திருத்தந்தையின் அக்டோபர் மாத செபக்கருத்து

இறைவன், கத்தோலிக்கத் திருஅவையை, தீயவனின் தாக்குதலிலிருந்து காத்தருள, விசுவாசிகள் அனைவரும் செபமாலையைச் செபித்து, தலைமைத் தூதரான புனித மிக்கேலிடமும் சிறப்பான செபத்தை எழுப்புமாறு, திருத்தந்தை விடுத்த அழைப்பு, ஒரு காணொளிச் செய்தியாக, அக்டோபர் 9, இச்செவ்வாய் மாலை வெளியானது.

தீயோனாகிய அலகையிடமிருந்து திருஅவையைக் காக்க…

தீயோனாகிய அலகை, பெரும் சக்தியுடன் தன்னையே நம்முன் நிறுத்திக் கொள்கிறான். அவன் பரிசுகளையும் கொணர்கிறான். ஆனால், அப்பரிசுகளுக்குள் என்ன உள்ளது என்பது நமக்குத் தெரியாது என்ற கூற்றுடன், திருத்தந்தையின் காணொளிச் செய்தி துவங்குகிறது.

திருஅவையைப் பிரிக்க விழையும் அலகையின் தாக்குதல்களிலிருந்து திருஅவையைக் காத்தருள, அக்டோபர் மாதத்தில், செபமாலையை ஒவ்வொரு நாளும் செபித்து, ‘உமது பாதுகாவலைத் தேடி ஓடிவருகிறோம்’ என்ற சொற்களுடன் அன்னை மரியாவிடமும், தலைமைத் தூதர் மிக்கேலிடமும் வேண்டிக்கொள்ளுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காணொளிச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

காணொளி வழியே திருத்தந்தையின் செபக்கருத்து

இயேசு சபையினர் நடத்தும் செபத்தின் திருத்தூது என்ற பணிக்குழு, ஒவ்வொரு மாதமும், திருத்தந்தை வெளியிடும் செபக்கருத்துக்களை, The Pope Video என்ற காணொளி வடிவில் தொகுத்து வழங்கி வருகிறது.

கடந்த ஞாயிறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூவேளை செப உரை வழங்கிய வேளையில், அக்டோபர் 7ம் தேதி கொண்டாடப்பட்ட செபமாலை அன்னை மரியாவின் திருநாளை நினைவுகூர்ந்து, திருஅவைக்காக சிறப்பாக செபிக்குமாறு விடுத்த அழைப்பு, திருத்தந்தையின் காணொளியாக இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.

திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “நற்செய்தியின் புதுமைத்தனம், நம் ஆன்மா, உடல், தினசரி வாழ்வு, அனைத்தையும், உள்ளும், புறமுமாக உருமாற்றுகிறது” என்ற சொற்கள் வெளியிடப்பட்டன.

Comments are closed.