காவல்தூதர்களின் விழா 02.10.2018

கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவர் காட்டுவழியாக பயணம் மேற்கொண்டார். அது ஓர் அடர்ந்த, கொடிய மிருகங்கள் வாழக்கூடிய காடு. அவர் தன் பயணத்தைத் தொடர்கையில் திடிரென்று இருள்சூழ்ந்து கொண்டது; மழைபெய்யும் அறிகுறிகள் வேறு தென்பட்டன. இடிமுழக்கத்துடன், காட்டுவிலங்குகளின் சத்தமும் ஒருசேர அவரை பீதிக்கு உள்ளாக்கியதால், அவருக்குள்ளே ஒருவிதமான பய உணர்வு ஏற்பட்டது. முடிவில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

அவர் மீண்டும் கண்விழித்துப் பார்த்தபோது, அவர் செல்லவேண்டிய இடத்தை அடைந்திருந்தார். அவருக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. என்ன நிகழ்ந்தது என அவர் சிந்தித்த போது அவருக்கு ஒரு அசரீரி ஒலி கேட்டது.

”மகனே நீ உன் பயணத்தைத் தொடர்ந்தபோது, அதன் பாதுகாப்பை என்னிடம் ஒப்படைத்துச் செபித்தாய், அக்கணம் முதலே நான் உன்னைப் பின்தொடர்ந்து வந்தேன். நீ பயணித்த பாதையின் பாதச்சுவடுகளை உற்றுப்பார், உன்பின்னே மேலும் இரு பாதப்பதிவுகளைக் காணலாம். நான்காகத் தொடர்ந்த பாதச்சுவடுகள் நீ மயங்கிய இடத்திலிருந்து இரண்டாகக் குறைந்துள்ளதை காண்பாய். நீ நிலைகுலைந்து, மயங்கி, நிலத்தில் விழ நான் இடமளிக்கவில்லை. மாறாக, நான் உன்னை என் கரங்களில் தாங்கிக் கொண்டேன். அதன்பின் உன்னால் நடந்து உன் பயணத்தைத் தொடர முடியாததால், என் தோள்களில் உன்னைச் சுமந்துவந்தேன். அந்த இரண்டு பாதச்சுவடுகளும் உன்னுடையதல்ல, உன்னைச் சுமந்த என்னுடையதே. உனக்குத் தெரியாமலே நான் உன்னுடன் பயணித்தேன் என்றது” அந்த அசரீரி.
நீ செல்லும் இடமெல்லாம் உன்னைக் காக்கும்படி அவர் தம் தூதர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார் என்ற இறைவார்த்தையை (திபா 91:11) உறுதி செய்வதாக இருக்கிறது மேலே சொல்லப்பட்ட நிகழ்வு. ஆம், இறைத்தூதர்கள் நம்மை பாதுகாக்கக்கூடியவர்கள்; நமக்குத் துணையாய் இருப்பவர்கள், நம்மோடு வழிநடப்பவர்கள். அப்படிப்பட்ட சிறப்புகளுக்குச் சொந்தக்காரர்களான காவல் தூதர்களின் விழாவை இன்று நாம் கொண்டாடுகின்றோம்.

திருச்சபையின் தந்தையர் என அழைக்கப்படுகின்ற அகுஸ்தினார், அக்வினாஸ், எரேனியு போன்றவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் தூதர் இருக்கிறார் என்று சொல்வார்கள். ஆனால் விவிலியத்திலே அதற்கான ஆதாரம் கிடையாது. “இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம். கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” (மத்தேயு 18:10) என்னும் இயேசுவின் வார்த்தைகள்தான் காவல்தூதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கான மையக் கருவாக இருக்கின்றது.
இந்த காவல்தூதர்கள் வழியாக இறைவன் நமக்கு உணர்த்தும் வாக்குறுதி ‘உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை’ என்பதுதான். காவல் தூதர்கள் நம்மோடு இருக்கிறார்கள், நம்மை என்றும் வழிநடத்துகிறார்கள். மேலும் இவர்கள் கடவுளின் செல்லப்பிள்ளைகளைக் காப்பாற்றுபவர்களாகவும் (2 அரசர்கள் 6:13-17), தகவல்களை வெளிப்படுத்துபவர்களாகவும் (லூக் 1:11-20), வழிகாட்டுபவர்களாகவும் (மத் 1:20-21), பராமரிப்பவர்களாகவும் (1 அர 19:5-7), பணிவிடை செய்பவர்களாகவும் (எபி 1:14) வலம் வருகின்றனர். ஆதலால் இவ்வளவு பணிகளை நமக்காக செய்துவரும் காவல் தூதர்களை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்; அவருக்கு என்றும் பிரமாணிக்கமாய் இருக்கவேண்டும்.
சிறுவன் ஒருவன் விடுமுறைக்கு தன்னுடைய பாட்டியின் வீட்டிற்குச் சென்றிருந்தான். பாட்டியின் வீட்டில், ஒரு அறையில் கடவுளின் படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அதற்கு கீழே, “கடவுள் உன்னை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று எழுதியிருந்தது.

இது சிறுவனுக்கு மிகப்பெரிய மன உளைச்சலைத் தந்தது. “கடவுள் என்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்றால், என்னால் சேட்டைகள் செய்ய முடியாது, நான் ஒழுக்கமுடையவனாக அல்லவா வாழவேண்டும்” என்று தன்னுடைய பாட்டியிடம் முறையிட்டான் அவன். அதற்கு அவனுடைய பாட்டி, “கடவுள் உன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அது விளக்கமல்ல, மாறாக கடவுள் உன்னை சிறு நொடிப்பொழுதும் கைவிடாமல் பாதுகாத்து அன்பு செய்கிறார் என்பதே இதன் அர்த்தம்” என்று விளக்கமளித்தார்.
ஆம், காவல் தூதர்கள் நம்மோடு இருக்கிறார்கள் என்றால் கடவுள் எப்போதும் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார் என்று அர்த்தமல்ல, மாறாக அவர் நம்மை சிறுபொழுதும் பிரியாமல் பாதுகாத்து அன்பு செய்கிறார் என்பதே அர்த்தம்.

எனவே நம்மை காவல் தூதர்கள் வழியாக பராமரித்து வரும் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். அத்தோடு காவல்தூதர்களின் உடனிருப்பை உணர்வோம்; இறைவழியில் நடந்து, இறையருள் பெறுவோம்.

Comments are closed.