அக்டோபர் 7 : நற்செய்தி வாசகம்
கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 2-16
அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அணுகி, “கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா?” என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.
அவர் அவர்களிடம் மறுமொழியாக, “மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?” என்று கேட்டார்.
அவர்கள், “மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்” என்று கூறினார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்.
படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், `ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.’ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.
பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.
இயேசு அவர்களை நோக்கி, “தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்” என்றார்.
சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று, அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.
இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.
இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————-
தூய ஜெபமாலை அன்னை (அக்டோபர் 07)
நிகழ்வு
1571 ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே லாபந்தோ என்னும் இடத்தில் கடுமையாகப் போர் நடந்தது. இந்தப் போரில் கிறிஸ்தவர்களே வெற்றி பெற்றார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் உரோமை நகரில் இருக்கக்கூடிய தூய பேதுரு சதுக்கத்தில் கிறிஸ்தவர்கள் தங்களுடைய கைகளில் ஜெபமாலை ஏந்தி அன்னை மரியாவிடம் ஜெபித்ததே ஆகும். அன்னை மரியாவே எதிரிகளிடமிருந்து கிறிஸ்தவர்களுக்கு வெற்றியைத் தேடித்தந்ததால் அப்போது திருத்தந்தையாய் இருந்த ஐந்தாம் பவுல் இதனை அன்னை மரியின் வெற்றியின் விழா என்று கொண்டாடப் பணித்தார்.
வரலாற்றுப் பின்னணி
ஜெபமாலை சொல்லும் வழக்கம் பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்திருக்கிறது என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்வார்கள். பதிமூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயேசுவின் இறைத்தன்மையை மறுக்கும் அல்பிஜீயன்ஸ் என்ற தப்பறைக் கொள்கை திருச்சபைக்கு அதிகமாக ஊறுவிளைவித்து வந்தது. இதை எதிர்த்து டொமினிக் எனப்படும் சாமிநாதர் அதிகமாகப் போராடி வந்தார். ஆனாலும் அவரால் வெற்றிகொள்ள முடியவில்லை. எனவே அவர் காட்டிற்குச் சென்று கடுமையான தவ முயற்சிகளை மேற்கொண்டார். அவர் தவ முயற்சிகளை மேற்கொண்ட மூன்றாம் நாளில் மரியா அவருக்குக் காட்சி கொடுத்து, “இந்த ஜெபமாலையை வைத்து நம்பிக்கையோடு ஜெபி, நிச்சயம் வெற்றி கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு மறைந்தார். மரியா சொன்னதற்கு ஏற்ப சாமிநாதர் தன்னுடைய இடத்திற்குச் சென்று ஜெபமாலை சொல்லி ஜெபித்தார். இதனால் அல்பிஜீனியன்ஸ் என்ற தப்பறைக் கொள்கையை பின்பற்றி வந்த மக்கள் மனம்மாறி இயேசுவை இறைமகனாக ஏற்றுக்கொண்டார்கள். அதன்பிறகு ஜெபமாலை சொல்லும் வழக்கம் மக்களிடத்தில் அதிகமாகப் பரவி வந்தது.
ஆலன் ரோச் என்ற புனிதர் ஜெபமாலை சொல்லும் வழக்கத்தை மக்களிடத்தில் அதிகமாகக் கொண்டு போய் சேர்த்தார். ஜெபமாலை சொல்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றியும் தெளிவாக மக்களிடத்தில் எடுத்துச் சொன்னார். 1571 ஆம் ஆண்டு கிறிஸ்தவர்கள் இஸ்லாமியப் படையை செபமாலையின் துணைகொண்டு வெற்றிகொண்டதால் செபமாலையின் மீது மக்கள் இன்னும் அதிகமாக நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள். 1715 ஆம் ஆண்டு இவ்விழா உரோமைத் திருச்சபையின் விழா அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
இதற்கிடையில் ஜெபமாலை சொல்வது பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தன. ஜெபமாலை சிறியவர்களும் வயதானவர்களும் சொல்லவேண்டியது அது எல்லாருக்கும் உரித்தானது அல்ல என்பது போன்ற விமர்சனங்களும் வந்தன. இந்த நேரத்தில்தான் 1858 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 16 தேதி வரை லூர்து நகரில் மரியா பெர்னதெத் என்ற சிறுமிக்குக் காட்சி கொடுத்ததில் ஜெபமாலை சொல்லி ஜெபித்தார். இதனால் ஜெபமாலை என்பது ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டும் சொல்லவேண்டியது அல்ல, அது எல்லாரும் சொல்லவேண்டியது என்ற வழக்கம் உருவாகியது. 1917 ஆம் ஆண்டு பாத்திமா நகரில் அன்னை மரியா ஜெசிந்தா, லூசியா, பிரான்சிஸ்கா என்ற மூன்று சிறுமிகளுக்குக் காட்சிகொடுத்தபோது தன்னை ஜெபமாலை அன்னை என்றே வெளிப்படுத்தினார். அப்போது அவர் அவர்களிடம் ஜெபமாலை சொல்வதனால் கிடைக்கும் பயன்கள் என்ன என்பது பற்றியும் எடுத்துச் சொன்னார். இவ்வாறு ஜெபமாலை பக்தி திருச்சபையில் படிப்படியாக வளர்ந்தது. 1969 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் இவ்விழாவை திருச்செபமாலையின் அன்னை விழா என அறிவித்து, அதனை உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார்.
ஜெபமாலை சொல்வது என்பது, ஏதோ சொன்ன ஜெபத்தை திரும்பத் திரும்பச் சொல்வது கிடையாது. நாம் ஜெபமாலை சொல்கிறது இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு, அவருடைய உயிர்ப்பு ஆகியவற்றை மரியாவின் வாழ்வோடு இணைத்து தியானிக்கின்றோம். அது மட்டுமல்லாமல் ஜெபமாலையை நாம் சொல்லி ஜெபிக்கின்றபோது நம்முடைய ஐம்புலன்களும் ஒன்றாகச் சேர்ந்து இயங்குகின்றன. அதலால் இதனை ஒரு மிகச் சிறந்த பக்தி முயற்சி என நாம் உணர்ந்துகொள்ளலாம்.
தூய லூயிஸ் தே மான்போர்ட் என்பவர் செபமாலையைக் குறித்து இவ்வாறு கூறுவார், “ஜெபமாலை சொல்கிறபோது நமக்கு வரும் தீவினைகள் முற்றிலுமாக நீங்கும். இறையருள் நமக்கு மேலும் மேலும் பெருகும்” என்று. திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதரோ, “ஜெபமாலை என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதனைச் சொல்லி ஜெபிக்கின்றபோது மீட்பின் வரலாற்றை நினைவுகூறுகின்றோம்; ஆண்டவர் இயேசு நமக்குச் சொல்லிக் கொடுத்த ஜெபத்தினை நினைவுகூறுகின்றோம்; வானதூதர் கபிரியேல் மரியாவிற்குச் சொன்ன மங்கள வார்த்தையை நினைவுகூறுகின்றோம்” என்பார்.
ஆகவே, நாம் அனுதினமும் சொல்லக்கூடிய செ
Comments are closed.