உரோம் திரும்பிய திருத்தந்தையை வரவேற்ற இத்தாலிய அரசுத்தலைவர்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பால்டிக் நாடுகளில், திருத்தூதுப் பயணத்தை முடித்து திரும்பி வரும் வழியில், செய்தியாளர்களிடம் பேசியபோது, போர்க்கருவிகளைக் குறித்து வெளியிட்ட கருத்துக்களின் ஓர் எதிரொலியாக, அவர், செப்டம்பர் 26, இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தி அமைந்திருந்தது.
“போர்க்கருவிகளின் திட்டங்கள் அல்ல, மாறாக, முன்னேற்றத்தின் திட்டங்கள் இவ்வுலகில் ஆட்சி செலுத்த வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்” என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக பதிவாகியிருந்தன.
மேலும், செப்டம்பர் 25, இச்செவ்வாய் மாலை, திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “ஆண்டவர் தன் வல்லமையாலும், அளவற்ற படைப்பாற்றலாலும் தீமையிலிருந்து நன்மையை வெளிக்கொணர்கிறார்” என்ற சொற்கள் இடம்பெற்றன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக, உரோம் நகரின் மேரி மேஜர் பசிலிக்காவுக்கு செல்லும் நிகழ்வு அமைந்து வருவதுபோல், இம்முறையும், செவ்வாய் இரவு, அவர் உரோம் நகர் திரும்பியதும், மேரி மேஜர் பசிலிக்காவுக்கு சென்று, அன்னை மரியாவிடம் செபித்தார்.
பால்டிக் நாடுகளில் திருத்தந்தை தன் திருத்தூது பயணத்தை நிறைவேற்றி உரோம் நகருக்கு திரும்பிய வேளையில், இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜியோ மாத்தரெல்லா அவர்கள், திருத்தந்தையை வரவேற்கும் வண்ணம் ஒரு செய்தியை அனுப்பியிருந்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் லித்துவேனியா, லாத்வியா மற்றும் எஸ்டோனியா நாடுகளில் மேற்கொண்ட பயணம், அங்கு வாழும் கிறிஸ்தவர்களுக்கு ஓர் உந்து சக்தியாக அமைந்தது என்றும், உரையாடல், கிறிஸ்தவ ஒன்றிப்பு, சமுதாய நீதி ஆகிய விடயங்களில் அவர்களது ஆர்வத்தைத் தூண்டியுள்ளது என்றும், அரசுத்தலைவரின் செய்தி கூறியுள்ளது.

Comments are closed.