மறைக்கல்வியுரை : இறைஅன்பே, வாழ்வின் உண்மையான அளவுகோல்

உலக ஆயர் மாமன்றம் இம்மாதம் 3ம் தேதி முதல், அதாவது, கடந்த புதன்கிழமை முதல் வத்திக்கானில் நடைபெற்று வருகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த ஆயர் மன்ற அமர்வுகளில் பெரும்பாலும் கலந்து கொள்வதுடன், நாட்டின் தலைவர்களைச் சந்தித்தல், புதன் பொது மறைக்கல்வி உரைகளை ஆற்றுதல், சாந்தா மர்த்தா இல்லத்தில் திருப்பலிகளை விசுவாசிகளுடன் நிறைவேற்றுதல் போன்ற தன் வழக்கமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இப்புதனன்றும், தன் பொது மறைக்கல்வி உரையை, புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பத்துக் கட்டளைகள் குறித்த தொடரில், கொலை செய்யாதே என்ற கட்டளை குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
அன்பு சகோதர சகோதரிகளே, பத்துக்கட்டளைகள் குறித்த நம் மறைக்கல்வி தொடரில் இன்று, கொலை செய்யாதே என்ற கட்டளை வழியே கூறப்பட்டுள்ள தடைகளைக் குறித்து நோக்குவோம். வாழ்வுக்கு உரிய மதிப்பை வழங்காமல் இருப்பதாலேயே, அனைத்து தீமைகளும் பிறக்கின்றன என்பதைக் கூறமுடியும். போர் மற்றும் சுரண்டலிலிருந்து, எளியோர், முதியோர், பிறக்கவிருக்கும் குழந்தைகள் மீது இழைக்கப்படும் கொடுமைகள் வரை, அனைத்து நிலைகளிலும், வாழ்வின் மீது தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. முடிவாக, அச்சம் என்பது, வாழ்வை மறுக்கும் நிலைகளின் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது. மற்றவர்களை வரவேற்க வேண்டுமெனில், இந்த அச்சம் எனும் சவாலை நாம் முறியடிக்கவேண்டும். நோயுற்ற ஒரு குழந்தையின் மீது அதன் பெற்றோர் காட்டும் இதயம் தொடும் அக்கறையில், வாழ்வை புறக்கணிப்பதையல்ல, மாறாக, வாழ்வை வரவேற்கும் நிலையைக் காண்கிறோம். வாழ்வைப் பாதுகாத்து காப்பாற்றவேண்டும் என்று அப்பெற்றோர் கொண்டுள்ள ஆர்வம், வாழ்வு விலை மதிப்பற்றது என்பதன் அடையாளமாக உள்ளது. வாழ்வின் விலைமதிப்பற்ற தன்மை, நோயால் துன்புறுவோரில் காணப்படுகிறது, மற்றும், இவர்கள், கடவுளின் கொடையாகவும், இறை அன்பில் நாம் வளர்வதற்கு உதவுபவர்களாகவும் உள்ளனர். இறை அன்பே, வாழ்வின் உண்மையான அளவுகோல். வாழ்வில் ஒதுக்கப்பட்ட பலவீனர்கள், ஏழைகள், நோயாளிகள் ஆகியோரை, தன் வாழ்நாள் முழுவதும், மற்றும், சிலுவையிலும் கூட அரவணைத்ததன் வழியாக, வாழ்வின் இரகசியத்தை வெளிப்படுத்தினார், இயேசு. நம் பலவீனங்களின் மத்தியிலும், இயேசு, நமக்கு, அன்பின் மகிழ்வை வெளிப்படுத்துவதற்காக, நம் இதயங்களைத் தேடி வருகிறார். நற்செய்தி நமக்கு எடுத்துரைப்பதுபோல், ‘தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல், நிலைவாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு, கடவுள், உலகின்மேல் அன்பு கூர்ந்தார்’ (யோவான் 3:16).
இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலங்கை, பிலிப்பீன்ஸ், மலேசியா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளிலும் இருந்து வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Comments are closed.