தூயவர்களான கோஸ்மாஸ் மற்றும் தமியான்

இறந்தோருள் சிறியோர், பெரியோர் ஆகிய அனைவரும் அந்த அரியணையின் முன் நிற்கக் கண்டேன். வேறொரு நூலும் திறந்து வைக்கப்பட்டது. அது வாழ்வின் நூல். இறந்தோரின் செயல்கள் அந்நூல்களில் எழுதப்பட்டிருந்தன. அவற்றுக்கு ஏற்ப அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது” (திவெ 20:12).

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூருகின்ற கோஸ்மாஸ் மற்றும் தமியான் ஆகிய இருவரும் மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் அரேபியாவில் பிறந்தவர்கள். இவர்கள் இருவரும் இரட்டையர்கள், இரண்டுபேருமே கைதேர்ந்த மருத்துவர்கள்.

இருவரும் தாங்கள் இருந்த பகுதியில் இருந்த ஏழை எளியவருக்கு, நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவ சேவையினைச் செய்து வந்தார்கள். இதனால் இவர்கள் இவருடைய பேரும் புகழும் எங்கும் பரவியது.

அந்நாட்களில் உரோமையை டையோக்ளசியன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவன் தொடக்கத்தில் கிறிஸ்தவர்களிடத்தில் நன்றாகத்தான் இருந்தான். ஆனால் நிக்கோமீதியா என்ற அரண்மனை யாரோ ஒருவரால் தீக்கிரையாக்கப்பட்டபோது, அது கிறிஸ்தவர்களால்தான் தீக்கிரையாக்கப்பட்டது என நினைத்துக்கொண்டு, கிறிஸ்தவர்களைக் கொன்றொழிக்கத் தொடங்கினான்.

இந்த நேரத்தில் இலவசமாக மருத்துவச் சேவைகளைச் செய்தும் ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்தும் வாழ்ந்து வந்த கோஸ்மாஸ் மற்றும் தமியானைப் பிடித்து, “நீங்கள் இருவரும் உரோமைக் கடவுளை வணங்கி, அவருக்குத் தூபம் காட்டினால், உயிர் பிழைப்பீர்கள், இல்லையென்றால், கொல்லப்படுவீர்கள்” என்று மிரட்டினான். சகோதர்கள் இருவரும் எதற்கும் பயப்படாமல் மிக உறுதியாக இருந்தார்கள். இதனால் அவன் சகோதரர்கள் இருவரையும் பலவாறாக சித்ரவதை செய்தான். எதிலும் அவர்களுடைய உயிர் போகவே இல்லை, கடைசியில் அவன் அவர்களைத் தலைவெட்டிக் கொன்றுபோட்டான். இவ்வாறு கோஸ்மாஸ் மற்றும் தமியான் என்ற சகோதரர்கள் இருவரும் ஆண்டவர் இயேசுவின்மீது கொண்ட விசுவாசத்திற்காக தங்களுடைய இன்னுயிரைத் துறந்தார்கள். அவர்கள் இறந்த ஆண்டு 303.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய கோஸ்மாஸ் மற்றும் தமியான் ஆகியோருடைய நினைவுநாளை கொண்டாடும் நாம், அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. இறைவனிடமிருந்து இலவசமாகப் பெற்றுக்கொண்டதை, மக்களுக்கு இலவசமாக வழங்குவோம்!

தூய கோஸ்மாஸ் மற்றும் தமியான் ஆகிய இருவரும் இறைவனிடமிருந்து இலவசமாக பெற்ற கொடையினை மக்களுக்கு இலவசமாகவே வழங்கினார்கள். அவர்களைப் போன்று நாம், இறைவன் நமக்குக் கொடுத்திருக்கின்ற கொடையினை, திறமையினைக் கொண்டு மக்களுக்கு (இலவசமாக) சேவை செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இன்றைக்கு சேவை செய்யும் மனப்பான்மையே குறைந்துவரும் சூழலில், இலவசமாக யார் சேவை செய்வார்கள்? என கேள்வி எழலாம்.

இந்த இடத்தில், 2017 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி, லண்டனில் ‘சிறந்த மனிதநேய ஆசியர்’ என்ற விருதுபெற்ற ஜாக் பிரெகர் என்பவரைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். ஆசியர் அல்லாத ஒருவர் இந்த விருதினைப் பெறுவது இதுவே முதல்முறை. இப்படி இருக்கும்போது, இவர் இந்த விருதினைப் பெறுகின்ற அளவுக்கு அப்படி என்ன செய்துவிட்டார் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

Comments are closed.