மறையுரைச் சிந்தனை (அக்டோபர் 11)

விடாமுயற்சியுடன் கூடிய ஜெபம்!

இறைப்பற்றுள்ள ஒருவர், ஒருநாள் தூங்கும்போது ஒரு கனவு கண்டார். அந்த கனவில் அவர் விண்ணுலகத்திற்கு தேவதைகளால் கூட்டிக்கொண்டு போகப்பட்டார். 

அவரைக் கூட்டிக்கொண்டு போன தேவதைகள் அவரிடம் விண்ணகத்தில் இருந்த ஒவ்வொரு அறையாகக் காட்டினார்கள். அப்போது ஓர் அறையில் நிறையப் பரிசுப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அந்த மனிதர் தேவதைகளிடம், “இவையெல்லாம் என்ன?” என்று கேட்டார். அதற்கு ஒரு தேவதை அவரிடம், “இவையெல்லாம் மண்ணகத்தில் இருக்கின்ற மனிதர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருக்கின்ற பரிசுப் பொருட்கள்… அவர்கள் இறைவனிடத்தில் ‘இறைவா! எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு’ என்று வேண்டுகிறார்கள். ஓரிரு முறை அவர்கள் இறைவனிடம் இவ்வாறு வேண்டுகின்றார்கள். இறைவனும் அவர்கள்மீது அக்கறை கொண்டு, அவர்கள் வேண்டுவதை எங்கள் வழியாக கொடுத்து அனுப்புகின்றார். ஆனால் அவர்கள் ஓரிரு முறை இறைவனிடம் வேண்டிவிட்டு, தங்கள் வேண்டியது கிடைக்கத் தாமதமானதும் அதை மறந்துவிடுகின்றார்கள். அதனால்தான் அவர்கள் வேண்டியது எல்லாம் அவர்களைச் சென்று சேராமல் இங்கே, இந்த அறையிலே கிடக்கின்றன” என்றது.

சீனாவில் பாரம்பரியமாக சொல்லப்பட்டு வருகின்ற இந்தக் கதையானது, நாம் இறைவனிடம் ஜெபிக்கின்றபோது, இடைவிடாது ஜெபிக்கவேண்டும் என்ற ஆழமான உண்மையை நமக்குக் கற்றுத் தருகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தன்னுடைய சீடர்களும் இறைவனிடம் எப்படி ஜெபிக்கவேண்டும் என்ற உண்மையை நமக்குக் கற்றுத் தருகின்றார். இதற்கு முந்தைய பகுதியில் (நேற்றைய நற்செய்தியில்) ஜெபிக்கக் கற்றுத்தாரும் என்று சீடர்கள் கேட்டதும் அவர்களுக்கு ஜெபிக்கக் கற்றுக்கொடுத்த இயேசு, இன்றைய நற்செய்தியில் எத்தகைய மனநிலையோடு ஜெபிக்கவேண்டும் என்பதை நமக்குக் கற்றுக்தருகின்றார். அதற்காக அவர் சொல்கின்ற உவமைதான் ‘இரவு நேரத்த்தில் நண்பனிடத்தில் அப்பம் கேட்கச் சென்ற ஒருவனுடைய உவமை”.

இந்த உவமையில் வரும் மனிதன், தனக்காக அல்ல, இரவு நேரத்தில் தன்னை நாடி வந்த நண்பனுக்காக இன்னொரு நண்பனிடம் அப்பம் கேட்கச் செல்கின்றான். அந்த நண்பனோ தன்னுடைய மனைவி பிள்ளைகளோடு படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றான். அப்படிப்பட்ட சூழலில் இந்த மனிதன் அவனிடம் அப்பம் வேண்டுமென்று கேட்கின்றான். அவனுக்கோ இவனுக்கு அப்பம் தர மனமில்லை. ஆனாலும் வந்தவனுடைய தொல்லையின் பொருட்டு அவனுக்கு அப்பத்தைக் கொடுக்கின்றான்.

இந்த உவமையைச் சொல்லும் இயேசு, உவமையில் வரும் மனிதன் தன்னுடைய விடாமுயற்சியால் நண்பனிடமிருந்து அப்பத்தைப் பெற்றுக்கொண்டதுபோல், நாமும் இறைவனிடம் விடாமுயற்சியோடு ஜெபித்தோம் என்றால், நாம் வேண்டுவது கிடைக்கும் என்கின்றார்.

பலநேரங்களில் நாம் இறைவனிடம் கேட்பதே கிடையாது, ஒருவேளை கேட்டாலும் கூட அதைத் தொடர்ந்து கேட்பது கிடையாது. அதனாலேயே நாம் இறைவனின் அருளைப் பெற்றுக்கொள்ளாமலே போகின்றோம். தூய யாக்கோபு தன்னுடைய திருமுகத்திலே கூறுவார், “நீங்கள் ஆசைப்படுவதைப் பெறமுடிவதில்லை. ஏனெனில் நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை” (4:2). ஆம், நாம் இறைவனிடத்தில் கேட்பதில்லை, அதனால்தான் பெற்றுக்கொள்வதுமில்லை.

எனவேதான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்கின்றார், “கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்” என்று. ஆம், நாம் கேட்கின்றபோது பெற்றுக்கொள்கின்றோம். தேடுகின்றபோது கண்டடைகின்றோம்; தட்டுகின்றபோது அது திறக்கப்படுகின்றது. காரணம் இதுதான், மண்ணுலகில் இருக்கின்ற நம்முடைய தந்தையர்களே நாம் கேட்பதைக் கொடுக்கின்றபோது, விண்ணுலகில் இருக்கின்ற நம்முடைய விண்ணகத் தந்தை நாம் கேட்பதைக் கொடுக்காமல் இருப்பாரா? அல்லது நாம் கேட்பதை விடுத்து வேறொன்றைக் கொடுப்பாரா?. நிச்சயம் நாம் கேட்பதைத்தான் கொடுப்பார்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்கின்ற வார்த்தைகளிலிருந்து நாம் இரண்டு முக்கியமான உண்மைகளை நம்முடைய கருத்தில் கொள்ளவேண்டும். ஒன்று நாம் இறைவனிடம் கேட்கும்போது அவர் நமக்குத் தருவார் என்ற நம்பிக்கையோடு கேட்கவேண்டும். நம்பிக்கையோடு கேட்கின்ற அதே நேரத்தில் விடாமுயற்சியோடு கேட்கவேண்டும். ஏனென்றால், இன்றைக்குப் பலர், இறைவனிடம் ஒருமுறையோ இருமுறையோ கேட்டுவிட்டு, தாங்கள் கேட்டது கிடைக்கவில்லை என்று சொன்னதும் இறைவனை விட்டே விலகி இருப்பதைப் பார்க்கின்றோம். நாம் இத்தகையவர்களைப் போன்று இல்லாமல், இறைவனிடம் விடாமுயற்சியோடு, மனந்தளராமல் கேட்கவேண்டும். அப்படி நாம் கேட்கின்றபோது நாம் கேட்டது கிடைக்கும் என்பது உறுதி.

ஆகவே, இறைவனிடம் வேண்டும்போது நம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் வேண்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.