தூய பெலகியா

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் பெலகியா ஐந்தாம் நூன்றாண்டின் தொடக்கத்தில் அந்தியோக்கில் பிறந்தார். இவர் இயல்பிலே பேரழகியாக இருந்தார். ஆனால் இறைவன் இவருக்குக் கொடுத்த இப்பெருங்கொடையை தவறான வழியில் பயன்படுத்தத் தொடங்கினார். ஆம், இவர் பாவச் சேற்றில் விழுந்து தன்னுடைய வாழ்வையே தொலைத்துக் கொண்டிருந்தார்.

இப்படிப்பட்ட தருணத்தில், ஒருநாள் இவர் தூய ஜூலியனின் ஆலயத்திற்கு முன்பாக நடந்துபோய்க்கொண்டிருந்தார். அப்போது ஆயர் நோன்னுஸ், பாவத்தைக் குறித்தும் பாவத்திற்காக கிடைக்கப்போகின்ற தண்டனைகளைக் குறித்தும் போதித்துக் கொண்டிருந்தார். இதைக் கேட்ட பெலகியா உள்ளம் குத்துண்டு போனார். தன்னுடைய பாவங்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுதார்.

மறுகணம் அவர் ஆயர் நோன்னுசை சந்தித்து, தன்னுடைய பாவங்களை எல்லாம் அறிக்கையிட்டு திருமுழுக்குப் பெற்று, தூய வாழ்க்கை வாழத்தொடங்கினார். இந்நிலையில் ஒருநாள் பெலகியாவிற்கு ஒரு யோசனை வந்தது. “நாமோ பெரும்பாவி, நாம் பெற்ற திருமுழுக்கு மட்டும் நம்முடைய பாவ வாழ்விற்கு ஈடாகாது. இதைவிட பெரிதாகச் செய்ய வேண்டும்” என்பதே அந்த யோசனை. உடனே அவர் தன்னுடைய உடைமைகளை எல்லாம் விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு யாருக்கும் தெரியாமல் எருசலேமிற்குச் சென்று, பின்னர் அங்கிருந்து ஒலிவ மலைக்குச் சென்று, அங்கிருந்த ஒரு குகையில் தங்கி ஜெபத்திலும் தவத்திலும் தன்னுடைய வாழ்வை செலவழிக்கத் தொடங்கினார்.

பெலகியா குகையில் இருந்த நாட்களில் எல்லாம் தன்னுடைய பாவங்களை நினைத்து கண்ணீர் சிந்தாத நாளில்லை. இவ்வாறு அவர் ஒவ்வொருநாளையும் ஜெபத்திலும் ஜெபத்திலும் கடுமையான ஒறுத்தல் முயற்சிகளிலும் செலவிட்டதால், அவருடைய உடல் நலம் குன்றியது. இதற்கிடையில் ஆயர் நோன்னுசிடம் திருத்தொண்டராக இருந்த ஜேம்ஸ் என்பவர் பெலகியாவின் உடல்நிலையை அவ்வப்போது பார்க்க வருவார். 461 ஆம் ஆண்டு, அக்டோபர் 8 ஆம் நாள் அன்று, அவர் பெலகியாவைப் பார்க்க வந்தபோது அவர் இறந்து கிடந்தார். உடனே திருத்தொண்டர் ஜேம்ஸ் செய்தியை ஆயரிடம் சொல்லி, அவரை நல்லடக்கம் செய்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பெலகியாவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. பாவத்தை உணர்ந்து, மனமாற்றம் அடையவேண்டும்

தூய பெலகியாவின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய குற்றத்தை, பாவத்தை உணர்ந்து மனமாறவேண்டும் என்ற சிந்தனைதான் நமக்கு வருகின்றது. பெலகியா ஒருகாலத்தில் மிகப்பெரிய பாவியாக இருந்தார். ஆனால் அவர் தன்னுடைய குற்றத்தை உணர்ந்ததும் புதுவாழ்க்கை வாழத் தொடங்கினார். நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பாவ வாழ்க்கையிலிருந்து மனம்மாறி இறைவனுக்கு உகந்த புதுவாழ்க்கை வாழவேண்டும் என்பதுதான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்ற ஒன்றாக இருக்கின்றது.

இந்த இடத்தில் 19 ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய மறைபோதகராக விளங்கிய ஜான் நியூட்டன் என்பவரைப் பற்றிச் சொல்லியாகவேண்டும். 1805 ஆம் ஆண்டு பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே மிகப்பெரிய போர் நடந்தது. அந்தப் போரில் ஏராளமான பேர் அனாதைகள் ஆனார்கள், நிறையப் பெண்கள் கைம்பெண்கள் ஆனார்கள். அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்பதற்காக நிதிதிரட்டும் பணியில் ஜான் நியூட்டன் இறங்கினார். அதற்காக அவர் எப்படியெல்லாம் மக்களிடம் பேசவேண்டும் என்று அற்புதமாகத் தயாரித்திருந்தார். ஆனால் அவர் மக்களிடம் பேச முற்பட்டபோது எல்லாமே மறந்துபோனது கடைசியில் ஒருவழியாக பேசி சமாளித்தார். அவர் தன்னுடைய உரையின் முடிவில் இவ்வாறு சொன்னார், “நான் எல்லாவற்றையும் மறந்தாலும் இரண்டு காரியங்களை மறக்கவே மாட்டேன். ஒன்று, நான் ஒரு பாவி. இரண்டு, ஆண்டவர் என்னை மீட்டுக்கொண்டார்”.

“நான் பாவி, ஆண்டவர் என்னை மீட்டுக்கொண்டார்” என்று உணர்வதே மனமாற்றத்திற்கான முதல் அடி. பெலகியா தன்னுடைய குற்றங்களை உணர்ந்தார், புது மனுஷியாக மாறினார். நாமும் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, மனம்திருந்தி நடந்தால் இறையருளைப் பெறுவது உறுதி.

ஆகவே, தூய பெலகியாவின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று மனம்திரும்பிய மக்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.