நம்பிக்கையின் நாயகர்கள், இளையோர்
நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தங்கள் கையில் வைத்திருக்கும் இன்றைய இளையோர், நம்பிக்கையின் முக்கிய கதாபாத்திரமாக உள்ளனர் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு காணொளி நேர்காணலில் கூறியுள்ளார்.
இளையோரை மையப்படுத்தி, 15வது உலக ஆயர் மாமன்றம் இடம்பெற்றுவரும் வேளையில், இளையோருக்கு எதை கொடையாக வழங்க விரும்புகிறீர்கள் என, பிரான்ஸ் நாட்டு லியோன் மறைமாவட்ட துணை ஆயர் Emmanuel Gobilliard அவர்களுடன் மேற்கொண்ட ஒரு நேர்காணலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.
நிகழ்காலமும் வருங்காலமும், நம்பிக்கையுமாக இருக்கும் இளையோரே, எதற்கும் அஞ்சாமல், கடமைகளை மேற்கொண்டு, உங்கள் கனவுகளை நிறைவேற்றுங்கள் என்று இளையோருக்கு கூற விழைவதாக திருத்தந்தை கூறியுள்ளார்.
மக்களின் வாழ்வுக்கு ஆணிவேராக இருக்கும் முதியோரின் அனுபவங்களிலிருந்து பலன்பெறும்பொருட்டு, முதியோருடன் உரையாடுங்கள் என இளையோரிடம் விண்ணப்பித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆழமாக வேரூன்றியவர்களாக, மக்களின் வரலாற்றில் இணைந்தவர்களாக, உறுதியான உள்ளத்துடன், உரையாடல்களை மேற்கொள்ளுங்கள் எனவும் இளையோரை ஊக்கப்படுத்தியுள்ளார்.
உங்கள் முன்னேற்றத்தின் வேராக உங்கள் வரலாறு உள்ளது, என்பதை உணர்ந்தவர்களாக இச்சமூகத்தை முன்னோக்கி அழைத்துச் செல்லுங்கள், நாமனைவரும் பானமா நாட்டில் உலக இளையோர் தினத்தில் சந்திப்போம் என தன் காணொளி நேர்காணலை நிறைவுச் செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
Comments are closed.