மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 28)
இயேசு தனித்து வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர்கள் மட்டும் அவர்களோடு இருந்தனர்
சிற்றூர் ஒன்றில் விவசாயி இருவர் இருந்தார். அவர் இறைவன்மீது ஆழமான பற்று கொண்டவர். ஒவ்வொரு நாளையும் ஜெபத்தோடு தொடங்குவார், அதேபோல் தூங்கும்போது இரவு ஜெபம் சொல்லிவிட்டுத்தான் தூங்கச் செல்வார்.
அப்படிப்பட்டவர் ஒரு நாள் தன்னுடைய தோட்டத்தில் விளைந்திருந்த காய்கறிகளை தனது மாட்டுவண்டியில் ஏற்றுக்கொண்டுபோய் சந்தையில் விற்றுவிட்டு, வீட்டுக்குத் தேவையான பொருட்களை வண்டியில் ஏற்றுக்கொண்டு காட்டுப்பாதை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஓரிடத்திற்கு வந்ததும் வண்டியிலிருந்து வித்தியாசமான ஒரு சத்தம் கேட்டது. அது என்ன சத்தம்? அச்சத்தம் எங்கிருந்து வருகிறது? என்று அவர் இறங்கிப் பார்த்தார். அப்போதுதான் தெரிந்தது வண்டியில் உள்ள அச்சில் விரிசல் ஏற்பட்டிருக்கின்றது என்று.
“இந்த நட்டநடுக் காட்டுக்குள், அதுவும் இந்த அந்தி மங்கும் வேளையில் இப்படி வண்டியின் அச்சில் விரிசல் ஏற்பட்டுவிட்டதே. இப்போது நான் என்ன செய்வேன்” என்று யோசிக்கத் தொடங்கினார். பிறகு ஏதோ சிந்தனை வயப்பட்டவராய், வண்டியின் அச்சில் சிறிதுதானே விரிசல் ஏற்பட்டிருக்கின்றது. இதை வைத்துக்கொண்டு எப்பாடு பட்டாவது வண்டியை வீட்டுக்கு ஒட்டிக்கொண்டு போவோம்” என்று முடிவு செய்தார். அவர் இவ்வாறு முடிவுசெய்துவிட்டு, வழியில் வண்டிக்கு எந்தவொரு இடைஞ்சலும் ஏற்படாது இருக்க இறைவனை பிரார்த்திக்க நினைத்தார்.
வழக்கமாக அவர் ஜெபிக்கும்போது, தன்னோடு வைத்திருக்கும் ஜெபப் புத்தகத்தின் உதவியுடன்தான் ஜெபிப்பார். ஜெபப் புத்தகம் இல்லாமல் அவர் ஒருபோதும் ஜெபித்தது கிடையாது. அன்றைக்குப் பார்த்து அவர் ஜெபப் புத்தகத்தை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டு வந்திருந்தார். நேரம் வேறு ஆகிக்கொண்டிருக்கின்றது, இறைவனிடம் ஜெபிக்க கையில் ஜெபப்புத்தகம் வேறு இல்லை, என்ன செய்வது என்று யோசித்துப் பார்த்த அவர், இறைவனுக்குத்தான் எல்லா ஜெபங்களும் தெரியுமே, நாம் நம் மனதில் உதிக்கின்ற வார்த்தைகளை அவரிடத்தில் எடுத்துச் சொல்வோம். அவர் அதனை ஜெபமாக எடுத்துக்கொள்ளட்டும்” என்று தன்னுடைய மனதில் தோன்றிய வார்த்தைகளை இறைவனிடத்தில் எடுத்துச் சொன்னார்.
அப்போது இறைவன் அவருக்கு முன்பாகத் தோன்றி, “மகனே! உன்னுடைய உள்ளக் குமுறல்களை நான் கேட்டேன், இந்நாள்வரை நீ என்னை நோக்கி எழுப்பிய ஜெபங்களுள், இன்றைக்கு நீ எழுப்பிய ஜெபம்தான் மிகவும் ஆர்மார்த்தமாகவும் என்னுடைய உள்ளத்தைக் கரைப்பாகவும் இருந்தது. ஆதலால், நீ வேண்டிக் கொண்டது போன்று, நீ வீடு போய் சேர்கின்ற வரைக்கும் உனது வண்டியின் அச்சு உடைந்துபோகாமல் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு மறைந்து போனார். இறைவன் சொன்னதை நம்பி அந்த விவசாயி தன்னுடைய வண்டியை வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு போனார். ஆச்சரியம் என்னவென்றால், வண்டி வீடு போய் சேர்கிற வரைக்கும் அதற்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை.
“ஜெபம் என்பது சிறகு போன்றது, அது நம் ஆன்மாவை ஆண்டவரிடத்தில் கொண்டு சேர்க்க வல்லது” என்பார் தூய அம்புரோசியார். இது உண்மையிலும் உண்மையிலும் ஒரு கருத்து. மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் விவசாயி நம்பிக்கையோடு ஆண்டவரிடத்தில் ஜெபித்தார். ஆண்டவரும் அவருடைய குரலுக்கு செவிமடுத்து, அவரை வீட்டிக்குப் பத்திரமாய் கொண்டுபோய் சேர்த்தார்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார் என்று வாசிக்கின்றோம். இயேசு இறைமகனாக இருந்தபோதும் அவர் இறைவனோடு ஜெபிப்பதற்கு நேரம் ஒதுக்கினார் என்று வாசிக்கின்றபோது, அவர் ஜெபத்திற்கு எந்தளவுக்கு முக்கியத்தும் தந்து வாழ்ந்திருக்கின்றார் என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகின்றது. கீழே வருகின்ற குறிப்புகள் (லூக்கா நற்செய்தியில் மட்டும்) அவர் எந்தளவுக்கு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஜெபித்திருக்கின்றார் என்பதை எடுத்துச் சொல்கின்றது. ( லூக் 3:21, 5:16, 6:12, 9:20, 9:29, 11:1, 22:41, 23:34). இயேசுவின் வழி நடக்கின்ற நாம் ஜெபிக்கின்ற மனிதர்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
“அன்றாட ஜெபம் செய்கிறீர்களா?” என்று ஒருசிலரிடத்தில் நாம் கேட்கின்றபோது அவர்கள் சொல்லக்கூடிய பதில், “அதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது” என்பதாக இருக்கின்றது. இப்படிச் சொல்பவர்களை நாம் என்னவென்று சொல்வது?. ஜெபம் நம்முடைய வாழ்விற்கான ஆற்றலின் ஊற்று, அதை நாம் செய்யாமல் இருந்தால், நம்முடைய வாழ்விற்கான ஆற்றலை நாம் எங்கிருந்து பெற முடியும்?
ஆகவே, நாம் இயேசுவைப் போன்று ஜெபிக்கின்ற மக்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Comments are closed.