மறையுரைச் சிந்தனை (அக்டோபர் 02)

சிலுவைகளையும் ஏற்றுக்கொள்வதே சீடத்துவ வாழ்வு!

ஓர் ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவரிடத்தில் நான்கு சீடர்கள் பயற்சி பெற்று வந்தார்கள். ஒருநாள் அவர் தன்னுடைய நான்கு சீடர்களில் தலைசிறந்த சீடரைத் தேர்தெடுக்க விரும்பினார். எனவே அவர் தன்னுடைய நான்கு சீடர்களையும் அருகாமையில் இருந்த ஒரு மலையின் அடிவாரத்திற்குக் கூட்டிக்கொண்டு போய், அவர்களிடம், “இந்த மலையில் முடிந்த மட்டும் ஏறிச்செல்லுங்கள். அவ்வாறு நீங்கள் ஏறிவிட்டு திரும்புபோது நீங்கள் எவ்வளவு தூரம் ஏறியிருக்கிறீர்கள் என்பதை நான் தெரிந்துகொள்ளும்பொருட்டு அங்கிருக்கின்ற இலைகளையோ தளைகளையோ பறித்துக்கொண்டு வாருங்கள்” என்று கூறினார். சீடர்களும் அதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டு மலையில் நாலாபக்கமாக ஏறிச் சென்றார்கள்.

மாலை வேளையில் முதல் சீடன் வந்தான். அவனுடைய கையில் யூகலிப்டஸ் மர இலைகள் இருந்தன. அவனைத் தொடர்ந்து இரண்டாவது சீடன் வந்தான். அவனுடைய கையில் பைன் மர இலைகள் இருந்தன. பின்னர் மூன்றாவது சீடன் வந்தான். அவனுடைய கையில் ஆல்பைன் மரச்சருகுகள் இருந்தன. நான்காவது வந்த சீடனுடைய கையில் எதுவுமில்லை. ஆனால் அவன் கால்கள் கை, கால்கள் எல்லாம் சிராய்ப்புற்று இருந்தன. இதைப் பாத்துவிட்டு மற்ற சீடர்கள் அவனை ஏளனமாகப் பேசத் தொடங்கினார்கள்.

அப்போது துறவி அந்த சீடனைப் பார்த்து, “சீடனே! உன்னுடைய கையில் என்ன ஒன்றுமே இல்லை!. ஒருவேளை நீ மலையேறும்போது தொடக்கத்திலேயே கீழே விழுந்துவிட்டாயா?” என்று கேட்டார். அதற்கு அந்தச் சீடன், “அப்படியெல்லாம் இல்லை. நான் மலையின் உச்சியையே அடைந்துவிட்டுத் திரும்பி வந்திருக்கின்றேன். மலை உச்சியில் மரங்கள் இல்லை, சருகுகள் இல்லை, பனிப்பாறைகள் மட்டும் காணப்பட்டன. பனிப்பாறையிலிருந்து ஏறெடுத்துப் பார்த்தபோது தொலைவில் மாபெரும் கடல் இருப்பது தெரிந்தது. அதனைச் சிறிது நேரம் இரசித்துவிட்டு, இருட்டுவதற்குள் திரும்பவேண்டும் என்பதற்காக வேகமாகத் திரும்பும்போதுதான் என்னுடைய கை கால்களில் சிராய்ப்புகள் ஏற்பட்டன” என்றான்.

இதைக் கேட்ட அந்தத் துறவி, “நீதான் நான் தேடிய சீடன். ஏனென்றால் நீதான் இடர்பாடுகளை எல்லாம் பொறுத்துகொண்டு இறுதிவரை பயணித்தவன். உண்மையில் இப்படிப்பட்டவனுக்குத்தான் குருவாவதற்கான முழு தகுதி இருக்கின்றது” என்று சொல்லி அவனைக் கட்டி அணைத்துக்கொண்டார்.

ஆம், இடர்பாடுகள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு, இறுதிவரைக்கும் மனவுறுதியோடு பயணிப்பவர்தான் உண்மையான சீடர்.

இன்றைய நற்செய்தி வாசகம் உண்மையான சீடர் யார்?, அவர் எப்படி இருக்கவேண்டும்? என்பதை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களோடு வழி நடந்துகொண்டிருக்கும்போது ஒருவர் அவரிடம் வந்து, “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்கின்றார். இந்த மனிதர் இயேசு செய்த அற்புதங்களையும் அருளடையாளங்களையும் பார்த்துவிட்டு, அவரைப் பின்பற்றிச் சென்றால் தனக்கு மதிப்பும் மரியாதையும் மகிழ்ச்சியான வாழ்க்கையும் கிடைக்கும் என நினைத்து இயேசுவிடத்தில் வருகின்றார். சீடத்துவ வாழ்வின் ஒரு பகுதியை மட்டும் பார்த்த அந்த மனிதரிடம், இயேசு சீடத்துவ வாழ்வின் இன்னொரு பகுதியை அதாவது பாடுகளும் சாவால்களும் நிறைந்த பகுதியை எடுத்துச் சொல்லும்போது அவர் இயேசுவிடமிருந்து விலகிச் செல்கின்றார்.

இன்னொரு சீடரிடம் இயேசு, “என்னைப் பின்பற்றி வாரும்” என்று சொல்கின்றபோது அவர், “நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்” என்கின்றார். அவர் ஏற்கனவே இயேசுவின் சீடராக இருக்கின்றார். அப்படியிருந்தபோதும் அவரால் சொந்த பந்தங்களைத் தூக்கி எறிய முடியவில்லை. உலக வாழ்விற்கும் துறவற வாழ்விற்கும் இடையில் சிக்குண்டு தவிக்கின்றார். மூன்றாவது மனிதரோ, “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்கின்றார். இந்த மனிதரோ சுயமாக முடிவெடுக்க திராணியில்லாதவராக இருக்கின்றார்.

மேற்படி நாம் கண்ட அந்த மூன்று மனிதர்களும் சீடத்துவ வாழ்வைக் குறித்து நமக்கு மூன்றுவிதமான சிந்தனைகளைத் தருகின்றார்கள். ஒன்று சீடத்துவ வாழ்க்கை என்பது சொகுசான வாழ்க்கை கிடையாது, அது சிலுவைகள் நிறைந்த வாழ்க்கை. இரண்டு, சீடத்துவ வாழ்க்கை என்பது பாதியிலே போய்விடக்கூடிய வாழ்க்கை அல்ல, அது இறுதிவரை நிலைத்திருக்கின்ற வாழ்க்கை. மூன்று சீடத்துவ வாழ்க்கை என்பது தீர்க்கமான முடிவு எடுக்கக்கூடிய வாழ்க்கை. இப்படிப்பட்ட வாழ்க்கைக்கு யார் ஒருவர் தயாராக இருக்கின்றாரோ அவரே இயேசுவின் உண்மையான சீடர் ஆவார்.

நாம் தீர்க்கமான முடிவெடுத்து, அதில் இறுதிவரை நிலைத்து நிற்பவர்களாகவும் சிலுவைகளைத் தாங்கிக்கொள்ளக்கூடிய பக்குவம் பெற்றவர்கள் ஆவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.