமை வணங்குவதை விடுத்து, அவருக்கு அந்த அருளைக் கொடுத்தக் கடவுளை வணங்குங்கள். கடவுளின் உண்மையான மகன் இனிமேல் தான் வரப் போகிறார்.’

‘அவர் யார் ? எப்போது வருவார்’ வந்திருந்தவர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பினார்கள்.

‘அவர் ஒளி. நான் ஒளிக்குச் சான்று பகர வந்தவன். அவர் வரும்போது நீங்கள் அவரை அறிந்து கொள்வீர்கள்’ யோவான் சொன்னார்.

‘நாங்கள் செய்ய வேண்டியது என்ன ?’

‘ஏற்கனவே மரத்தின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நல்ல கனி கொடாத மரம் எல்லாம் வெட்டுண்டு தீயில் போடப்படும். எனவே நல்ல கனி தரும் நல்ல மரங்களாய் வாழுங்கள்’ யோவான் சொன்னார்.

‘எங்களுக்குப் புரியவில்லை. விளக்கமாகச் சொல்லுங்கள்’ மக்கள் பணித்தார்கள்.

‘நல்ல கனி என்பது நல்ல செயல்கள். உங்களிடையே பணக்காரரும் இருக்கிறீர்கள் வறியவர்களும் இருக்கிறீர்கள். பணக்காரர் பணக்காரரோடும், ஏழைகள் ஏழைகளோடும் மட்டுமே சகவாசம் செய்கிறீர்கள். இது நல்லதல்ல. உங்களில் இரண்டு அங்கி வைத்திருப்பவர்கள் அதில் ஒன்றை அங்கியே இல்லாதவனுக்குக் கொடுங்கள். சுவையான உணவை உண்டு வாழ்பவர்கள், தேவையான உணவு கூட இல்லாதவனோடு பகிர்ந்து கொள்ளுங்கள். பகிர்தலே உன்னதநிலை’ யோவான் விளக்கினார்.

யோவானின் பெயர் எங்கும் பரவிவிட்டது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவரிடம் திருமுழுக்குப் பெறத் துவங்கினார்கள். பல்வேறு பணி செய்பவர்களும் அவரிடம் வந்து தாங்கள் செய்யவேண்டியது என்ன என்று அவரிடம் கேட்கத் துவங்கினார்கள்.

வரி வசூலிப்பவர்கள் அவரிடம் வந்து,’ போதகரே.. நாங்கள் என்ன செய்யவேண்டும் ?’ என்று கேட்டார்கள்.

‘நீங்கள் வரி வசூலிப்பவர்கள். உங்கள் பணியை நேர்மையுடன் செய்யுங்கள். குறிப்பிட்ட வரிக்கு மேலாக வசூலிக்காதீர்கள்.’ என்றார்.

படைவீரர்கள் அவரிடம் வந்தார்கள். ‘போதகரே எங்களுக்கும் அறிவுரை வழங்குங்கள்’

‘நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள். யாரையும் மிரட்டிப் பணம் பறிக்காதீர்கள். வலிமையும், அதிகாரமும் இருக்கிறது என்ற காரணத்தினால் ஏழைகளை வாட்டாதீர்கள். கிடைக்கும் ஊதியமே போதும் என்றிருங்கள்’ என்றார்.

யோவானுடைய உறுதியான போதனைகளையும், தெளிவான வார்த்தைகளையும் கேட்ட மக்கள் இவர் தான் கடவுளிடமிருந்து வந்திருக்கும் மீட்பர் கிறிஸ்து என்று நினைத்தார்கள். எனவே மீண்டும் மக்கள் அவரிடம் சென்று,

‘போதகரே.. நீர்தான் மீட்பரா ?’ என்று கேட்டார்கள்.

‘இல்லை. நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லிவிட்டேன். நான் கிறிஸ்துவுமல்ல, இறைவாக்கினருமல்ல, கடவுளின் வழியை ஆயத்தம் செய்யும் ஒரு குரல் நான். நான் நீரினால் தரும் திருமுழுக்கை எனக்குப் பின் வருபவர் தூய ஆவி என்னும் நெருப்பினால் தரும் வல்லமை படைத்தவர். தூற்றுக் கூடை அவருடைய கைகளில் இருக்கிறது. அவர் அதைக் கொண்டு கோதுமையையும், பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைக் களஞ்சியத்திலும், பதரை நெருப்பிலும் போட்டுச் சுட்டெரிப்பார்’ என்றார்.

யோவான், இயேசுவை விட ஆறு மாதம் முன்னால் பிறந்தவர். யோவான் கருவுற்றிருக்கும் போதே இயேசுவின் தாய் யோவானின் சிறப்பை அறிந்து கொண்டு அவருடைய தாய் எலிசபெத்தைச் சென்று வாழ்த்தியிருந்தார். யோவானின் திருமுழுக்குப் பணி மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. இயேசுவிற்கு அப்போது வயது முப்பது.

தன்னுடைய பணிவாழ்வை ஆரம்பிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை இயேசு உணர்ந்தார். அவர் நேராக யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த யோர்தான் நதிக்குச் சென்றார். யோவான் நதியில் நின்று மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தபோது இயேசு அவருக்கு முன்னால் வந்து நின்றார்.

யோவான் இயேசுவைப் பார்த்தார். திடுக்கிட்டார். தன் உறவினர் இயேசுவை யோவான் நீண்ட பல வருடங்களுக்குப் பின் இப்போது தான் பார்க்கிறார். இயேசுவின் பிறப்பைப் பற்றி தாய் எலிசபெத் மூலமாக கேட்டு அறிந்திருந்தார் யோவான். இயேசுவையும் அவருடைய தெளிவான முகத்தையும், தீர்க்கமான கண்களையும் கண்ட அவருக்குள் பரவச நதி பாய்ந்தோடியது. இயேசுவுக்குத் திருமுழுக்கு வழங்க யோவான் தயங்கினார்.

‘எனக்கு திருமுழுக்கு வழங்குங்கள். மக்களை வழிநடத்த வேண்டிய நான் திருமுழுக்குப் பெறாமல் இருப்பது நீதியல்ல. கடவுளுக்கு ஏற்புடைய அனைத்தையும் நான் முதலில் நிறைவேற்றியாக வேண்டும். அதற்கு என்னை அனுமதியுங்கள்’ இயேசு புன்னகைத்தார்.

யோவான் தடுமாறினார். ‘ உமக்கே திருமுழுக்குத் தரும் பெருமையை எனக்குத் தந்தீரே !…’ என்று தழுதழுத்தார்.

அப்போதே இயேசுவுக்குத் திருமுழுக்குக் கொடுத்தார்.

இயேசு யோர்தானை விட்டுக் கரையேறினார். யோர்தான் ஆற்றைச் சுற்றிலும் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. இயேசு நதியை விட்டுக் கரையேறுவதையே யோவான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

திடீரென வானத்தில் மேகங்கள் விலகின. ஒரு பெரிய விரிசல் வானத்தில் தோன்றுவதைக் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கடவுளின் தூய ஆவியானவர் ஒரு புறாவின் வடிவில் இறங்கி இயேசுவுக்குள் கலந்தார். மக்கள் பயத்துடனும், திகைப்புடனும், வியப்புடனும் அந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

விரிசல் விழுந்த வானத்திலிருந்து கடவுளின் குரல் ஒலித்தது. ‘இவரே என் அன்பார்ந்த மகன். இவரில் நான் பூரிப்படைகிறேன்’.
கடவுளின் குரலைக் கேட்ட மக்கள் பரவசமடைந்தார்கள்.

இயேசுவின் பணிவாழ்வு அங்கே ஆரம்பமானது. இயேசுவின் பணிவாழ்வுக்கான வருகையைக் கண்டபின் யோவான் இன்னும் அதிக உற்சாகத்துடன் போதிக்கத் துவங்கினார்.

இயேசு வரலாறு 7 : மூன்று சோதனைப் பேய்கள்

Image result for jesus tempted in the desert

யோவானிடம் திருமுழுக்குப் பெற்ற இயேசு தன்னுடைய பணிவாழ்வை ஆரம்பித்தார். பணிவாழ்வைத் துவங்கும் முன் அவர் பாலை நிலத்திற்குச் சென்றார். முப்பது ஆண்டுகாலம் பெற்றோருக்குப் பணிந்திருந்து அவர்களுடைய பணிகளில் உதவியாய் இருந்த இயேசு வானகத் தந்தையான கடவுளிடம் வேண்டுவதை மட்டும் எப்போதும் நிறுத்தியதில்லை. அதுவும் தனிமையில் அமைதியான இடத்தில் அமர்ந்து வேண்டுவது அவருக்கு மிகவும் பிடித்தமான செயல். செபம் செய்வதை ஒரு மிகப் பெரிய தியானம் போல செய்வது இயேசுவின் வழக்கம். இந்தமுறையும் இயேசு தனிமையாக செபிக்கச் சென்றார். இந்தமுறை அவருக்கு மிக முக்கியமான விஷயங்களுக்காகக் கடவுளிடம் உரையாடவேண்டியிருந்தது. எனவே அவர் சற்றுத் தொலைவில் ஆள்நடமாட்டம் அறவே இல்லாத பாலை நிலத்தில் ஒரு தனிமையான இடத்தைக் கண்டுபிடித்து கடவுளோடு உரையாடி செபம் செய்யத் துவங்கினார்.

தன்னுடைய பணிவாழ்வை எப்படித் துவங்குவது ? எங்கே துவங்குவது என்று அவருக்குள் கேள்விகள் நிறைய இருந்தன. அமைதியாகக் கண்களை மூடி, கடவுளோடு ஒன்றிக்கத் துவங்கிய இயேசுவிற்கு நேரம் போவதே தெரியவில்லை. ஏன் நாட்கள் போவது கூடத் தெரியவில்லை. நாட்கள் வாரங்களாகி, மாதமாகி நாற்பது நாட்கள் அவர் கடவுளுடன் ஒன்றித்திருந்தார். நாற்பதாவது நாள் முடிவுற்றபோது இயேவுவை சோர்வு வந்து தொற்றிக் கொண்டது. நாற்பது நாட்களாக கடவுளுடன் ஒன்றித்திருந்தபோது தோன்றாத பசியும் சோர்வும் அவரை சட்டென்று வந்து பிடித்துக் கொண்டன. அவருக்குள் ஒரு சஞ்சலம் உருவானது. அந்த சஞ்சலச் சாத்தான் அவருக்கு முன்பாக வந்து குதித்தான்.

‘இயேசுவே… நான் வியக்கிறேன். நீண்ட நெடிய நாற்பது நாட்கள் கடவுளோடு உரையாடி, செய்யவேண்டிய செயல்களைப் பற்றியெல்லாம் முடிவெடுத்து விட்டீர்கள். நல்லது. நீர் அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்யும் வல்லமையையும் கடவுள் உம்மிடம் கொடுத்திருக்கிறார். அப்படித்தானே ?’

‘ஆம். நான் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றித் தெளிவடைந்து விட்டேன். இறைவல்லமையை நிறைவாகப் பெற்றுவிட்டேன்’

‘அப்படியானால் இன்னும் ஏன் பசியால் வாடிக் கொண்டிருக்கிறீர் ? ஏதேனும் உண்ணவேண்டியது தானே ?’

‘உண்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை’

‘அதிசயங்களைச் செய்யும் வல்லமையைக் கையில் வைத்துக் கொண்டு இதென்ன தேவையற்ற பேச்சு ? நீர் நினைத்தால் உணவு வரும். இதோ இந்த வெண்கற்களைக் கூட நீர் நினைத்தால் இப்போது அப்பமாக மாற்றி உண்ணலாமே ?’

‘அற்புதங்களை நான் என்னுடைய சுய விருப்பத்துக்காக வீணடிப்பதில்லை. நான் செய்ய வந்திருப்பது சொகுசுப் பணியல்ல. கடினமான பணி. சோதனைகளைத் தாங்கும் வல்லமை எனக்கு இருக்கிறது’

‘உடம்பில் வலு இருந்தால் தானே உம்மால் பணி செய்ய முடியும் ? இப்போதைக்கு இந்த கற்களை அப்பமாக்கி உண்டு கொள். அதன் பின் மற்றதைப் பற்றிப் பார்த்துக் கொள்ளலாம்’

‘மனிதன் உயிர்வாழ்வது அப்பத்தினால் மட்டுமல்ல. கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றினாலும் உயிர் வாழ்வான். என்று மறை நூல் சொல்லியிருக்கிறதே. நான் இப்போது இந்த கற்களை அப்பமாக்கி உண்ணாமலிருந்தாலும் இறந்து விடமாட்டேன். எனக்குள் கடவுளின் வார்த்தை இருக்கிறது’ இயேசு சஞ்சலப் பேயை அடக்கினார்.

அதன்பின் இயேசு எருசலேம் தேவாலயத்துக்குத் திரும்பினார். ஆலயத்தின் உயர்ந்த பகுதி ஒன்றில் போய் நின்று சுற்றிலும் பார்த்தார். தான் பணி செய்யவேண்டிய பகுதிகளை அவருடைய கண்கள் பார்த்தன. தான் கடவுளின் வல்லமையுடன் வந்திருக்கும் அவருடைய மகன் என்னும் பெருமைச் சாத்தான் அவருக்குள் எட்டிப் பார்த்தான்.

‘நீர் கடவுளின் மகன் தானே. இங்கிருந்து கீழே குதித்தால் கூட உமக்கு ஒன்றும் நேராதே. குதிக்க வேண்டியது தானே ?’

‘நான் ஏன் குதிக்க வேண்டும் ? அதன் அவசியம் என்ன ?’

‘நீர் கடவுளின் மகன். நீர் குதித்தால் தேவ தூதர்கள் வந்து உமது கால் தரையில் படும் முன் தங்கள் கைகளினால் தாங்கிக் கொள்வார்களே. இது மறை நூலில் கூட எழுதப்பட்டிருக்கிறது. உமக்குத் தெரியாமல் இருக்காதே’

‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதியாதே என்று கூட எழுதியிருக்கிறதே. சோதனைப் பேயே மறைந்து போ’ இயேசு இரண்டாவது சோதனையையும் கடந்தார்.

அதன்பிறகு இயேசு மலையுச்சிக்குச் சென்றார். சுற்றிலும் பார்த்தார். இயற்கை மிகவும் அழகாக விரிந்து பரந்து கிடந்தது. சொகுசான மாட மாளிகைகள் அவருடைய கண்களுக்குத் தெரிந்தன. அவருக்குள் ஆசைப் பேய் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தது.

‘ஏன் நீ கடவுளுக்கான பணிகளைச் செய்து உன் வாழ்க்கையை வீணடிக்க வேண்டும் ? பேசாமல் இந்த வளங்களையெல்லாம் அனுபவிக்கும் ஒரு பெரிய தலைவனாக மாறிவிடலாமே ? அல்லது அரசனாகி விடலாமே. எல்லா வளங்களும் உனக்கே. நீ நினைத்தால் இதெல்லாம் முடியும்’

‘கடவுளின் பணியே சிறந்தது’

‘எப்படி சொல்கிறாய் ? எத்தனையோ இறைவாக்கினர்கள் வந்தும் திருந்தாத மக்களா நீ சொல்லித் திருந்தப் போகிறார்கள். பேசாமல் கடவுள், போதனை இதையெல்லாம் விட்டு விட்டு ஆசையை அணைத்துக் கொள். மகிழ்ச்சியாக வாழ்’ சாத்தான் சொன்னான்.

‘போ.. அப்பாலே சாத்தானே. என்னைச் சோதிக்காதே. கடவுளை மட்டுமே வணங்கி அவரை மட்டுமே பணிந்திரு என்று சொல்லியிருக்கும் கட்டளைப்படிதான் வாழப் போகிறேன்’ இயேசு உறுதியாய் இருந்தார்.

உறுதியாய் இருக்கும் மனதை எந்த தீய எண்ணங்களும் திருடிக் கொள்வதில்லையே. இயேசுவும் மிகவும் உறுதியாக இருந்தார். தான் செய்யவேண்டிய பணிகளைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார். தன்னுடைய மனதைத் தன்னுடைய கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் உறுதியும் கொண்டிருந்தார்.

சோதனைகள் இயேசுவின் மனதை விட்டு அகன்றன. இயேசு தெளிவடைந்தார். பணிவாழ்வுக்கான பக்குவத்தைப் பெற்றார். ஆசைகளையும், சோதனைகளையும் தாண்டி தன்னால் மக்கள் பணி செய்யமுடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.

இயேசு வரலாறு 8 : முதல் சில சீடர்களை அழைத்தல்

Image result for Jesus calling disciples

இயேசுவும் தன்னுடன் இணைந்து கொண்டபின் யோவான் அதிக உற்சாகத்துடன் மக்களுக்குப் போதிக்கத் துவங்கினார். அவர் யோர்தான் நதியில் நின்றுகொண்டு மக்களுக்கு திருமுழுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். அவரைப் பிடிக்க அரசு உளவாளிகளை அனுப்பியிருந்தது. ஆனாலும் அவர் துணிச்சலைக் கைவிடவில்லை. தீயவர்களை நோக்கிய எச்சரிக்கையையும் கைவிடவில்லை. அவர் தன்னிடம் வரும் சீடர்களிடம் எல்லாம் ‘இயேசுவே உண்மையான கடவுளின் மகன். அவருடைய வழியில் செல்லுங்கள்’ என்று பகிரங்கமாக அறிவிக்கத் துவங்கினார்.

இயேசு அப்போதுதான் நாற்பது நாள் செபத்தை முடித்துக் கொண்டும், சோதனைகளை முறித்துக் கொண்டும் வெளிவந்திருந்தார். யோவானுடைய போதனையும், அவருடைய பணியும் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கும் ஆர்வத்தில் அவர் யோர்தான் நதிக்கரை ஓரமாக நடந்து கொண்டிருந்தார்.

இயேசுவைக் கண்ட யோவான், ‘இதோ போகிறாரே. இவர்தான் கடவுளின் ஆட்டுக் குட்டி. வானத்திலிருந்து கடவுளின் ஆவி அவர் மேல் இறங்குவதைக் கண்டோமே’ என்று மக்களிடம் உரக்கச் சொன்னார். மக்கள் அனைவரும் இயேசு நடந்து கொண்டிருந்த திசையைப் பார்த்தார்கள். இயேசு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்.

அந்திரேயா, யோவான் என்ற இரு மீனவர்கள் திருமுழுக்கு யோவானிடம் சீடர்களாகச் சேரவேண்டும் என்னும் ஆசையில் யோர்தான் நதிக்கரையிலேயே காத்திருந்தார்கள். அவர்கள் தங்கள் வாழ்வின் கஷ்டங்களிலிருந்து தங்களுக்கு விடுதலை தர வந்த மீட்பராக திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்த யோவானைப் பார்த்தார்கள்.

யோவான் அவர்களுடைய சிந்தனையையும், எண்ணத்தையும் அறிந்தார். அவர்களிடம், ‘நீங்கள் பின் செல்ல வேண்டியது என்னையல்ல. நீங்கள் தேடும் மீட்பர் நான் அல்ல. நான் மீட்பருக்கான பாதையைச் செம்மைப்படுத்துபவன் அவ்வளவே. செல்லுங்கள். இயேசுவைப் பின் தொடருங்கள்’ என்று அனுப்பி வைத்தார். அவர்களும் யோவானுடைய வார்த்தைகளின் படி இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள்.

அவர்களும் இயேசுவைப் பின் தொடர்ந்து அவர்களுக்குப் பின்னால் சென்றார்கள். இயேசு நடந்து கொண்டே இருந்தார். அவர்கள் இருவரும் விடாமல் அவரைப் பின் தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். இயேசு நின்றார். திரும்பி அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார். ,

‘ ஏன் ? எதையேனும் தேடி நடக்கிறீர்களா ?’

‘நாங்கள் யோவான் தான் மீட்பர் என்று நினைத்து அவரிடம் சீடர்களாகும் ஆசையில் வந்தோம். அவரோ நீர் தான் உண்மையான கடவுளின் மகன் என்று சொல்லி எங்களை அனுப்பினார். நாங்கள் உம்முடைய சீடர்களாக விரும்புகிறோம். எங்களுடைய மனதில் வலிகளும், கேள்விகளும், இயலாமைகளும் நிறைந்து கிடக்கின்றன. உம்முடைய வருகை தான் எங்களைச் சீர் செய்ய வேண்டும்’ அவர்கள் சொன்னார்கள்.

‘என்னைப் பின் தொடர்ந்து என் சீடர்களாக வருவது அவ்வளவு எளிதல்ல..’ இயேசு சொன்னார்.

‘என்ன கடினமானாலும் அதை நாங்கள் தாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். எத்தனை நேரமானாலும் உம்முடன் செலவிடத் தயாராக இருக்கிறோம்’ அவர்கள் சொல்ல இயேசு மீண்டும் புன்னகைத்தார்

‘என்னுடைய பணிக்கு வருபவன், நேரத்தையல்ல வாழ்க்கையையே தரவேண்டும். தன்னுடைய குடும்பத்தின் மீதான பற்றுதலை முற்றிலுமாக விட்டு விட்டு நற்செய்தியை எங்கும் அறிவிக்க வேண்டும். மக்கள் பணியில் ஈடுபடுகையில் எந்தவிதமான சுயநல எண்ணங்களோ, உறவினர்களின் சிந்தனைகளோ எழக் கூடாது. நீங்கள் ஆர்வத்தினால் வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால், மறுபரிசீலனை செய்யுங்கள். இது இலகுவான பணி அல்ல. இது விரும்பிச் சுமக்கும் பாரம்.’ இயேசு சொன்னார்.

‘நாங்கள் ஆர்வ மிகுதியால் வந்தவர்கள் அல்ல. ஒரு மீட்பரைக் காலம் காலமாய் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள். நாங்கள் உம்முடனே வருவோம். நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்பதைச் சொல்லுங்கள்.’ அவர்கள் சொன்னார்கள்.

இயேசு அவர்களின் கண்களை உற்றுப் பார்த்தார். அவர்களுடைய பார்வையில் மிளிர்ந்த உறுதியைக் கண்டார். ‘ வந்து பாருங்கள் ‘ என்று ஒற்றை வரியில் பதிலளித்து விட்டு அமைதியாய் நடந்தார். அவர்கள் அவரைப் பின் தொடர்ந்து சென்று இயேசு தங்கியிருந்த இடத்துக்கு வந்தார்கள். இயேசு இப்போது தன்னுடைய குடும்பத்தை விட்டு விட்டு தனியே தங்கியிருந்தார். இயேசுவுடன் வந்த இருவரும் அவருடன் அமர்ந்து பேசத் துவங்கினார்கள். இயேசு அவர்களுக்கு தன்னுடைய சிந்தனைகளையும், இறையரசின் தன்மைகளையும், நேர்மையான வழிமுறைகளையும் போதித்தார். போதனை நீண்டு கொண்டே இருந்தது. இயேசுவின் போதனைகளில் இருந்த உறுதியும், கேள்விகளை எதிர்கொள்ளும் அறிவும், தீர்க்கமான சிந்தனைகளும், இழையோடிய மனித நேயமும் அவர்களைக் கட்டிப் போட்டன. அவர்கள் இயேசுவை என்றும் பிரியப்போவதில்லை என்று முடிவெடுத்தார்கள்.

‘போதகரே.. நீர் தான் உண்மையான இறைவாக்கினர். இனிமேல் நாங்கள் உம்மை விட்டுப் பிரியப் போவதில்லை. எப்போதும் உம்முடன் தான் இருப்போம்’ என்றார்கள். அந்திரேயா, யோவான் என்னும் அந்த இருவரும் இயேசுவின் முதல் இரு சீடர்களானார்கள்.

தாங்கள் அறிந்த இயேசுவைப்பற்றி தங்கள் சகோதரர்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்று அவர்கள் இருவரும் ஆசைப்பட்டார்கள். அந்திரேயா தன்னுடைய சகோதரன் சீமோனைச் சந்திக்க ஓடினார். இந்த ஆச்சரியச் செய்தியைப் பரிமாறிக் கொள்ளும் அவசரம் அவரிடம் தெரிந்தது.

‘சகோதரனே… மெசியாவைக் கண்டோம்.. மீட்பரைக் கண்டோம்’ அவருடைய குரலில் உற்சாகம் பீறிட்டது.

சீமோன் ஆர்வம் காட்டவில்லை.’ நீங்கள் இப்படித்தான் அடிக்கடி சொல்லிக் கொண்டு திரிகிறீர்கள். இப்போது திருமுழுக்கு யோவானின் பின்னால் அலைகிறீர்கள். அப்படித்தானே ?’

‘இல்லை. அவர் மீட்பர் இல்லை. இது வேறு ஒரு நபர்’

‘ஓ.. அவரையும் விட்டு விட்டீர்களா ? இப்போது யார் புதிதாய் ?’ சீமோன் சிரித்துக் கொண்டே கேட்டார்.

‘சிரிக்கவேண்டாம் சகோதரனே… உண்மையைத் தான் சொல்கிறேன். நாம் காலங் காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோமே ஒரு மெசியா ! ஒரு மீட்பர் ! அவரைத் தான் கண்டோம். கடந்த சில நாட்களாக அவருடன் தான் பேசிக்கொண்டிருக்கிறோம். அவரை முழுமையாக அடையாளம் கண்டு கொண்டோம். இனிமேல் சந்தேகமே இல்லை. இது மீட்பர் தான். அவருடைய போதனைகளையும், பதில்களையும் வந்து கேட்டுப் பார் உனக்கே தெரியும்’

‘உளறாதீர்கள். பலர் வந்து இப்படியெல்லாம் பேசி உங்களை ஏமாற்றுவார்கள். எச்சரிக்கையாய் இருங்கள்’ சீமோன் சொன்னார்.

‘இல்லை… இல்லை.. இவர் அப்படியல்ல. எத்தனையோ பேர் பேசினார்கள். எத்தனையோ போதகர்கள் வந்தார்கள். ஏன் யோவான் கூட திருமுழுக்கு கொடுத்து வருகிறார். அவர்களில் யாரையாவது நான் மெசியா என்று சொல்லியிருக்கிறேனா ? போதகர்கள் என்று தானே சொல்லியிருக்கிறேன் ? இவர் உண்மையிலேயே மெசியாதான். வந்து பார்’ அந்திரேயா சகோதரனை சம்மதிக்க வைத்தார்.

சகோதரனின் ஆர்வத்தைக் கண்ட சீமோனுக்கும் இயேசுவைப் பார்க்கவேண்டும் என்னும் எண்ணம் வந்தது. அவர் இயேசுவிடம் வந்தார். இயேசுவைக் கண்ட சீமோன் ஒரு வினாடி திகைத்தார். இயேசுவின் சாந்தமான முகமும், அவருடைய தீர்க்கமான பார்வையும் அவரைக் கட்டிப் போட்டன. இயேசுவும் சீமோனை உற்றுப் பார்த்தார்.

‘சீமோனே. உன் பெயர் இனிமேல் கேபா ! கேபா என்றால் பாறை என்பது பொருள். நீ பாறையைப் போன்று வலிமையானவன். ‘ என்றார். சீமோன் திகைத்தார். இயேசுவின் வித்தியாசமான அணுகுமுறையும், வரவேற்பும் அவரை வசீகரித்தன. அந்த நிமிடத்திலேயே இயேசுவின் சீடரானார். அவர்கள் ஒரு குழுவானார்கள்.

மறுநாள் அவர்கள் அனைவரும் கலிலேயா செல்லவேண்டும் என்று முடிவெடுத்து பயணத்தைத் துவங்கினார்கள். வழியில் பிலிப்பு என்பவரைக் கண்டார். அவர் கப்பர்நாகூமில் பிறந்து தன்னுடைய பெரும்பாலான காலத்தை பெத்சாய்தாவில் செலவிட்டவர். அவரைக் கண்டதும் தன்னுடைய சீடனாகும் தகுதி அவருக்கு இருப்பதை அறிந்த இயேசு அவரைப் பார்த்து ‘என்னைப் பின் தொடர்ந்து வா’ என்றார். பிலிப்பு ஏதும் பேசாமல் அவரைப் பின் தொடர்ந்தார்.

இயேசுவின் வார்த்தைகள் பிலிப்புவையும் கட்டிப் போட்டன. அவரும் இயேசுவின் சீடரானார். இயேசுவின் போதனைகளை ஊரெங்கும் பரப்பவேண்டும் என்று உறுதியும் கொண்டார். அவருக்கு தன்னுடைய நண்பர் நத்தனியேலின் நினைவு வந்தது. நத்தனியேலும் மீட்பரை எதிர்பார்த்துக் காத்திருந்தவர். பிலிப்பு பலமைல்கள் தொலைவில் இருந்த தன்னுடைய நண்பர் நத்தானியேலைக் காண விரைந்தார். நத்தனியேல் ஒரு அத்திமரத்தின் அடியில் படுத்து வானத்தை வெறித்துக் கொண்டிருந்தார்.

‘நத்தனியேல், ஒரு ஆனந்தமான செய்தி. நாங்கள் ஒரு மிகச் சிறந்த போதகரைக் கண்டோம். அவர் ஒருவேளை மீட்பராக இருக்கலாம். நம்முடைய சட்டநூல்கள் சொன்ன மெசியாவாக இருக்கலாம். இந்த செய்தியைக் கேட்டு சந்தோசப் படுவாய் என்று எனக்குத் தெரியும் அதனால் தான் உன்னைத் தேடி ஓடி வந்தேன். ‘ பிலிப்பு சொன்னதைக் கேட்ட நத்தனியேல் சட்டென்று எழுந்தார். அவருடைய கண்கள் மின்னின.

‘மெசியாவா ? மிகச்சிறந்த போதகரா ? எங்கே கண்டீர்கள் ? எங்கிருந்து வந்திருக்கிறார் ? சொல்.. சொல்’ நத்தனியேல் அவசரமானார்.

‘அவர் நாசரேத்தில் இருக்கிறார். மரியா, யோசேப்பு என்பவரின் மகன் தான் அவர்’ பிலிப்பு சொன்னதும் நத்தனியேல் பின்வாங்கினார். அவருடைய கண்களில் மின்னிக் கொண்டிருந்த வெளிச்சம் அணைந்தது.

‘நாசரேத்தா ? அங்கிருந்து நல்லது எதுவும் தோன்றாது. நீர் சொல்வது உண்மையாய் இருக்க வாய்ப்பில்லை’ நத்தனியேல் சுருதி குறைத்துத் தயங்கினார்.

‘வந்து பாரும். புரிந்து கொள்வீர்.. சந்தேகப் பட வேண்டாம். வந்து பார்த்து அவர் நல்ல போதகரில்லை என்று தோன்றினால் திரும்பி விடு ‘ பிலிப்புவின் குரலில் இருந்த உறுதி நத்தனியேலை இயேசுவிடம் அழைத்து வந்தது.

‘வா. நத்தனியேல். நீ உண்மையிலேயே நல்ல தூய்மையானவன். கபடமற்ற இஸ்ரயேலன்’ இயேசு அவரைப் பார்த்துச் சொன்னார்.

நத்தனியேல் நெற்றி சுருக்கினார். ‘என்னைப்பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும் ? பிலிப்பு சொன்னாரா ?’

‘பிலிப்பு உன்னைக் கூப்பிடும் முன், நீ அத்திமரத்தின் அடிவாரத்தில் இருந்தபோதே நான் உன்னைக் கண்டேன்’ இயேசு புன்னகையுடன் சொன்னார்.

நத்தனியேல் வியந்தார். தான் பல மைல் தொலைவில் ஒரு அத்தி மரத்தின் கீழே இருந்ததை இவர் எப்படிக் கண்டார் ? அப்படியானால் இவர் உண்மையிலேயே பெரியவர் தான் நத்தனியேல் வியந்தார்.

இயேசு மீண்டும் புன்னகைத்தார். ‘ உன்னை அத்திமரத்தின் அடியில் பார்த்தேன் என்று சொன்னதற்கா வியப்படைகிறாய். நீ காணப் போகும் அதிசயங்கள் ஏராளம் உள்ளன. ஏன் வானம் திறப்பதையும், கடவுளின் தூதர்கள் இறங்கி என் மீது வருவதையும் கூட நீ காண்பாய்’

இயேசு சொன்னதைக் கேட்ட நத்தனியேல் அந்நேரமே இயேசுவின் சீடரானார்.

இயேசு வரலாறு 9 : கானாவூரில் திருமணம்; அதிசயத்தின் ஆரம்பம்

Image result for Wedding in Cana

இயேசு தன்னுடைய புதிய ஐந்து நண்பர்களையும் அழைத்துக் கொண்டு நாசரேத்தில் இருந்த தன் வீட்டுக்குத் திரும்பினார். இயேசுவையும் அவருடைய புதிய நண்பர்களையும் கண்ட மரியா அவர்களை ஆனந்தத்துடன் வரவேற்று உபசரித்தாள். மகனை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கும் ஆனந்தம் அவளுடைய கண்களில் மின்னியது.

‘என்னுடைய தோழியின் மகளுக்குத் திருமணம். அந்த விழாவுக்குச் செல்ல இருக்கிறேன். நீயும் உன் நண்பர்களும் வந்தால் நன்றாக இருக்கும்’ இயேசுவின் தாய் விண்ணப்பித்தாள். இயேசு மறுக்கவில்லை. தன்னுடைய நண்பர்களையும் அழைத்துக் கொண்டு அன்னையுடன் திருமண விழாவுக்குப் புறப்பட்டார்.

திருமணம் கலிலேயாவிலுள்ள கானா என்னும் கிராமத்தில் இருந்தது. அது தான் நத்தனியேலின் கிராமம். அவர்கள் அனைவரும் நாசரேத்திலிருந்து ஐந்து மைல் தொலைவில் இருந்த கானாவை நோக்கி நடந்தார்கள். இயேசு பொதுவாக இப்படிப்பட்ட விழாக்களில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அவருக்கு சிந்திப்பதிலும், மக்களுடன் உரையாடுவதிலும், செபிப்பதிலும் மட்டுமே ஆர்வம் இருந்தது. ஆனாலும் தாயின் சொல்லை அவர் தட்டுவதில்லை. தாயின் விண்ணப்பத்தை நிராகரிப்பதும் இல்லை. பன்னிரண்டாவது வயதில் எருசலேம் தேவாலயத்தில் மறைநூல் வல்லுநர்களுடன் ஆர்வமுடன் உரையாடிக் கொண்டிருந்தபோதே அன்னையின் கவலை கண்டு எல்லாவற்றையும் விட்டு விட்டு அன்னையோடு திரும்பியவர் அவர். எனவே திருமணத்துக்கு வர அன்னை அழைத்தபோதும் அதை மறுக்கவில்லை.

திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மக்கள் ஆடலும் பாடலுமாக திருமண அரங்கையே விழா மேடையாக்கிக் கொண்டிருந்தார்கள்.

அன்றைய நாட்களில் திருமண விழாக்களில் முக்கிய இடம் பிடிப்பது திராட்சை இரசம். அவரவர் வசதிக்கும், அந்தஸ்துக்கும் ஏற்ப நல்ல திராட்சை ரசத்தை வழங்குவது வழக்கம். இந்த திருமண விழாவிலும் சுவையான திராட்சை இரசம் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. மக்கள் ஆர்வமாய் அதை சுவைத்து மகிழ்ந்து இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்கள்.

திடீரென திருமண அரங்கில் சிறு சலசலப்பு.

‘இங்கே.. கொஞ்சம் திராட்சை இரசம் கொண்டு வாருங்கள்…’

‘திராட்சை இரசம் கேட்டேனே கிடைக்கவில்லையே’

ஆங்காங்கே குரல்கள் மெலிதாக எழ ஆரம்பித்தன. வீட்டின் பின் புறத்திலோ பணியாளர்கள் திகைத்துப் போய் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தார்கள்.

பணியாளர்கள் நிற்கும் நிலமையைப் பார்த்த இயேசுவின் தாய்க்கு ஏதோ பிரச்சினை என்பது புரிந்தது. ஆனால் என்ன பிரச்சினை என்பது சரியாக விளங்கவில்லை. எனவே அவர் அவர்களிடம் சென்று
‘என்ன பிரச்சினை ? மக்கள் திராட்சை இரசம் கேட்கிறார்கள். நீங்கள் பரிமாறவில்லையே ! செல்லுங்கள். விருந்தினர்களை உபசரியுங்கள்’ என்றார்.

‘அம்மா. அதில் தான் பிரச்சினையே. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை’

‘ஏன் என்னாச்சு ?’

‘அம்மா. திராட்சை இரசம் தீர்ந்து விட்டது !’

‘என்ன திராட்சை இரசம் தீர்ந்து விட்டதா ? திருமண விழா இன்னும் முடியவில்லையே. இரசம் மிகவும் குறைவாகத் தான் இருந்ததா ?’ மரியாளின் குரலில் அதிர்ச்சி தெரிந்தது.

‘இல்லை அம்மா. தேவையான அளவு இரசம் இருந்தது. ஆனால் ஆடலும், பாடலும் இருப்பதால் மக்கள் அதிகமாக திராட்சை இரசம் அருந்துகிறார்கள். அதனால் தான் நாங்கள் எதிர்பார்த்ததுக்கு மாறாக இரசம் தீர்ந்து விட்டது. எஜமானருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.’ பணியாளர்கள் குரல் தடுமாறியது.

‘இப்போது என்ன செய்வது ?’ மரியா கவலையுடன் கேட்டாள்.

‘அது தானம்மா எங்களுக்கும் புரியவில்லை. எங்கள் மானம் போய்விடும் போலிருக்கிறது. இப்போது திடீரென சென்று இரசம் வாங்கி வரவும் முடியாது. நாங்கள் வாங்கி வரும் முன் விழா முடிந்து விடும். அவமானமும் நிச்சயம். ‘ பணியாளனின் கண்களில் கண்ணீர்.

அதற்குள் திருமண அரங்கில் பலரும் திராட்சை இரசம் கேட்கத் துவங்கிவிட்டார்கள். எங்கும் குரல்கள் ஒலிக்க, பணியாளர்களின் பதட்டம் அதிகரித்துக் கொண்டே வந்தது.

இவர்களுக்கு எப்படியாவது உதவவேண்டும் என்று மரியா முடிவெடுத்தார். தன் மகன் கடவுளின் வல்லமைபெற்றவன் அவன் நினைத்தால் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று அவர் நம்பினார். அவர் இயேசுவை அழைத்தார்.

‘அம்மா அழைத்தீர்களா’ இயேசு அமைதியாய்க் கேட்டார்.

‘ஆம்.. மகனே. திருமண விழாவில் ஒரு குறை’. இயேசு தாயின் முகத்தைப் பார்த்தார்.

‘இரசம் தீர்ந்து விட்டது.’

‘அம்மா.. இப்போது இந்த திருமண வீட்டில் ஏதேனும் அதிசயம் செய்து ஆரம்பித்து வைத்தால் அது விடிவதற்குள் ஊரெங்கும் பரவி விடும். அதன்பின் என்னால் சுதந்திரமாக உலவ முடியாது. என்னுடைய பணியை நான் உடனே ஆரம்பித்தாக வேண்டிய கட்டாயம் வந்து விடும். எனக்கு போதகர், மீட்பர் என்னும் முத்திரை விழுந்து விடும். என்னால் தயாரிப்புப் பணியைத் தொடர முடியாது. நான் என்னுடைய பணியை ஆரம்பிக்கும் நாள் என்பது என்னுடைய மரணத்தை நோக்கிய பயணத்தைத் துவங்குவது போல. அம்மா. என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை ‘ இயேசு அன்னையின் காதுகளில் கிசுகிசுத்தார்.

‘இக்கட்டான நேரத்தில் உதவுதல் தான் முக்கியம். உன்னுடைய பணி இங்கேயே ஆரம்பிக்கட்டுமே’ மரியா மெல்லிய குரலில் சொன்னார். சொல்லிவிட்டு வேலையாட்களை அழைத்து,

‘வாருங்கள். உங்கள் குறைகளை நாங்கள் அறிகிறோம். இதோ இவர் சொல்வதையெல்லாம் நீங்கள் செய்யுங்கள்’. இயேசுவைக் சுட்டிக் காட்டி மரியா சொன்னாள். இயேசு புன்னகைத்தார். அன்னையின் பேச்சுக்கு மறு பேச்சு சொல்லவில்லை.

அவர்கள் இயேசுவை கேள்விப் பார்வை பார்த்தார்கள். இயேசுவின் கைகளில் ஒன்றும் இல்லை. விழாவில் திராட்சை இரசம் இல்லை. இவர்களுடைய வீடும் அருகில் இல்லை. இவர் எப்படி உதவ முடியும் என்ற கேள்வியே அனைவரின் பார்வையிலும். ஆனாலும் ஏதேனும் வழியில் திராட்சை இரசம் கிடைக்குமெனில் அதை விடப் பெரிய சந்தோசம் ஏது ? பணியாளர்கள் இயேசுவின் முகம் பார்த்து நின்றார்கள்.

இயேசு சுற்றுமுற்றும் பார்த்தார். அங்கே ஆறு கற்சாடிகள் இருந்தன.

‘இதென்ன சாடிகள் ?’ இயேசு கேட்டார்.

‘தூய்மைச் சடங்குகளுக்காக இதை இங்கே வைத்திருக்கிறோம். இப்போது இவற்றில் ஒன்றும் இல்லை’ பணியாளர்கள் சொன்னார்கள்.

‘இதில் எத்தனை குடம் தண்ணீர் பிடிக்கும் ?’

‘ஒவ்வொன்றிலும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும்’

‘சரி. இந்த ஆறு கற்சாடிகளிலும் தண்ணீர் நிறையுங்கள்’ இயேசு சொல்ல, பணியாளர்களுக்கு மீண்டும் குழப்பம். ஆனாலும் ‘இவர் சொல்வதையெல்லாம் செய்யுங்கள்’ என்று மரியா சொல்லியிருந்தாரே. பணியாளர்கள் அவ்வாறே செய்தனர். மிக விரைவாக ஆறு கற்சாடிகளிலும் தண்ணீர் நிறைத்தார்கள்.

இயேசு சிறிது நேரம் கண்களை மூடி செபித்தார். பின் கைகளை நீட்டி அந்த சாடிகளை ஆசீர்வதித்தார்.

‘சரி.. இப்போது இதைக் கொண்டு பந்தி மேற்பார்வையாளனிடம் கொடுங்கள்’ இயேசு சொன்னார்.

‘என்ன சொல்கிறீர்கள் ? எங்களுக்குத் தண்ணீருக்குத் தட்டுப் பாடு வரவில்லை. திராட்சை இரசம் தான் தீர்ந்து விட்டது. ‘ பணியாளர்கள் குரலில் எரிச்சலும் வெறுப்பும் வெளிப்பட்டது.

‘அதுதான் இதோ ஆறு கற்சாடிகளில் இருக்கிறதே.’ இயேசு புன்னகைத்தார்.

‘இதுவா… இந்தத் தண்ணீரா ? என்ன விளையாடுகிறீர்களா ? எங்கள் வேதனை உங்களுக்கு விளையாட்டாய் தெரிகிறதா ? ‘ கற்சாடியிலிருந்த தண்ணீரைக் கைகளில் அள்ளியபடி கேட்டான் பணியாளன்.

‘தண்ணீரா இது ?’ இயேசு கேட்டார்.

பணியாளன் கைகளைப் பார்த்தான். அவனுடைய விரல்களில் இடையே திராட்சை இரசம் வழிந்து கொண்டிருந்தது !. திகைத்தான். உள்ளுக்குள் நடுங்கினான். இமைகளை மூடவும் மறந்து வியந்து நின்றான்.

‘இதை மொண்டு பந்தி மேற்பார்வையாளனிடம் கொண்டு செல்’ இயேசு சொல்ல, மறு பேச்சு எதையும் பேசாமல் பணியாளன் விரைந்தான்.

‘ஐயா… இ…இதோ திராட்சை இரசம்’

‘தி….திராட்சை இரசமா ? அது தான் தீர்ந்து விட்டதே. எங்கிருந்து கிடைத்தது இது ?’ ஆச்சரியத்துடன் கிசு கிசுப்பாய்க் கேட்டுக் கொண்டே பந்தி மேற்பார்வையாளன் அந்த திராட்சை இரசத்தைச் சுவைத்தான். சுவையில் சொக்கினான்.

‘ஆஹா… அருமையான இரசம்… அருமையான இரசம். எங்கே போய் வாங்கினீர்கள் ? எங்கிருந்து கிடைத்தது ? ‘

‘தண்ணீரிலிருந்து’

‘தண்ணீரிலிருந்தா ? என்ன சொல்கிறாய் ?’ மேற்பார்வையாளர் குழம்பினார்.

‘ஆம். இயேசு என்றொருவர் விருந்துக்கு வந்திருக்கிறார். அவர் தான் தண்ணீரை திராட்சை இரசமாக்கிக் கொடுத்தார்’ பணியாளன் சொல்லிவிட்டு நகர, மேற்பார்வையாளன் மெய்மறந்து நின்றான்.

திராட்சை இரசம் மீண்டும் திருமணப் பந்திக்கு வந்தது.

‘குடியுங்கள் ஐயா… நல்ல திராட்சை இரசம்’ விருந்தினர்களுக்கு இரசம் போதும் போதுமென்னும் அளவுக்குப் பரிமாறப்பட்டது.

‘இதென்ன ? இந்த திராட்சை இரசம் இவ்வளவு சுவையாய் இருக்கிறது ‘

‘ஆஹா… இதுவல்லவா திராட்சை இரசம். திருமணம் வெகு சிறப்பு !’

‘எல்லோரும் நல்ல ரசத்தை முதலில் பரிமாறிவிட்டு, கடைசியில் மோசமானதைப் பரிமாறுவார்கள். ஆனால் இங்கே, இவர்கள் நல்ல இரசத்தைக் கடைசி வரை வைத்திருக்கிறார்கள் பார்த்தாயா ?’

திருமண மண்டபம் களைகட்டியது. அனைவரும் மகிழ்ந்தார்கள்.

இயேசு அமைதியாய் நின்றார். அவருடைய மனதுக்குள் பணிவாழ்வைப்பற்றியும் தான் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றியும் சிந்தனைகள் சுற்றிக் கொண்டிருந்தன. விழா கலகலப்பாய் நடக்க, இயேசு தன்னுடைய சீடர்களையும் அழைத்துக் கொண்டு நாசரேத் திரும்பினார்.

இயேசு வரலாறு 10 : இயேசுவின் பணித்தளம்

Image result for Jesus with disciples

சில நாட்களில் இயேசு தன்னுடைய ஐந்து சீடர்களையும் அழைத்துக் கொண்டு கப்பர்நாகும் என்னும் ஊருக்கு வந்தார். கலிலேயா ஏரியின் அருகே கம்பீரமாய் இருந்தது கப்பர்நாகும் நகரம். சுமார் பதினைந்து மைல் தூர ஏரிக்கரையில் இருந்த கப்பர்நாகும் அனைத்து விதமான மக்களையும் உள்ளடக்கிய ஒரு இடம் என்று கூட சொல்லலாம். வணிகர்களையும், ஏழைகளையும், பணக்காரர்களையும் கிழக்கிலும், மேற்கிலுமிருந்து ஏராளம் மக்கள் வந்து செல்லும் இடமாக இருந்தது அது. பேதுருவின் மாமியாரின் இல்லமும் அங்கே தான் இருந்தது.

கப்பர்நாகும் அக்காலத்தில் ஏரிகளின் ராணி என்று அழைக்கப்பட்டது. கலிலேயாவின் மிக முக்கியமான ஒரு நகரம் அது. சுமார் பதினைந்து மைல் நீளத்தில் விரிந்திருந்த அந்த ஏரியின் கரை பல நகரங்களை இணைத்து அழகுடன் கம்பீரமாக இருந்தது. ஏரிகளுக்கு முதுகு காட்டி நடந்தால் பச்சையும், மலைகளும் என இயற்கை அழகின் இன்னோர் பக்கம் அங்கே இருந்தது. பேதுரு அந்த ஏரிகளின் ஒவ்வோர் பகுதியையும் மிகவும் தெளிவாக அறிந்தவர். அங்கே தான் அவருடைய படகு மீன்களைத் தேடி அங்கும் இங்கும் அலையும். பேதுரு இயேசுவுக்கு கப்பர்நாகும் நகரைப் பற்றியும் அதன் தன்மைகளைப் பற்றியும் விளக்கினார். மீனவர்களின் வாழ்க்கையையும், அன்றாட வாழ்க்கை முறைகளையும் அவர் விளக்கினார்.

கப்பர்நாகும் நகர் இயேசுவை மிகவும் கவர்ந்தது. அழகான ஏரியும், பலதரப்பட்ட மனிதர்களும், மலை வெளிகளும் என கப்பர் நகூமில் தன்னுடைய போதனைகளுக்கான தளம் இருப்பதை இயேசு கண்டு கொண்டார். கப்பர்நாகும் நகரை தன்னுடைய போதனைகளின் தலைமையிடமாக்க வேண்டும் என்பதை அப்போதே அவர் உறுதி செய்து கொண்டார். ஆனால் இன்னும் எதைப் பற்றிய தெளிவும் சீடர்களிடம் இல்லை. முதலில் சீடர்களுக்குத் தன்னுடைய பணியை விளக்க வேண்டும். என்ன செய்யப் போகிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், ஒத்துக் கொள்ள வேண்டும் அதன் பிறகே பணிக்குள் செல்ல வேண்டும் என்பதே இயேசுவின் திட்டமாக இருந்தது.

கப்பர்நாகூமை இயேசு போதனைகளுக்கான இடமாகத் தெரிந்து கொண்டதற்கு இன்னும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும், அது மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் வருபவர்களுக்கான ஒரு சந்திப்பு ஊராகவும் இருந்தது. பல நாடுகளிலிருந்தும் வரும் வணிகர்கள் மூலமாக தன்னுடைய போதனைகள் பல இடங்களுக்கும் பயணிக்க முடியும் என்பதையும் இயேசு கணித்திருக்கக் கூடும்.

முதலில் சீடர்களை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், பிறகு அவர்களுக்கு மனித நேயம் பற்றியும், தற்போதைய யூத மதப் போதனைகளில் ஒளிந்திருக்கும் மனித விரோத சிந்தனைகள் பற்றியும் விளக்கவேண்டும் என்று இயேசு முடிவெடுத்தார். இயேசு அவர்களுடன் சகஜமாகப் பழகி அவர்களுக்குத் தன்னுடைய சிந்தனைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் திருமுழுக்கு யோவான் அரசுக்கு எச்சரிக்கை அனுப்பிக் கொண்டிருந்தார்.

ஏரோது மன்னன் மோவாய் தேய்த்து யோசித்துக் கொண்டிருக்கையில் அவனுடைய மனைவி எப்படியேனும் யோவானைக் கொல்லுங்கள் என்று நச்சரித்தாள்.

இயேசு வரலாறு 11 : மாற்றான் மனைவியை அபகரித்தல் பாவம் – யோவான்

Image result for John the baptist warns

இறைவாக்கினர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். அவர்கள் நீதி என்று தங்களுக்குப் படுவதை எந்த சபையிலும் எடுத்துரைக்கத் தயங்குவதில்லை. யோவான் இறைவாக்கினரும் இதற்கு சற்றும் விதிவிலக்கல்ல. அந்நாட்களில் வாழ்ந்த மறைநூல் அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள், ஆலய குருக்கள் அனைவருக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். அத்துடன் நின்று விடவில்லை. அவருடைய குரல் அரசவையிலும் எதிரொலித்தது.

கலிலேயாவை ஆண்டு வந்த மன்னன் ஏரோது அந்திபாஸ், இயேசு குழந்தையாய் இருந்தபோது குழந்தைகளைக் கொல்ல சட்டம் இயற்றிய ஏரோது மன்னனின் மகன். அவனுடைய ஆட்சி நியாயமானதாக இருக்கவில்லை. அவன் ஏழைகளை பலவகைகளில் ஒடுக்கியும் நியாயத்தை இருட்டடிப்பு செய்தும் வாழ்ந்து வந்தான். அத்துடன் நிற்கவில்லை, தன்னுடைய சகோதரன் பிலிப்பின் மனைவி மேல் ஆசைப்பட்டு அவளைத் தன்னுடன் வைத்திருந்தான். மக்கள் யாரும் ஏரோது மன்னனின் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முடியவில்லை. அப்படிக் குரல் கொடுத்தால் மரணம் நிச்சயம் என்பதை எல்லோரும் அறிந்து வைத்திருந்தார்கள்.

யோவான் இறைவாக்கினர் உயிருக்குப் பயப்படவில்லை. அவர் நேராக மன்னனின் முன்னால் சென்று நின்றார்.

‘அரசே… நியாயமான வழிகளில் நடக்காதவன் அழிவுக்கு உள்ளாவான். நீ உன்னுடைய தவறான வழிகளை விட்டு விலகி விடு’ யோவான் நேரடியாக எச்சரித்தார்.

‘நீ யாரிடம் பேசுகிறாய் தெரியுமா ?’

‘வழி தவறிப்போன ஒரு தலைவரிடம் பேசுகிறேன்’

‘நான் ஒரு அரசன். என்னுடைய அவையில் வந்து நின்று என்னையே எதிர்க்க உனக்கு என்ன துணிச்சல்’ ஏரோது மன்னன் கர்ஜித்தான்.

‘துணிச்சல் மனிதனால் வருவதல்ல. உன் துணிச்சல் உன் அதிகாரத்தினால் வருகிறது. என் துணிச்சலோ கடவுளால் வருகிறது. எனவே உன் துணிச்சலை விட என் துணிச்சல் மேலானது. அது அழிவுறாது’ யோவான் தயங்காமல் சொன்னார்.

‘இத்தனை துணிச்சலோடு என்ன பேச வந்திருக்கிறாய் ?’

‘நீ மோகத்தின் வால் பிடித்துக் கொண்டு உன்னுடைய சகோதரனின் மனைவியை உன்னுடைய வைப்பாட்டியாக்கி வைத்திருக்கிறாயே ! அதைத் தான் சுட்டிக் காட்ட வந்தேன்’ யோவான் சொன்னார்.

‘அவளுடைய விருப்பத்துடன் தான் அவளுடன் வாழ்க்கை நடத்துகிறேன்’ ஏரோது சொன்னான்.

யோவான் சிரித்தார். ‘ விருப்பம் ! அது மனித விருப்பம். கடவுளின் சட்டம் என்ன சொல்கிறது என்று தெரியாதா ? சாக்குப் போக்கு சொல்வதில் எந்தப் பயனும் இல்லை’ யோவான் நகைத்தார்.

ஏரோது மன்னன் திருமுழுக்கு யோவானைப் பற்றி அறிந்திருந்தான். தான் செய்வது தவறு என்றும் யோவான் சொல்வதில் பிழை ஒன்றும் இல்லை என்றும் அவனுக்குத் தெரிந்திருந்தது. யோவானுடைய தினசரிப் போதனைகள் ஏரோதின் காதுக்கு வந்து கொண்டே தான் இருந்தன. அவை சரியானவை என்றும் ஒருவேளை அவர் கடவுளின் தீர்க்கத்தரிசியாக இருக்கலாம் என்னும் பயமும் ஏரோதை பயமுறுத்தின.

ஆனால் அவனுடைய ஆசை மனைவியோ, தன்னைப் பற்றி இப்படி எச்சரிக்கையும் சாபமும் விட்டுக் கொண்டிருக்கும் யோவான் சாக வேண்டும் என்று கொதித்தாள். ஆசை நாயகியின் விருப்பங்களுக்குத் தடை ஏது ? நியாயத்தையும் நீதியையும் போதித்துக் கொண்டிருந்த திருமுழுக்கு யோவான் சிறையிலடைக்கப் பட்டார்.

யோவானைச் சிறையிலடைத்தபின்னும் ஏரோதியாளின் கோபம் அடங்கவில்லை. ஒரு சாதாரண மனிதன் அரச நிலையில் இருக்கும் தன்னை இழித்துரைப்பதா என்று ஆத்திரமடைந்தாள். சரியான நேரம் வரும்போது யோவானைப் பழிவாங்க வேண்டும் என்று காத்திருந்தாள்.

இயேசுவின் வரலாறு 12 : சமாரியப் பெண்

Image result for Samaritan womenசெய்தியை கேள்விப்பட்ட இயேசுவும் அவருடைய ஐந்து சீடர்களும் யூதேயாவை விட்டு கலிலேயாவை நோக்கிப் பயணமானார்கள். ஆச்சரியப்படும் விதமாக இயேசு அவர்களை வழக்கமான பாதையில் கூட்டிச் செல்லாமல் சமாரியா வழியாக கூட்டிச் சென்றார் !

சமாரியா ! யூதர்களுக்குப் பிடிக்காத ஒரு ஊர்.
சமாரியர்கள் ! யூதர்களால் வெறுக்கப்படும் இனம்.

இவர்களுக்குள் அப்படியொன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. மூதாதையர்களைப் பொறுத்தவரை எல்லோரும் ஒன்றாக இருந்தவர்கள் தான். காலப்போக்கில் வழிபாட்டு இடத்தைப் பிரதானப் படுத்தி யூதர்களும், சமாரியர்களும் பிளவுபடத் துவங்கினார்கள். அந்தப் பிளவு நாளாவட்டத்தில் அதிகரித்து அதிகரித்து இரு பிரிவினருக்கும் இடையே எந்தவிதமான உறவும் இல்லை என்றானது. இன்னும் சொல்லப்போனால் சமாரியர்களை யூதர்கள் தாழ்ந்தவர்களாக, பேசத்தகாதவர்களாகப் பார்த்தார்கள்.

யூதர்களும், சமாரியர்களும் ஒரே கடவுளைத் தான் வழிபட்டும் வந்தார்கள். ஆனால் சிற்சில வேறுபாடுகளுடன். சமாரியர்களின் புனித நூல் என்பது மோசே எழுதிய சட்டதிட்டங்கள் அடங்கிய ‘தோரா’ என்றழைக்கப்படும் ஐந்து நூல்களை மட்டுமே. யூதர்களின் புனித நூலில் வேறு பல பகுதிகளும் உள்ளன.

யூதர்கள் எருசலேமில் மோரியா மலைமீது அமைந்துள்ள எருசலேம் தேவாலயத்தில் கடவுளை வழிபடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். சமாரியர்களோ கரிசிம் மலையின் மீது கட்டப்பட்டிருந்த ஆலயத்தில் தான் கடவுளை வழிபட்டு வந்தார்கள். அந்த ஆலயம் கி.மு 180 ல் இடிக்கப்பட்டது. ஆனாலும் சமாரியர்கள் வேறு இடங்களை நாடிச் செல்லாமல் அந்த மலையிலேயே கடவுளை வழிபட்டு வந்தனர். எருசலேம் தேவாலயத்தில் வழிபடுவதே சரியான முறை என்று யூதர்களும், கரிசிம் மலையே சரியான இடம் என்று சமாரியர்களும் வாதிட்டு வந்தார்கள். இது தான் யூதர்களுக்கும் சமாரியர்களுக்குமிடையே இருந்த மிகப் பெரிய கருத்து வேற்றுமைக்குக் காரணம்.

கலிலேயாவிற்கும், யூதேயாவுக்கும் இடையே தான் இருந்தது இந்த சமாரியா. கலிலேயாவிலிருந்து யூதர்கள் எருசலேம் தேவாலயத்துக்குச் செல்லவேண்டுமென்றால் சமாரியா வழியாகச் செல்லலாம். அது தான் நேரடியான பாதை. ஆனால் யூதர்கள் அப்படிச் செல்வது தங்களுக்கு இழுக்கு என்று கருதி சமாரியாவைச் சுற்றிக் கொண்டு சுற்றுப் பாதையில் தான் செல்வார்கள். அந்த அளவுக்கு யூதர்களுக்கும், சமாரியர்களுக்கும் இடையே வெறுப்பு இருந்து வந்தது.

மற்றபடி சமாரியா செல்வச் செழிப்பான பூமி. கோதுமையும், பிற தானியங்களும் அதிகமாகவே விளையும் பூமி அது. அதன் பள்ளத்தாக்குப் பிரதேசங்கள் எல்லாம் பச்சைப் பசேல் என்று தாவரங்களின் கூடாரங்களாய் தான் இருந்தன. ஆனால் என்ன பயன் ? அங்கே விளையும் பொருட்களை எங்கும் விற்பனை செய்ய முடியாது. அதை எந்த யூதரும் வாங்குவதும் இல்லை, அவர்களைத் தங்களுடன் சேர்த்துக் கொள்வதும் இல்லை. எனவே ஒரு தீவு வாழ்க்கை போல அவர்களுடைய வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. ரோமர்கள் மட்டுமே அவர்களை ஓரளவு பிரிவினை இல்லாமல் பார்த்தார்கள்.

இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், இந்த வேறுபாடுகளையெல்லாம் நன்கு அறிந்திருந்த இயேசு சமாரியாவுக்குள் நுழைந்தார். சீடர்கள் பயந்தார்கள், ஆச்சரியப்பட்டனர்.

‘இயேசுவே… நீர் சமாரியாவுக்குள் நுழைகிறீர்கள். இது யூதர்களுக்கு விரோதமான செயல்.’

‘யூதர்களுக்கு விரோதமா, சமாரியர்களுக்கு விரோதமா என்பதெல்லாம் முக்கியமல்ல. கடவுளுக்கு விரோதமில்லாதவற்றைச் செய்யவேண்டும். வாருங்கள், யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையே உள்ள பள்ளத்தாக்கில் ஒரு பாலம் அமைக்க வேண்டும்’ இயேசு சொன்னார். சீடர்கள் அமைதியாக இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள்.

சமாரியா வழியாக நடந்து கொண்டிருந்த இயேசு அங்கே இருந்த ஒரு கிணற்றின் அருகே அமர்ந்தார். அந்தக் கிணறு மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இஸ்ரவேல் என்னும் மனிதர் வெட்டிய கிணறு அது. அவருடைய சந்ததியினர் தான் இஸ்ரயேலர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இயேசு அந்தக் கிணற்றையே தேர்ந்தெடுத்து அங்கே அமர்ந்தார்.

‘நீங்கள் போய்.. உண்பதற்கு ஏதேனும் வாங்கி வாருங்கள்’ சீடர்களைப் பார்த்து இயேசு சொல்ல, சீடர்கள் உணவு வாங்கி வருவதற்காக ஊருக்குள் நுழைந்தார்கள்.

இயேசு கிணற்றை எட்டிப் பார்த்தார். கிணறு மிகவும் ஆழமாக இருந்தது. மதியம் மணி பன்னிரண்டு. அப்போது சமாரியப் பெண் ஒருத்தி தண்ணீர் எடுப்பதற்காகத் தலையில் குடமும், கையில் கயிறும் சுமந்து கிணற்றை நோக்கி வந்தாள். கிணற்றின் கரையில் ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்ட அவள் அவரை உற்றுப் பார்த்தார்.

யூதன் !

எப்படி ஒரு யூதன் சமாரியாவுக்குள் நுழைந்து இந்தக் கிணற்றின் கரையில் அமர்ந்திருக்கிறான். அவனுக்கென்ன வேலை இங்கே ? இதுவரை பார்த்திராத காட்சியாய் இருக்கிறதே ! அவளுடைய மனதில் அடுக்கடுக்காய் பல கேள்விகள் எழுந்தன.

அவள் கிணற்றை நெருங்கினாள். அவளுடைய வருகைக்காகத் தான் இயேசு காத்திருக்கிறார். அவள் மெளனமாக தண்ணீர் மொள்ள ஆரம்பிக்கிறாள்.

‘பெண்ணே… மிகவும் தாகமாய் இருக்கிறது. குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் தர முடியுமா ?’ இயேசு உரையாடலை ஆரம்பித்தார். அவள் ஏகமாய்த் திடுக்கிட்டாள்.

பேசுகிறாரே. இந்த யூதன் சமாரியப் பெண்ணாகிய தன்னிடம் பேசுகிறாரே. சமாரியர்கள் சாத்தானின் கூடாரங்கள் என்று யூதர்கள் கூவுவதை பல முறை கேட்டிருக்கிறாள் அவள். சமாரியர்களிடமிருந்து உணவு வாங்கி உண்பதும் விலக்கப்பட்ட பன்றியின் இறைச்சியை சாப்பிடுவதும் ஒன்று என்பது யூதர்களின் எழுதப்படாத சட்டங்களில் ஒன்று. அப்படி சமாரியர்களை இழிவாகக் கருதி அவர்களைப் புறக்கணிப்பது தானே யூதர்களின் வழக்கம் ! அவளுக்குள் ஆச்சரியம் ஊற்றெடுக்கிறது.

‘ஐயா…. நீர் யூதன். நான் சமாரியப் பெண். யூதர்கள் சமாரியர்களிடம் பேசுவதேயில்லை. நீர் என்னிடம் பேசுகிறீரே ! தண்ணீர் கேட்கிறீரே.’ அவள் வியப்பில் விரிந்த இமைகளைச் சுருக்காமல் கேட்டாள். சமாரியர்களின் ஒட்டு மொத்த உணர்வைப் பிரதிபலிக்கும் வார்த்தை. யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையே எவ்வளவு பெரிய பள்ளம் இருந்தது என்பதை வரலாற்றுக்குப் புரியவைக்கும் ஒரு வார்த்தை அது.

இயேசு சமாரியப் பெண்ணின் வார்த்தைகளைக் கேட்டுப் புன்னகைத்தார். ‘ஏன் ? நான் தண்ணீர் கேட்கக் கூடாதா ?’ பழக்கமான நண்பன் உரிமையாய்க் கேட்பது போல பேசினார் இயேசு.

‘அப்படியல்ல. சமாரியர்களிடம் யூதர்கள் பேசுவதில்லை. இது வழக்கத்துக்கு மாறாக இருக்கிறதே என்று தான் கேட்டேன்’

‘அம்மா.. கடவுளின் கொடை என்ன என்பதையும், உன்னிடம் தண்ணீர் கேட்பவர் யார் என்பதையும் நீ அறிந்திருந்தால் ஒரு வேளை நீயே அவரிடம் தண்ணீரைக் கேட்டிருப்பாய்’ இயேசு சொன்னார்.

‘உம்மிடம் தண்ணீர் கேட்பதா ? நானா ? நல்ல விந்தை ! உம்மிடம் தான் கயிறும் இல்லை , தண்ணீர் மொள்ள பாத்திரமும் இல்லையே. இறங்கித் தண்ணீர் எடுக்கவும் முடியாது. கிணறு மிகவும் ஆழமானது’ அவள் குரலில் கொஞ்சம் நகைப்பைக் கலந்து சொன்னாள்.

‘நான் வாழ்வு தரும் தண்ணீரைத் தந்திருப்பேன். அது கிணற்றிலிருந்து கிடைப்பதல்ல’

‘நீர் ஏதோ புரியாத விஷயங்களைப் பேசுகிறீர். இந்த கிணற்றை வெட்டியவர் யார் தெரியுமா ? இஸ்ரவேல் என்று கடவுளால் பெயரிடப்பட்ட யாக்கோபு ! அவரை விட நீர் பெரியவராய் இருக்க நியாயமில்லையே !’ அவள் புன்னகையுடன் சொன்னாள்.

‘யாக்கோபு வெட்டிய இந்தக் கிணற்றிலிருந்து நீ தண்ணீரைக் குடித்தால் உன் தாகம் தற்காலிகமாகத் தான் நிற்கும். மீண்டும் உனக்குத் தாகம் எடுக்கும். ஆனால் நான் தரும் தண்ணீரைக் குடித்தாலோ உனக்குத் தாகம் என்பதே எடுக்காது’ இயேசுவின் குரலில் தெரிந்த உறுதியும் தெளிவும் அவளை ஆச்சரியப் படுத்திக் குழப்பின.

‘என்னது ? ஒருமுறை குடித்தாலே வாழ்நாள் முழுவதும் தாகம் எடுக்காதா ?’

‘ஆம். அது உள்ளுக்குள் ஒரு ஊற்றாக மாறி நிலை வாழ்வை அளிக்கும்’ இயேசு சொன்னார்.

‘ஐயா.. ஒரு வேளை அப்படி ஒரு தண்ணீர் இருந்தால் அதை எனக்குத் தாருங்களேன். நான் நீண்ட தூரம் நடந்து இங்கே வந்து தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தாகம் எடுக்காத நீரை நீர் தந்தால் நான் தினமும் இங்கே நடந்து வரவும் தேவையிருக்காது. ஆழமான இந்தக் கிணற்றிலிருந்து கஷ்டப்பட்டு தண்ணீர் இறைக்கவும் தேவையிருக்காது’ அவள் கேட்டாள்.

‘சரி… உனக்கு அந்த வாழ்வளிக்கும் தண்ணீரைத் தருகிறேன்’

‘விரைவாய்த் தாருங்கள்’ அவள் நீர் இறைப்பதை நிறுத்தி விட்டு உற்சாகமானாள்.

‘நீ போய் உன் கணவனைக் கூட்டி வா’ இயேசு சொன்னார்.

‘ஐயா… மன்னிக்க வேண்டும் எனக்குக் கணவன் இல்லை’ அவள் குரலில் சுருதி குறைந்தது.

‘பெண்ணே உண்மையைச் சொன்னதற்காக உன்னைப் பாராட்டுகிறேன்’ இயேசு புன்னகைத்தார்.

‘நான் சொன்னது உண்மை என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் ?’

‘உனக்குக் கணவன்கள் ஐந்து பேர் இருந்தார்கள் என்பதும், இப்போது உன்னுடன் இருப்பவன் உன் கணவன் அல்ல என்பதும் எனக்குத் தெரியும்’ இயேசு புன்னகை மாறாமல் சொன்னார்.

‘ஐயா……….’ அவளுடைய குரலில் இருந்த நகைப்பு விடைபெற திகைப்பு ஓடி வந்து ஒட்டிக் கொண்டது.

‘ஐயா… நீங்கள் எல்லாம் அறிந்தவர் போல பேசுகிறீர்கள். நீங்கள் கண்டிப்பாக ஒரு பெரிய மனிதராகத் தான் இருக்க வேண்டும். நீர் இறைவாக்கினர் தானே’ அவள் படபடப்புடன் பேசினாள்.

இயேசு புன்னகைத்தார்.

‘ஐயா… உங்களைப் போன்ற ஒரு இறைவாக்கினரைக் காணும்போது கேட்கவேண்டும் என்பதற்காகவே நான் ஒரு கேள்வியை மனதில் வைத்திருக்கிறேன். இதுவரை அந்தக் கேள்விக்கு யாரும் நல்ல பதிலைச் சொல்லவில்லை. உங்களிடம் கேட்கலாமா ?’ அவளுடைய குரலில் எதிர்பார்ப்பு இழையோடியது.

இயேசு தலையசைத்தார்.

‘ஐயா… எங்கள் முன்னோர்கள் இந்த மலையில் தான் கடவுளை வழிபட்டார்கள். ஆனால் யூதர்களாகிய நீங்களோ எருசலேமில் வழிபடுவதே சிறந்த வழிபாடு என்கிறீர்கள். எங்கே கடவுளை வழிபடவேண்டும். எருசலேமிலா ? அல்லது இந்த மலையிலா ? சொல்லுங்கள்’ அவள் தன் மனதில் நீண்ட காலமாகப் பொத்தி வைத்திருந்த கேள்வியை இயேசுவின் முன்னால் வைத்தாள்.

‘அம்மா.. உண்மையைச் சொல்கிறேன். காலம் வருகிறது. அப்போது நீங்கள் கடவுளை இந்த மலையிலோ, எருசலேமிலோ வழிபட மாட்டீர்கள் !’

‘புரியவில்லையே !’ அவள் குழம்பினாள்.

‘மலைக்குச் சென்று வழிபடுவதோ, ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதோ அல்ல உண்மை வழிபாடு. உள்ளத்தில் வழிபட வேண்டும். அது தான் தந்தையின் இயல்பு’ இயேசு விளக்கினார். இந்தப் பதிலை அவள் இதுவரை கேட்டதேயில்லை. அவள் பிரமித்தாள்.

‘உண்மை இயல்பு என்றீர்களே அது என்ன ?’

‘கடவுள் உருவமற்றவர். அது தான் அவருடைய உண்மை இயல்பு. உருவம் இல்லாத ஒருவரை வழிபட ஏன் நீங்கள் மலைக்கும், ஆலயத்துக்கும் அலைய வேண்டும். உருவமற்றவரை, உருவமற்ற உள்ளத்தில் வழிபடுவதே சிறந்த வழிபாட்டு முறை !’ இயேசு சொன்னதைக் கேட்கக் கேட்க அவளுடைய மனதுக்குள் சொல்ல முடியாத தெளிவு வந்து நிறைந்தது.

‘ஐயா.. நீங்கள் சொல்வது நன்றாக இருக்கிறது. நாங்கள் கிறிஸ்து என்னும் மீட்பரை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். அவர் வரும்போது எங்களுக்கு எல்லாவற்றையும் எடுத்துரைப்பார்’ அவள் அமைதியாய்ச் சொல்ல, இயேசு தெளிவான குரலில் சொன்னார்.

‘நானே அவர் ! நம்பு. ‘

‘நானே அவர்’ என்று இயேசு சொன்னதைக் கேட்டதும் அந்தப் பெண் குடத்தையும் கயிறையும் அங்கேயே விட்டு விட்டு நகருக்குள் ஓடினாள். நகரிலுள்ள மக்கள் அவள் ஓடிவருவதை வித்தியாசமாகப் பார்த்தார்கள்.

‘நான் மெசியாவைக் கண்டேன்.. கிறிஸ்துவைக் கண்டேன்… ‘ அவள் மூச்சிரைக்கச் சொன்னாள். கேட்டவர்கள் குழம்பினார்கள்.

‘கிறிஸ்துவைக் கண்டாயா ? என்ன உளறுகிறாய் ? அதற்குரிய அடையாளங்கள் எதுவும் நிகழவில்லையே…’ மக்கள் சொன்னார்கள். மெசியா வரும்போது இயற்கையில் மாபெரும் மாற்றங்கள் நிகழும் என்பது அவர்களுடைய நம்பிக்கைகளில் ஒன்று.

‘வந்து பாருங்கள் அவரை. அவர் தான் கிறிஸ்து. அவருக்கு எல்லோரைப் பற்றியும் தெரிந்திருக்கிறது. தெளிவாகப் பேசுகிறார். நான் இதுவரை இப்படி ஒரு பேச்சைக் கேட்டதேயில்லை’ அவள் படபடத்தாள்.

‘எங்கே அவர்’

‘நம் தந்தை யாக்கோபின் கிணற்றின் அருகே நிற்கிறார்.’

அவர்கள் கிணற்றை நோக்கி ஓடினார்கள். அதற்குள் இயேசுவின் சீடர்களும் கிணற்றை வந்தடைந்தனர். இயேசு ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்ததை அவர்கள் தூரத்திலிருந்தே கண்டனர். ஆனாலும் அவரிடம் எதுவும் கேட்கவில்லை.

‘போதகரே.. உணவு வாங்கி வந்துள்ளோம்… உண்ணுங்கள்’

‘எனக்குரிய உணவு இதுவல்ல’ இயேசு சொல்ல அவர்கள் குழம்பினார்கள்.

‘இந்த உணவைத்தானே நாம் இதுவரை உண்டு வருகிறோம் ? வேறு ஏதாவது வாங்க வேண்டுமா ?’

‘என்னுடைய தந்தையாகிய கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவது தான் எனக்குப் பிடித்தமான உணவு. அதைத் தான் நான் உண்டு கொண்டிருக்கிறேன்’ இயேசு சொல்ல சீடர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

‘வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன. விதைப்பவன் ஒருவன். அறுப்பவன் வேறொருவன். அறுப்பவன் கூலி பெறுகிறான். விதைப்பவன் விளைச்சலின் பயனைப் பெறுகிறான். இப்படி, விதைப்பவனும், அறுப்பவனும் ஒருசேர பயனடைகிறார்கள். நீங்கள் உழைத்துப் பயிரிடவில்லை. உங்களை நான் அறுவடைக்கு ஆயத்தப் படுத்தினேன். எனவே நீங்கள் அந்த உழைப்பின் பயனைப் பெறுகிறீர்கள்’ இயேசு சொல்லச் சொல்ல சீடர்கள் புரிந்தும், புரியாத மனநிலையில் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையில் சமாரியப் பெண் சொன்னதைக் கேட்டு ஓடி வந்த மக்கள் கூட்டம் இயேசுவை முற்றுகையிட்டது.

இயேசு அவர்களிடம் பேசினார். மக்கள் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

‘போதகரே.. நீங்கள் எங்கள் ஊரில் தங்கி எங்களுக்கு இறையரசைப் பற்றி இன்னும் அதிகமாகச் சொல்லவேண்டும்.’ சமாரியர்களின் வேண்டுதலில் இயேசு மகிழ்ந்தார். முதன் முறையாக அவர்கள் ஒரு யூதரிடம் சகஜமாகப் பழகினார்கள். சமாரியர்கள் இயேசுவை தங்கள் ஊரிலேயே தங்கும் படி வைத்த விண்ணப்பத்தை அவர் தட்டவில்லை. அவர் அப்படி ஒரு வாய்ப்புக்காகத் தானே சமாரியாவைத் தேர்ந்தெடுத்தார். யூதர்கள் நுழைய விரும்பாத சமாரியாவின் தொழுநோயாளர் தெருக்களிலும் இயேசு நடந்து மக்களோடு கலந்துரையாடினார்.

சமாரியர்கள் இயேசுவிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டார்கள். யூதர்கள், சமாரியர்கள் என்னும் பிளவுகள் உட்பட. இயேசு பழைய சட்ட நூல்களையும், அவற்றின் கால கட்டங்களையும் அவை ஏன் அவ்வாறு எழுதப்பட்டன என்பதையும் விளக்கி, புதிய போதனையை அளித்தார். மன்னிப்பு, பொறுமை, பணிவு போன்ற புதிய போதனைகள் சமாரியர்களை வியப்புக்குள் தள்ளின. இதுவரை அவர்களிடம் யாரும் இப்படிப் பேசியது இல்லை. சமாரியர்கள் காலம் காலமாக தங்களுக்குள் தூக்கிச் சுமந்த கேள்விகளை வெளியே கொட்ட, இயேசு அவர்களுக்கு விளக்கங்களைக் கொடுக்க, நாட்கள் இரண்டு ஓடி விட்டிருந்தன.

‘உண்மையிலேயே இவர் மீட்பர் தான்…’ சமாரியர்கள் பேசத் துவங்கினார்கள்.

அனைத்துக்கும் காரணமான அந்தச் சமாரியப் பெண் மகிழ்ந்தாள்.

‘பார்த்தீர்களா ? நான் சொன்னேனே இவர் மீட்பர் தானென்று ! ‘ அவள் பெருமையுடன் மக்களைப் பார்த்துக் கேட்டாள்.

‘பெண்ணே… நீ சொன்னதனால் தான் நாங்கள் இங்கே வந்தோம். ஆனால் நாங்கள் நம்பிக்கை கொண்டது அவருடைய பேச்சைக் கேட்ட பின்பு தான். நீ சொன்னதனால் அல்ல.’ அவர்கள் பதில் சொன்னார்கள்.

இயேசு விரும்பிய ஒரு உறவுப்பாலம் அங்கே அமைக்கப்பட்டது

இயேசு வரலாறு 13 : போ.. உனது மகன் பிழைப்பான்

Image result for jesus heals son of army

இயேசு சமாரியாவை விட்டு கலிலேயாவை நோக்கி நடந்தார் நண்பர்களுடன். நாசரேத்துக்கு சற்று தொலைவில் அவரும் சீடர்களும் தங்கினார்கள். இயேசு வந்திருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட மக்கள் அவரிடம் வந்து உரையாடினார்கள். கானா வில் அவர் நிகழ்த்தியிருந்த அதிசயத்தைப் பற்றிய செய்தி அருகிலுள்ள ஊர்களுக்கும் பரவியிருந்தது. எனவே அவரை மக்கள் ஒரு ஆச்சரியங்கள் செய்யும் மந்திரவாதி போல பார்த்தார்கள். அவரை சந்தித்தால் இன்னும் ஏதேனும் நல்ல பொழுது போக்கு கிடைக்கும் என்னும் எண்ணம் சிலருக்கு, தங்களுடைய குறைகள் தீரும் என்னும் எண்ணம் சிலருக்கு, யார் இந்த இயேசு என்பதைப் பார்த்து விடும் ஆர்வம் வேறு சிலருக்கு. இப்படி கூட்டம் இயேசுவைச் சூழ்ந்தது.

அதே நேரத்தில் கப்பர் நாகூமில், ஒரு அரச அலுவலர் இருந்தார். அவருடைய மகன் மிகவும் நோயுற்றிருந்தான். தன் மகனை இழந்து விடுவோமோ என்னும் கவலையில் ஆழ்ந்திருந்தார் தந்தை. ஏராளமான செல்வங்களைக் கொண்டிருந்த அவரிடம் தன்னுடைய மகனின் நோயைத் தீர்க்கும் மருத்துவர் அமையவில்லையே என்னும் பதட்டமும், சோகமும் நிறைந்திருந்தது. அவருடைய பணியாளன் அவரிடம் வந்து

‘தலைவரே.. போதகர் இயேசு கானா அருகே தங்கியிருக்கிறாராம். இப்போதைய சூழ்நிலையில் அவரிடம் சென்று உம்முடைய மகனுடைய சுகத்துக்காக வேண்டலாமே’ என்று பணிவாய்ச் சொன்னான்.

‘இயேசு இங்கே வந்திருக்கிறாரா ? கானாவில் திருமண வீட்டில் தண்ணீரைத் திராட்சை இரசமாக்கினாரே.. அந்த இயேசுவைத் தானே சொல்கிறாய் ?’

‘ஆம் தலைவரே. அவரே தான்’

‘அப்படியா ! ஆனால் அவரை நான் பார்த்ததில்லையே ? எப்படிக் கண்டுபிடிப்பது ?’ அரச அலுவலர் கண்களில் கொஞ்சம் நம்பிக்கை ஒளி மின்னியது.

‘அது மிகவும் எளிது என்று தான் நினைக்கிறேன். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அதை வைத்தே அவரைக் கண்டு பிடித்துவிடலாம். அதுமட்டுமன்றி அங்கே எல்லோருக்கும் அவரைத் தெரிந்திருக்கும் எனவே அடையாளம் காண்பதில் சிரமம் இருக்கும் என்று தோன்றவில்லை. நான் போய் உமது மகனின் நோயைத் தீர்க்குமாறு வேண்டவா ?’ பணியாளன் கேட்டான்.

‘வேண்டாம் வேண்டாம். நானே நேரடியாகச் சென்று அவரிடம் மன்றாடுகிறேன்’ சொன்னவர் வீட்டினுள் சென்று மகனைப் பார்த்தார். அவன் மரணத்துக்கும், வாழ்வுக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட அவருடைய கண்கள் கலங்கின. இதயம் உடைந்தது. உடனே இயேசுவைச் சந்திக்க விரைந்தார்.

இரண்டு நாள் பயணித்து இயேசு தங்கியிருந்த இடத்தைச் சென்றடைந்தார். இயேசு அங்கே சீடர்களின் கூட்டத்தில் உரையாடிக் கொண்டிருந்தார். இயேசுவின் போதனைகளைக் கேட்க ஏழைகள், வறியவர்கள், பிச்சையெடுப்பவர்கள் உட்பட ஏராளமானோர் கூடியிருந்தனர். இயேசு மக்களுக்குத் தெரிந்திருந்த சட்ட நூலில் உள்ளவற்றின் உண்மை அர்த்தங்களைப் போதித்துக் கொண்டிருந்தார். காலம் காலமாக தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டிருந்த நீதி நூல்களின் உண்மை விளக்கங்களை இயேசு சொல்ல மக்கள் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தனர். இயேசுவை அடையாளம் கண்டு கொள்ள அரச அலுவலருக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. ஓடிச் சென்று அவருடைய பாதங்களில் பணிந்தார்.

‘போதகரே… எனக்கு உதவுங்கள்’ அவர் கதறினார். இயேசு பார்த்தார். பணக்காரத் தனத்தின் மொத்த உருவமாக தன் முன்னால் வந்து நின்ற அவரைப் பார்த்துக் கேட்டார்.

‘என்ன வேண்டும் ? நீங்கள் யார் ?’

‘நான் கப்பர்நகூமிலிருந்து வருகிறேன். என்னுடைய மகன் நோய்வாய்ப் பட்டிருக்கிறான். எந்த மருத்துவராலும் அவனைக் குணப்படுத்த முடியவில்லை. நீர் தான் அவனைக் குணப்படுத்த வேண்டும்’ அவர் கண்ணீருடன் விண்ணப்பித்தார்.

‘என்னால் உம் மகனைக் குணப்படுத்த முடியும் என்று எப்படிச் சொல்கிறீர் ?’ இயேசு கேட்டார்.

‘போதகரே. நீர் தண்ணீரை திராட்சை இரசமாக்கிய அதிசயத்தை நான் அறிவேன். மருத்துவர்கள் கைவிட்ட என் மகன் ஏதேனும் அதிசயத்தால் தான் பிழைக்க முடியும். எனவே வாரும். வந்து என் மகனைப் பிழைக்க வையும்’ அவர் கண்கள் நில்லாமல் வழிந்தன.

‘நீங்கள் என்னுடைய போதனைகளை வைத்து என்னை நம்புவதில்லை. நீங்கள் நம்பவேண்டுமென்றால் அதிசயங்களும், அற்புதங்களும் நடக்க வேண்டும்’ இயேசு பொறுமையாய்ச் சொன்னார்.

தன்னுடைய பதட்டத்தைக் கணக்கில் கொள்ளாமல் இயேசு இப்படி பொறுமையாய் இருக்கிறாரே என்று கவலைப்பட்டார் அரச அலுவலர்.

‘போதகரே.. விரைவாய் வாரும். கப்பர் நகூமுக்குச் செல்லவே இரண்டு நாட்கள் ஆகும். விரைவாய்ப் போவோம். இல்லையேல் என் மகன் இறந்து விடக் கூடும்’ அவர் அவசரப் படுத்தினார்.

இயேசு அவனைப் பார்த்தார்.

‘இப்போது மணி என்னவாகிறது ?’

‘பிற்பகல் ஒரு மணி’

‘இந்த நேரம் முதல் உம்முடைய மகன் சுகமாய் இருப்பான். கவலைப்படாமல் செல்லுங்கள்’ இயேசு சொன்னார். அந்த வார்த்தைகளை அப்படியே நம்பிய அலுவலர் இயேசுவிடமிருந்து விடைபெற்று தன்னுடைய வீட்டுக்குப் புறப்பட்டார். சீடர்களும் கூடியிருந்த கூட்டத்தினரும் ஸ்தம்பித்தனர். அவர்களுக்கு நடப்பது எதுவும் விளங்கவில்லை. இதுவரை அவர்கள் நோயாளியை சந்தித்து எண்ணை பூசி குணப்படுத்துவதைத் தான் அறிந்திருந்தார்கள். ஒரு வார்த்தை சொல்லியே குணப்படுத்த முடியுமா என்னும் ஐயம் அவர்களை ஆட்கொண்டது. ஆனாலும் யாரும் இயேசுவை எதிர்த்துக் கேள்வி கேட்கவில்லை. இயேசுவின் மீது அவர்களுக்கு ஒரு பயம் கலந்த பணிவு தோன்றியது. தங்களையும் ஏதேனும் சபித்து விடுவாரோ என்று கூட கூட்டத்தினர் கருதியிருக்கக் கூடும்.

மறுநாள். வழியிலேயே பணியாளன் அரச அலுவலரை எதிர்கொண்டு ஓடி வந்தான். பணியாளனைக் கண்ட அலுவலரின் உள்ளம் பதறியது.

‘என்ன ஆச்சு ? ஏன் பதட்டமாய் ஓடி வருகிறாய் ?’ தன் மகனுக்கு ஏதேனும் நேர்ந்து விட்டதோ என்னும் கவலை அவரைப் பிடித்து உலுக்கியது.

‘பதட்டம் இல்லை தலைவரே… பரவசம். உம்முடைய மகன் நலமடைந்து விட்டான்’

அரச அலுவலரின் உள்ளம் ஆனந்தத்தால் துள்ளியது. ‘ எ…என்ன ? என் மகன் நலமடைந்து விட்டானா ? உண்மையாகவா சொல்கிறாய் ? ‘ அவர் ஆனந்த மிகுதியால் கத்தினார். குதிரையிலிருந்து துள்ளிக் குதித்து இறங்கினார். பணியாளரை அப்படியே கட்டிக் கொண்டு ஆனந்தத்தை வெளிப்படுத்தினார். பணியாளன் பரவசமானான்.

‘தலைவரே. உமது மகன் நேற்று திடீரென்று எழுந்து நடந்தார். உணவருந்தினார். நோயில் கிடந்தவரைப் போலவே இல்லை. தூங்கி எழுந்தவர் போல இருக்கிறார்’ பணியாளனும் ஆனந்தத்தைப் பகிர்ந்தான்.

‘சரி.. எப்போது நலமடைந்தான் ?’

‘நேற்றைக்குத் தலைவரே. நான் அவருடைய படுக்கையருகே தான் இருந்தேன்’ பணியாளன் சொன்னான்.

‘நேற்றைக்கு எத்தனை மணிக்கு சுகமடைந்தான் என்று தெரியுமா ? ‘

பணியாளன் வினாடி நேரமும் தாமதியாமல் சொன்னான்.

‘ஒரு மணிக்கு’

அலுவலர் உடனே தரையில் மண்டியிட்டு கடவுளைப் புகழ்ந்தார். இயேசுவின் வார்த்தைகளினால் தன் மகன் குணம்பெற்றிருக்கிறான் என்பதை அவர் முழுமையாக நம்பினார். இயேசுவுக்கு நன்றி சொல்லிக் கொண்டே வீட்டை நோக்கி விரைந்தார்.

அந்தச் செய்தி காட்டுத் தீ போல சட்டென்று பரவியது. ஊர்கள் தோறும் இயேசுவின் கானா திருமண திராட்சை ரச அதிசயமும், அலுவலர் மகன் குணமான அற்புதமும் நிறுத்தாமல் பேசப்பட்டன. இயேசுவின் பேச்சைக் கேட்க ஏராளமான ஆட்கள் குவிந்தனர். ஆலயங்களுக்கும் இயேசு அழைக்கப்பட்டார்.

இயேசு வரலாறு 14 : பேய் பிடித்தவன்

Image result for Jesus and demon possessed man in temple

இயேசு தொழுகைக் கூடம் ஒன்றிற்கு வந்தார்.
அங்கே இருந்த மக்கள் மோசேயின் சட்ட திட்டங்களையும், தோரா நூலையும் நன்கு அறிந்திருந்தவர்கள். அவர்கள் முன்னிலையில் வந்து நின்ற இயேசு, ஏட்டுச் சுருளை எடுத்து வாசித்தார்.

‘ஆண்டவரின் ஆவி என் மேலே.. ஏனெனில் அவர் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார். எளியோருக்கு நற்செய்தி சொல்லவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என அறிவிக்கவும், குருடருக்குப் பார்வை வழங்கவும், இதயம் நொறுங்குண்டவர்களைத் தேற்றவும், ஆண்டவரின் அருள் தரும் ஆண்டினை பிரகடனப் படுத்தவும் அவர் என்னை ஏற்படுத்தினார்’ இயேசு சொல்ல மக்கள் கூட்டம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தது. இயேசுவின் போதனைகள் அதிலிருந்து ஒரு புது பரிமாணத்தை அடைந்தன.

கடவுள் தம்முடன் நேரடியாகப் பேசும் பரவச உணர்வுடன் பலரும் அவருடைய போதனைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மரியாள் இப்படி ஒரு மகனைப் பெறுவதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று மக்கள் பேசத் துவங்கினார்கள். இயேசுவுக்கு எதிராக பின்னர் ஒரு நாள் திரும்புவோம் என்று அவர்களே கூட நினைத்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மக்கள் இயேசுவின் போதனைகளை நேசிக்கவும், அவர் பெயரை பரப்பவும் துவங்கினார்கள்.

இயேசுவும் அந்த எளிய மக்களோடு உரையாடுகையில் பழைய சட்ட புத்தகங்களின் புரிந்து கொள்ள முடியாத பகுதிகளை வாசித்துச் செல்லும் வழக்கமான மத போதகராக இருக்கவில்லை. அவர் தன்னுடைய சிந்தனைகளை, கருத்துக்களை சொல்வதற்கு கதைகளைத் தேர்ந்தெடுத்தார். அவர் தேர்ந்தெடுத்த கதைகளும் மக்களின் அன்றைய தொழில் சார்ந்த கதைகளாக இருந்தன. அவருடைய போதனைகள் கூர்மையாகவும், நேர்மையாகவும், சுவையாகவும் இருந்ததால் மக்கள் கூட்டம் அவற்றை எளிதில் உள்வாங்கிக் கொண்டது.

ஆலயம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இயேசு போதித்துக் கொண்டிருந்தார்.

திடீரென ஒரு கதறல் ஒலி அந்த அமைதிக் கூடாரத்தைச் சத்தத்தால் நிறைத்தது.

எல்லோரும் குரல் வந்த திசையில் பார்த்தனர். அங்கே கூட்டத்தின் நடுவே பேய்பிடித்தவன் ஒருவன் கத்திக் கொண்டிருந்தான். அவனை அந்த கூட்டத்தில் இருந்த பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருந்தது. அவன் சாத்தானின் பிடியில் சிக்கியிருந்தவன். அந்நாட்களில் பேய் பிடித்திருப்பது என்பதையும், நோய் பிடித்திருக்கிறது என்பதையும் பாவத்தின் பரிசுகளாகத் தான் மக்கள் பார்த்தார்கள். அவர்களோடு நெருங்கிப் பழகுவது சாத்தானோடு நெருங்கிப் பழகுவது போல என்று நம்பியதால், மக்கள் அவர்களை விட்டு விலகியே இருந்தார்கள். அவன் தான் ஆலயத்துக்குள் தைரியமாய் நுழைந்து கூட்டத்தினரிடையே புகுந்து களேபரம் செய்கிறான்.

இயேசு அவனைப் பார்த்தார். அவருடைய பார்வையைத் தாங்க முடியாத அந்த பேய்பிடித்தவன் அலறினான்.

‘நசரேயனாகிய இயேசுவே… ஏன் எங்களை நசுக்கப் பார்க்கிறீர்’

இயேசு மீண்டும் அவனை உற்றுப் பார்த்தார். பேய்பிடித்தவன் தொடர்ந்து கத்தினான்

‘வேண்டாம். உமக்கும் எனக்கும் இடையே தகராறு எதற்கு. என்னை என் வழியில் விட்டு விடுங்கள். என்னை நசுக்க வேண்டாம். நீர் யார் என்பதை நான் அறிவேன். நீர் கடவுளின் மகன்’.

‘நீர் கடவுளின் மகன்’ என்று பேய்பிடித்தவன் அலறியதைக் கேட்ட கூட்டத்தினர் திகிலும், திகைப்பும் அடைந்தனர். அதுவரை மக்கள் அவரைக் கடவுளின் மகன் என்று உரக்கக் கூறியதில்லை. பேய்பிடித்தவன் கத்தியதும் மக்களிடையே பெரும் சலசலப்பு.

‘பேசாதே… இவனை விட்டு அகன்று போ. அவனை நிம்மதியில் இருக்க விடு’ இயேசு பேயை அதட்டினார்.

இயேசுவின் கட்டளையைக் கேட்ட பேய் அந்த மனிதனை கூட்டத்தினரிடையே தள்ளி விட்டு பெரும் கூச்சலுடன் வெளியேறியது. பேய் நீங்கிய மனிதன் தான் ஒரு கூட்டத்தின் நடுவில் நிற்பதையும், எல்லோரும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதையும் கண்டு குழப்பமடைந்தான்.

‘பேய்களுக்குக் கூட கட்டளையிடும் இவர் உண்மையிலேயே கடவுளின் மகன் தான்’ கூட்டத்தினர் பலர் அதிசயித்தனர்.

இயேசு தொடர்ந்து மக்களுக்குப் போதித்தார். மக்களோ சற்று முன் நடந்த நிகழ்ச்சியின் பாதிப்பிலிருந்து விடுபட முடியாதவர்களாக விழித்தனர்.

Comments are closed.