மறையுரைச் சிந்தனை (அக்டோபர் 10)

இயேசு கற்றுக்கொடுத்த ஜெபம்!

சிறு நகரொன்றில் பெண்ணொருத்தி இருந்தார். அவர் மிகவும் பக்தியுள்ள பெண்மணி. அவர் ‘விண்ணுலகிலுள்ள எங்கள் தந்தையே!’ என்ற ஜெபத்தை அடிக்கடி சொல்லுவார்.

ஒருநாள் அவர் இவ்வாறு ‘விண்ணுலகிலுள்ள எங்கள் தந்தையே’ என்ற ஜெபத்தை சொல்லிக்கொண்டிருக்கும்போது அதில் வருகின்ற ‘உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக’ என்ற வரிகளைச் சொல்லத் தொடங்கியதும் அவர் கலக்கமுற்றார். உடனே அவர் பங்குத்தந்தையிடம் விரைந்து சென்று, “சுவாமி! நான் விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே! என்ற ஜெபத்தை அடிக்கடி சொல்லக்கூடியவள். இன்றைக்கு நான் அந்த ஜெபத்தை கொண்டிருக்கும்போது, அதில் வரக்கூடிய ‘உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக’ என்ற வரிகளைச் சொல்லத் தொடங்கியதும் நான் மிகவும் கலக்கமுற்றேன். என்னுடைய கலக்கத்திற்குக் காரணம் இதுதான்: ஒருவேளை இறைவனின் திருவுளம் என்னுடைய மகனை என்னிடமிருந்து எடுத்துக்கொள்வதாக இருந்தால் அது நடந்துவிடுவோமோ? என்று கேட்டார்.

பங்குத்தந்தை சிறிதுநேரம் பொறுமையாக யோசித்துவிட்டுச் சொன்னார், “உங்களுக்கு ஒரு மகன் இருப்பதாகச் சொன்னீர்கள் அல்லவா? ஒருநாள் அந்த மகன் உங்களிடத்தில் வந்து, ‘அம்மா! நீங்கள் எனக்கு என்ன வேலை கொடுத்தாலும் செய்வேன்’ என்று உங்களிடத்தில் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் அவனுக்கு மிகவும் கடினமான வேலைகளைக் கொடுப்பீர்களா? அல்லது எளிதான வேலையைக் கொடுப்பீர்களா?”. “மகன் அப்படிச் சொல்லிவிட்டான் என்பதற்காக அவனுக்குக் கடினமான வேலை கொடுக்கமுடியுமா?, அவன் என் அன்பு மகன். அப்படியெல்லாம் நான் அவனுக்கு கடினமான வேலைகளை எல்லாம் கொடுக்கமாட்டேன்” என்றார் அந்தப் பெண்மணி.

உடனே பங்குத்தந்தை அந்தப் பெண்மணியிடம், “உங்கள் மகன் உங்களிடத்தில் கடினமான வேலையைக் கொடுங்கள் என்று சொன்னபோதும், நீங்கள் அவனுக்கு எளிதான வேலையைத்தான் கொடுக்கிறீர்கள். அப்படியானால் உங்களை விட உங்கள் மகன்மீது அதிகமாக அன்புகொண்டிருக்கின்ற இறைவன், நீங்கள் அவரிடம் ‘உமது திருவுளம் நிறைவேறுக’ என்று சொல்லி ஜெபித்ததும் அவர் உங்களுடைய மகனை உங்களிடமிருந்து எடுத்துவிடமாட்டார். காரணம் அவர் நன்மையே உருவானவர்” என்றார்.

பங்குத்தந்தையிடமிருந்து இத்தகையதொரு விளக்கத்தைக் கேட்ட அந்த பெண்மணி ‘விண்ணுலகிலுள்ள எங்கள் தந்தையே’ என்ற ஜெபத்தை இன்னும் பக்திப் பரவசத்தோடு சொல்லி தன்னுடைய வாழ்விற்கான ஆறுதலைப் பெற்றுக்கொண்டார்.

இயேசு கற்றுக்கொடுத்த ஜெபம் சாதாரண ஜெபம் கிடையாது. அது நம்முடைய வாழ்விற்கான எல்லா ஆற்றலையும் ஆறுதலையும் தரக்கூடிய ஒரு ஜெபம்.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் அவரிடத்தில் வந்து, “யோவான் தன்னுடைய சீடர்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்குக் கற்றுத்தாரும்” என்று கேட்கிறார்கள். உடனே இயேசு அவர்களுக்கு ‘விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே’ என்ற ஜெபத்தைக் கற்றுத் தருகின்றார். இயேசு கற்றுத்தரும் இந்த ஜெபத்தில் இறைவனை அவர் தந்தையென அழைக்கச் சொல்கின்றார். இறைவனை நாம் எங்கோ இருக்கின்ற ஒருவராகப் பார்க்காமல், அவர் நம்மோடு இருந்து நம்மீது உண்மையான அன்புகொண்டிருக்கின்ற ஒரு தந்தையாகப் பார்க்கச் சொல்லி, அவரிடத்தில் வேண்டச் சொல்கின்றார்.

இறைவனைத் தந்தையாகப் பார்த்து, அவரிடம் ஜெபிக்கச் சொல்லும் இயேசு, நமது ஜெபத்தில் தந்தை இறைவனுக்கே முதன்மையான இடம் கொடுக்கச் சொல்கின்றார். இயேசு கற்றுத் தரும் ஜெபத்தில் வருகின்ற ‘உமது ஆட்சி வருக, உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல், மண்ணுலகிலும் நிறைவேறுக’ என்ற வார்த்தைகள் நமக்கு அதைத்தான் எடுத்துக்கூறுகின்றன. பல நேரங்களில் நாம் இறைவனிடத்தில் வேண்டுகின்றபோது, நம்முடைய தேவைகளைத் தான் முதன்மைப்படுத்திச் ஜெபிக்கின்றோம். உண்மையான ஜெபம் இறைவனை முதன்மைப் படுத்துவதாகவும் அவருக்கு புகழ்ச்சியையும் மாட்சியையும் சேர்ப்பதாகவும் இருக்கவேண்டும் என்கின்றார் இயேசு.

ஜெபிக்கின்றபோது இறைவனுக்கு முதன்மையான இடம் கொடுக்க வேண்டும் எனச் சொல்லும் இயேசு, நிறைவாக நம்முடைய தேவைகளுக்காக இறைவனிடம் வேண்டச் சொல்கின்றார். நமது அன்றாட உணவிற்காகவும் நமது குற்றங்களை இறைவன் மன்னிக்கவேண்டும் என்றும் அவர் நம்மை சோதனையிலிருந்து காத்தருளவேண்டும் என்றும் ஜெபிக்கச் சொல்கின்றார். இத்தகைய அர்த்தம் பொதிந்த, நம்முடைய தேவைகள் அனைத்தையும் உள்ளடக்கிய இயேசு கற்றுக்கொடுத்த இந்த ஜெபத்தினை நம்பிக்கையோடு நாம் சொல்கின்றபோது நம்முடைய வாழ்விற்கான எல்லா ஆசிர்வாதத்தையும் பெற்றுக்கொள்வது உறுதி.

ஆகவே, இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்த ஜெபத்தை நம்பிக்கையோடு சொல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.