ஒதுங்கிச் செல்லாமல் நெருங்கிச் சென்ற நல்ல சமாரியர்

இறைவன் நமக்கு வழங்கும் ஆச்சரியங்களைக் காணும் திறந்த மனம் கொண்டிருக்க வேண்டும் என்றும், தேவையில் உள்ளோரை நெருங்கிச் செல்லவேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 8, இத்திங்களன்று காலையில் வழங்கிய மறையுரையில் கூறினார்.
தனது உறைவிடமான சாந்தா மார்த்தா இல்லத்தில், இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, இத்திருப்பலியில் கூறப்பட்டுள்ள நல்ல சமாரியர் உவமையில் காணப்படும் ஆறு வகையான கதாப்பாத்திரங்களை மையப்படுத்தி, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

நல்ல சமாரியர் உவமையில் உள்ள ஆறு கதாப்பாத்திரங்கள்

கள்வர்கள், அடிபட்டவர், குரு, லேவியர், சமாரியர் மற்றும் சாவடிப் பொறுப்பாளர் என்ற ஆறு வகையினரைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் நமக்குத் தேவையானப் பாடங்களை வழங்குகின்றனர் என்று கூறினார்.
அடிபட்டவரைக் கண்டதும் ஒதுங்கிச் சென்ற குரு, தன் வழிபாட்டு நேரம் வந்துவிட்டதென்பதால் ஒதுங்கிச் சென்றார் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, ஒதுங்கிச் செல்வதற்குப் பதில், நெருங்கிச் செல்லவும், உதவி செய்யவும் சமாரியர் நமக்குச் சொல்லித் தருகிறார் என்று கூறினார்.

சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட சமாரியர்

யூத சமுதாயத்தால் கண்டனம் செய்யப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்ட சமாரியர், தன் நேரம், தன் மீது படிந்த இரத்தக்கறை ஆகியவற்றைக் குறித்து கவலைப்படாமல், அடிபட்டவருக்கு, அரைகுறையான உதவிகள் செய்யாமல், அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் முழுமையாகச் செய்தார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் விளக்கிக் கூறினார்.

அடிப்பட்டவர் ஒவ்வொருவரிலும் இயேசுவைக் காண…

அடிப்பட்டவரைச் சுமந்து வந்த சமாரியரைக் கண்டு, சாவடிப் பொறுப்பாளர், அவர் அந்நியர் என்பதை உணர்ந்து, அதிர்ச்சி அடைந்திருக்கலாம். ஆனால், அத்தகைய ஆச்சரியங்களுக்கு அவர் தன் உள்ளத்தை திறந்து வைத்திருந்ததால், அவர், சமாரியரை சாவடிக்குள் ஏற்றுக்கொண்டார் என்று கூறியத் திருத்தந்தை, அடிபட்டவருக்கு ஆகும் செலவை தான் திரும்பிவந்து கொடுப்பதாக சமாரியர் கூறியதையும், சாவடிப் பொறுப்பாளர் நம்பினார் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
உலகில் நாம் சந்திக்கும் அடிப்பட்டவர் ஒவ்வொருவரிலும் இயேசுவைக் காணவேண்டும் என்றும், அவர்களை நெருங்கிச் சென்று, உதவிகள் செய்யும் பரிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையின் இறுதியில் வலியுறுத்திக் கூறினார்.

Comments are closed.