அக்டோபர் 9 : நற்செய்தி வாசகம்

மார்த்தா அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுடன் ஓர் ஊருக்குச் சென்றார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்றார்.

ஆண்டவர் அவரைப் பார்த்து, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரைச் சிந்தனை :

“தேவையானது ஒன்றே”!

பெண் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் கடைத்தெருவுக்குச் சென்றபோது ஒருகடையில் ‘பேசும் கிளி’ விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அது அந்தப் பெண்ணுக்குப் பிடித்துப் போக, அவர் அதை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார். வீட்டில் அதை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்தார். கிளி பேசும் என்று ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார். ஆனால் அன்றைக்கு அது பேசவே இல்லை. ‘சரி புது இடம் அல்லவா, அதனால்தான் பேசாமல் இருக்கிறது போலும்’ என்று அவர் இருந்துவிட்டார்.

மறுநாளும் கிளி பேசாமல் இருப்பதைக் கண்டு அந்தப் பெண்ணுக்கு ஆச்சரியமாக இருந்தது. உடனே அவர் கடைத்தெருவிற்குச் சென்று, பேசும் கிளியைக் கொடுத்த கடைக்காரரிடம், “கிளி பேசவே இல்லை” என்றார். “அப்படியா சங்கதி! கிளிக்கு கண்ணாடி என்றால் உயிர். அது கண்ணாடியில் தன்னுடைய முகத்தைப் பார்த்தது என்றால், தன்னாலே பேசும்” என்றார். உடனே அந்தப் பெண் ஒரு கண்ணாடியை வாங்கி, கிளியின் கூட்டின் மாட்டி வைத்தார். அப்போதும் கூட கிளி பேசுவும் பேசவில்லை.

இதனால் ஏமாந்துபோன அந்தப் பெண் மறுநாள் காலையில் அந்தக் கடைக்காரரிடம் போய், “கிளிக் கூட்டில் கண்ணாடி வைத்தப்போதும் அது பேசவே இல்லை” என்றார். அதற்குக் கடைக்காரர், “கிளிக்கு ஏணி என்றால் இஷ்டம். சில சமயங்களில் அது ஏணியில் நடந்துகொண்டே பேசும்” என்றார். உடனே அந்தப் பெண் ஒரு சின்ன ஏணியைச் செய்து அதனை கிளிக்கூட்டில் மாட்டி வைத்து, கிளி பேசுமா என்று ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார். அப்போதும் கிளி பேசவே இல்லை. இதனால் பொறுமை இழந்த அந்தப் பெண், மறுநாள் விடிந்தும் விடியாததுமான நேரத்தில் கடைக்காரரிடம் சென்று, “கிளி இப்போதும் பேசவில்லை” என்றார். “கிளிக் கூட்டில் ஊஞ்சல் இருக்கின்றதா? ஊஞ்சல் இருந்தால் அது ஆடிக்கொண்டே பேசும்” என்றார் கடைக்காரர். அந்தப் பெண் பொறுமை இழந்து, கிளி கூண்டில் ஒரு ஊஞ்சலையும் மாட்டி வைத்து, அது பேசுமென்று ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார். அப்போதும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இப்படியே ஓரிரு நாட்கள் அவர், அந்தக் கிளி பேசும் என்று காத்துக்கொண்டே இருந்தார். கிளியோ எதுவும் பேசவில்லை. ஒருநாள் அதிகாலையில் அவர் தூங்கி எழுந்து, கிளிக் கூண்டைப் பார்த்தப்போது கிளி செத்துக் கிடப்பதைக் கண்டார். உடனே அவர் அந்த செத்த கிளியைத் தூக்கிக் கொண்டு கடைக்காரரிடம் ஓடினார். “ஐயா! நீங்கள் கொடுத்த பேசும் கிளி இப்போது செத்த கிளியாகிவிட்டது” என்றார். அதற்கு அந்த கடைக்காரர், “அப்படியா! இந்தக் கிளி சாவதற்கு முன்பு, ஏதாவது சொல்லியதா?” என்று கேட்டார். “ஆமாம் சொல்லியது, கடைசியாக அது ‘ஏதாவது சாப்பாடு கிடைக்குமா?’ என்று சொல்லியது. நான் அதற்காகச் சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவதற்குள் அது செத்தே போய்விட்டது” என்றார்.

“கிளிக்கு எல்லாம் செய்து தந்த நீங்கள், அதற்கு மிக முக்கியமான சாப்பாடு செய்து தரவில்லையே” என்று மிகவும் வருத்தப்பட்டார்.

கதையில் வரும் பெண்ணைப் போன்று நாமும் பலநேரங்களில் வாழ்க்கைக்கு எது முக்கியமோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தேவையில்லாத காரியங்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். இன்றைய இறைவார்த்தையோ மனித வாழ்விற்கு எது முக்கியமோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ நம்மை அழைக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு ஓர் ஊருக்குச் செல்கின்றார். அங்கே ஒரு பெண் அவரைத் தம் வீட்டில் வரவேற்கின்றார். அவர் பெயர் மார்த்தா. மார்த்தாவிற்கு மரியா என்ற சகோதரி ஒருவர் இருக்கின்றார். அவரோ இயேசுவின் காலடியில் அமர்ந்து இயேசு சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்க, மார்த்தாவோ பற்பல பணிகளில் மிகவும் பரபரப்பாக இருக்கின்றார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய சகோதரி தனக்கு ஒத்தாசை செயவில்லை என்றும் குறைபட்டுக் கொள்கின்றார். அப்போது இயேசு அவரிடம், “மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகின்றாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்” என்கின்றார்.

மார்த்தாவோ, தன்னுடைய வீட்டிற்கு வந்த இயேசுவை நல்லவிதமாய் கவனிக்க வேண்டும் என்று இருந்தார். அது தேவைதான். ஆனால் அதைவிட முக்கியம் அவருடைய காலடியில் அமர்ந்து அவருடைய வார்த்தையைக் கேட்பது. மரியா இயேசுவின் காலடி அமர்ந்து அவருடைய வார்த்தையைக் கேட்டார். அதனால்தான் அவரை நல்ல பங்கைத் தேர்தெடுத்துக் கொண்டார் என்று இயேசு பாராட்டுகின்றார்.

நமது வாழ்வில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றோம் என்று யோசிப்போம். அனைத்திற்கு மேலாக அவருக்கு ஏற்புடைய காரியத்தை நாடுவோம். (மத் 6:33) அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

– மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Comments are closed.