மறையுரைச் சிந்தனை (அக்டோபர் 05)

நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவோம்!

அது ஒரு கூட்டுக்குடும்பம். அந்தக் குடும்பத்தில் இருந்த முதியவருக்கு அன்று 103 வது பிறந்த நாள். எனவே பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் எல்லாம் மிகவும் அமர்க்களமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. குடும்பத்தில் இருந்த எல்லாரும் மிகவும் பரபரப்பாக வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் பிறந்தநாள் கொண்டாடும் முதியவர் மட்டும் எதிலும் பட்டுக்கொள்ளாமல் ஓர் ஓரமாக புன்னகைத்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த உறவினர் ஒருவர் முதியவரை அணுகி, “உங்கள் வாழ்வில் இன்று ஒரு முக்கியமான நாள். அப்படியிருக்கும்போது எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறீர்களே?” என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர், “தம்பி! இன்று மட்டுமில்லை, என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் முக்கியமான நாள்தான். அதை உணர்ந்ததால்தான் என் வாழ்வை அர்த்தமுள்ளவிதமாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்” என்றார்.

ஆம், நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஏன், ஒவ்வொரு நொடியும்கூட முக்கியமானது. இதை உணர்ந்து வாழ்ந்தோம் என்றால், நம்முடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றலாம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, கொராசின், பெத்சாய்தா, கப்பர்நாகும் என்ற மூன்று நகரங்களையும் கடுமையாகச் சாடுகின்றார். இயேசு இந்த மூன்று நகரங்களையும் கடுமையாகச் சாடுவதற்குக் காரணம் என்ன? அப்படி இந்த நகரங்களில் இருந்தவர்கள் செய்த தவறு என்ன? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

கொராசின் நகர் கலிலேயாக் கடலுக்கு கிழக்குப் பக்கமாய் உள்ள நகர். இந்த நகரத்தில் இயேசு ஏராளமான புதுமைகளை, அதிசயங்களை, அற்புதங்களைச் செய்திருக்கவேண்டும். இப்படி இயேசு அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்தபோதும் எந்தவொரு மாற்றமும் இல்லாமல், இந்த நகரில் இருந்தவர்கள் அப்படியே இருந்ததால்தான் இயேசு அந்த நகரை, நகரில் இருந்தவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார். பெத்சாய்தா நகர் கலிலேயாக் கடலுக்கு மேற்குப் பக்கமாய் உள்ள நகர், இந்த நகரிலிருந்து ஆண்டவர் இயேசு பிலிப்பு. அந்திரேயா, பேதுரு என்ற மூன்று திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றார். இயேசு இந்த நகரை எந்தளவுக்கு அன்பு செய்திருந்தால், இந்த நகரிலிருந்து மூன்று திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்!. இப்படி இயேசு பெத்சாய்தா நகரை அன்பு செய்து, அதில் ஏராளமான அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்தபோதும், அது திருந்தாமல் இருந்ததனாலேயே இயேசு பெத்சாய்தாவைக் கடுமையாகச் சாடுகின்றார்.

இயேசு தன்னுடைய பணிவாழ்வில் அதிகமான நாட்களைச் செலவழித்த ஒரு நகர் உண்டென்று சொன்னால், அது கப்பர்நாகும் என்றுதான் சொல்லவில்லை. இந்த நகரத்தில் இயேசு ஏராளமான புதுமைகளையும் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்தார். அப்படியிருந்தபோதுகூட அந்த நகரத்தில் இருந்தவர்கள் திருந்தாமல் அதே பாவ வாழ்க்கை வாழ்ந்து வந்ததால் இயேசு அந்த நகரத்தைப் பார்த்து, “கப்பர்நாகுமே நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய்” என்கின்றார்.

இயேசு இந்த மூன்று நகர்களையும் கடுமையாகச் சாடுவதிலிருந்து நமக்கு ஓர் உண்மை மிகத் தெளிவாகப் புலப்படுகின்றது. அது என்னவெனில், இந்த மூன்று நகர்களிலும் இருந்த மக்கள் கடவுள் தங்களுக்குக் கொடுத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பதே ஆகும். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், அவர்கள் பயனுள்ள வாழ்க்கை வாழவில்லை.

ஒருவர் தன்னுடைய நிலத்தில் விதைகளைத் தூவி, அதனை நன்றாகப் பராமரித்து, குறிப்பிட்ட காலத்தில் அதிலிருந்து பலனை எதிர்பார்ப்பது தானே நியாயம். பலனை எதிர்பாராமல் பயிரிடும் விவசாயி யாரேணும் உண்டோ?. நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இதைப் போன்றுதான் இறைவனும் நாம் வளர்வதற்கு நல்ல சூழலை உருவாக்கித் தந்து, நம்மை நல்லமுறையில் பராமரிக்கின்றார். அப்படியிருந்தும் நாம் பலன்தரவில்லை என்றால் நாம் அதற்கேற்ற தண்டனையைப் பெறுவது திண்ணம்.

கொராசின், பெத்சாய்தா, கப்பர்நாகும் என்ற இந்த மூன்று நகர்களிலும் இயேசு ஏராளமான புதுமைகள் செய்து, இறைவார்த்தையை நிறைவார்த்தையை நிறைய முறை எடுத்துரைத்தார். அப்படியிருந்தபோதும் அந்நகரங்கள் பலன் கொடுக்கவில்லை, திருந்தி நடக்கவில்லை என்பதால்தான் இயேசு அந்த நகரங்களைக் கடுமையாகச் சாடுகின்றார்.

ஆகவே, நம்முடைய வாழ்வில் பலன்கொடுக்கத் தடையாய் உள்ளவை எவை எவை என ஆராய்ந்து பார்த்து, அவற்றை நம்மிடத்திலிருந்து களைவோம். பலன் கொடுக்கின்ற நல்லதொரு வாழ்வை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.