இத்தாலியக் காவல்துறை கழகத்திற்கு திருத்தந்தை வாழ்த்து
ஒரே மதிப்பீடுகளின் அடிப்படையில் ஒரு குடும்பமாக வாழும் இத்தாலியக் காவல்துறை தேசியக் கழகத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பாராட்டுக்களை வழங்கினார்.
இத்தாலியக் காவல்துறையினர், காவல் துறையிலிருந்து ஓய்வுபெற்றோர், காவல்துறையினரின் மதிப்பீடுகளின் அடிப்படையில் வாழ்வை அமைத்த நண்பர்கள் ஆகியோரை உள்ளடக்கிய இக்கழகத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 7000 பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமை காலை, அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை.
சட்ட ஒழுங்குமுறை, மதிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய கலாச்சாரத்தில் வாழும் இத்தாலிய காவல்துறை தேசியக் கழகத்திற்கு, திருத்தந்தை தன் வாழ்த்துக்களைக் கூறினார்.
பொதுநலனுக்காக உழைப்பது என்பது, அனைவரையும் மதித்து, அவர்களுக்காக உழைப்பது மட்டுமல்ல, துன்புறுவோருடன் இணைந்து துன்புறுவதும் ஆகும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அநீதிக்கும், அத்துமீறிய செயல்களுக்கும் எதிராக காவல்துறையினர் உழைக்கும்போது, அவர்கள், கடைநிலையில் வாழும் மக்களோடு இணைந்துள்ளனர் என்று கூறினார்.
தங்களுடைய உயரிய மதிப்பீடுகள், மற்றும், அர்ப்பணம் ஆகியவற்றின் வழியே, காவல் துறையினர் தங்கள் கடமைகளை நிறைவேற்றும்போது, சமுதாயத்தில் உடன்பிறந்த உணர்வு, மற்றும், சரிநிகர் தன்மையின் புளிக்காரமாக செயல்படுகின்றனர் என்று, இத்தாலிய காவல்துறை தேசியக் கழகத்தின் பிரதிநிதிகளிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
Comments are closed.