மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 30)
இணைந்து செய்யப்படவேண்டிய இறையாட்சிப் பணி
சில ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல பள்ளிக்கூடத்தில் இயங்கி வந்த சாரணர் இயக்க மாணவர்கள் (Scouts) பயிற்சிக்காக ஒரு கிராமத்தில் முகாமிட்டார்கள்.
அந்தக் கிராமத்தில் இரயில் பாதை ஒன்று இருந்தது. ஆனால், அதில் இரயில் போக்குவரத்து நின்று பல ஆண்டுகள் ஆகியிருந்தன. இதைக் கவனித்த பள்ளியின் சாரணர் இயக்கப் பொறுப்பாளர் மாணவர்களிடம், “அன்பு மாணவச் செல்வங்களே! இன்று உங்களுடைய பயிற்சியை இந்த இரயில் பாதையில் செய்ய இருக்கிறீர்கள். யார் இந்த இரயில் பாதையில் – தண்டவாளத்தில் – நீண்டதூரம் நடந்து செல்கிறீர்கள் என்று பார்ப்போம்” என்றார்.
அவரின் கட்டளைக்கிணங்க மாணவர்கள் ஒவ்வொருவராக இரயில் பாதையில் நடக்கத் தொடங்கினார்கள். ஆனால், யாராலும் அதில் நீண்டதூரம் நடக்க முடியவில்லை. எல்லாரும் இடறி இடறி விழுந்தார்கள். கடைசியில் இரண்டு மாணவர்கள் மட்டுமே இருந்தார்கள். ஒருவர் கருப்பினத்தைச் சார்ந்தவர், இன்னொருவர் வெள்ளையினத்தைச் சார்ந்தவர். இவர்கள் இருவராவது இரயில் பாதையில் நீண்டதூரம் நடக்கின்றார்களா? என்று எல்லோரும் மிகக்கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் இருவரும் செய்த செயல் எல்லாரையும் வியப்படைய வைத்தது. ஆம், அந்த இரண்டு மாணவர்களும் இரயில் பாதையில் நீண்ட தூரம் நடந்தார்கள். எந்தளவுக்கு என்றால், பள்ளியின் சாரணர் இயக்கப் பொறுப்பாளர் போதும் என்று சொல்கிற அளவுக்கு நடந்தார்கள். அது எப்படி அவர்கள் இருவரால் மட்டும் எளிதில் இடறிவிழக்கூடிய இரயில் பாதையில் நீண்ட தூரம் நடக்க முடிந்ததென்றால், அந்த மாணவர்கள் இருவரும் தங்களுடைய கைகளை கோர்த்துப் பிடித்துக்கொண்டு, எதிரெதிர் திசையில் நின்றுகொண்டு நடந்தார்கள். அதனால்தான் அவர்களால் இடறிவிழாமல் நீண்ட தூரம் நடக்க முடிந்தது.
சாரணர் இயக்கப் பொறுப்பாளர் அந்த மாணவர்கள் இருவரும் வித்தியாசமாக சிந்தித்து, செயல்பட்டதால் அவர்கள் இருவரையும் வெகுவாகப் பாராட்டினார். ஆம், இணைந்து செயல்படும்போது எப்படிப்பட்ட இலக்கையும் நாம் எளிதாய் அடையாலாம். இது அன்றாட வாழ்க்கைக்கு மட்டுமல்லாது, ஆண்டவரின் பணிக்கும் மிகவும் பொருந்தும். பொதுக்காலத்தின் இருபத்தி ஆறாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள், “இணைந்து செய்யப்படவேண்டிய இறையாட்சிப் பணி’ என்னும் சிந்தனையைத் தருகின்றன. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவான் ஆண்டவர் இயேசுவிடம், “போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” என்கின்றார். இயேசு அவரிடம், “தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்ல செயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கின்றார்” என்கின்றார். யோவான் ஆண்டவர் இயேசுவிடம் பேசிய வார்த்தைகளும் அதற்கு இயேசு அவருக்கு அளித்த பதிலும் நமது ஆழ்ந்த சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. ஏனென்றால் யோவானின் வார்த்தைகளில் ‘தான் மட்டுமே வளரவேண்டும், அடுத்தவர் வளரக்கூடாது’ என்கின்ற தன்னலம் அதிகமாக வெளிப்படுகின்றது. அப்படிப்பட்ட மனநிலையோடு இருந்த யோவானைத்தான் ஆண்டவர் இயேசு திருத்தி, அவரை பொதுநல சிந்தனையோடு இணைந்து செயல்பட அழைக்கின்றார்.
எண்ணிக்கை நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்கூட இதை ஒத்த கருத்தினைத்தான் நாம் படிக்கின்றோம். ஆண்டவராகிய கடவுள் மோசேயிடமிருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளிக்கின்றார். அவர்கள் அனைவரும் இறைவாக்கு உரைக்கத் தொடங்குகின்றார்கள். இதற்கிடையில் பாளையத்திலே தங்கிவிட்ட எல்தாது, மேதாது ஆகிய இருவர்மீதும் ஆவி இறங்கி வர அவர்களும் இறைவாக்கு உரைக்கத் தொடங்குகின்றார்கள். இதை அறிந்த யோசுவா மோசேயிடம், “மோசே! என் தலைவரே! அவர்களைத் தடுத்து நிறுத்தும்” என்கிறார். அதற்கு மோசே யோசுவாவிடம், “நீ பொறாமைப்படுகின்றாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு” என்கின்றார்.
நற்செய்தி வாசகமும் முதல் வாசகமும் நமக்கு ஒருசில சிந்தனைகளை வழங்குகின்றன. நாம் அதனைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
கடவுளின் அருள் எல்லார்மீது பொழியப்படுகின்றது. இதுதான் இன்றைய இறைவார்த்தை நமக்கு உணர்த்தும் முதன்மையான செய்தியாக இருக்கின்றது. எப்படி என்றால், நற்செய்தி வாசகத்தில் சீடர்கள் குழுவில் இல்லாத ஒருவர் பேயை ஓட்டுகின்றார், முதல் வாசகத்திலோ கூடாரத்தில் இல்லாமல், பாளையத்தில் இருக்கின்ற இருவர்மீது ஆவி இறங்கி வந்து, இறைவாக்கு உரைக்கின்றார்கள். அப்படியானால் இறைவனின் அருள் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல், எல்லார்மீதும் பொழியப்படுகின்றது என்பதுதான் உண்மையாகின்றது. எப்படி மழை எல்லார்மீது பொழியப்படுகின்றதோ, அது போன்று ஆண்டவரின் அருளும் எல்லார்மீதும் பொழியப்படுகின்றது. இந்த உண்மையை உணர்ந்துகொண்டு வாழ்வதுதான் கடவுளுக்கு உகந்த ஒரு செயலாகும்.
ஒருவர்மீது பொழியப்பட்டிருக்கும் கடவுளின் ஆசிருக்காக அவர்மீது பொறாமைப்படக்கூடாது. இது இன்றைய இறைவார்த்தை நமக்குச் சொல்லும் இரண்டாவது செய்தியாக இருக்கின்றது. நற்செய்தியில் யோவான் இயேசுவிடம் வந்து, அவருடைய பெயரால் பேயை ஒட்டுகின்றவரை தடுத்து நிறுத்தச் சொல்கின்றார், முதல் வாசகத்திலோ யோசுவா மோசேயிடம் வந்து, பாளையத்தில் இறைவாக்கு உரைத்துக்கொண்டிருந்த எல்தாது, மேதாது ஆகிய இருவரையும் தடுத்து நிறுத்தச் சொல்கின்றார். யோவான், யோசுவா ஆகிய இருவரின் செயலிலும் வெளிப்படுவது பொறாமையும், சுயநலமும்தானே தானே தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?. அவர்கள் இருவருடைய உள்மனத்திற்குள் தங்களைத் தவிர வேறு யாரும் பேய் ஓட்டவோ அல்லது இறைவாக்கு உரைக்கவோ கூடாது என்கிற சுயநலம் இருந்திருக்கவேண்டும். அது மட்டுமல்லாமல், அவன் இப்படி பேய் ஒட்டுகின்றானே, அவர்கள் இப்படி இறைவாக்கு உரைக்கின்றார்களே என்ற பொறாமையும் இருந்திருக்கவேண்டும். அதனால்தான் அவர்கள் அப்படி நடந்துகொள்கின்றார்கள்.
Comments are closed.