மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 27)

அவன் இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்!

ஓர் ஊரில் மிகவும் ஆச்சாரியமான குடும்பம் (புலால் உண்ணுதல், மது அருந்துதல் போன்றவை தடைசெய்யப்பட்ட குடும்பம்) ஒன்று இருந்தது. அதில் அண்ணன் தம்பி இருவர் இருந்தனர். இதில் இளையவன் மிகவும் சாதுவானவன்; புலால் மது எதையும் நாடாதவன். ஆனால் மூத்தவன் அப்படியில்லை. அவன் பயங்கர புலால் விரும்பி குடிகாரனும் கூட. இப்படி புலாலுக்கும் மதுவுக்கும் அடிமையான மூத்தவன், ஒருசமயம் பெற்றோர் தனக்கு கொடுத்த பணம் பத்தவில்லை என்று, இளையவனுக்கு பெற்றோர் ஆசை ஆசையாய் கொடுத்த தங்கச் சங்கிலியை எடுத்துக்கொண்டு போய், அதை வைத்துக் குடித்து காசை கறியாக்கினான்.

இதற்கிடையில் இளையவன், தன்னுடைய பெற்றோர் தனக்கு ஆசை ஆசை ஆசையாய் போட்ட தங்கச் சங்கிலி எங்கே என்று கேட்டால் அவர்களிடத்தில் என்ன பதில் சொல்வது என நினைத்து நினைத்து வேதனை அடைந்து வந்தான். ஒரு கட்டத்தில் அவன், எதற்காக நாம் இதை நினைத்து வீணாக மனவேதனை அடையவேண்டும், பேசாமல் நம் தாயிடத்திலே சொல்வது நல்லது என்று முடிவுசெய்துகொண்டு, நடந்த அனைத்தையும் அவன் தன் தாயிடத்தில் போய் சொன்னான். உடனே அவனுடைய தாய் அவனிடம், “என் அன்பு மகனே! நடந்த தவற்றை நீ ஒத்துக்கொண்டது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு விஷயம். இப்போது நீ உன் தந்தையிடத்தில் சென்று, நடந்த அனைத்தையும் அவரிடத்தில் சொல்லி, மன்னிப்புக் கேட்டுவிடு” என்றார்.

அவனுக்குப் பயம். இதையெல்லாம் போய் தந்தையிடத்தில் சொன்னால் அவர் என்ன செய்வாரோ எனப் பயந்த அவன், ஒரு பேப்பரில் நடந்த அனைத்தையும் எழுதி, அதனை அவருடைய அறையில் போட்டுவிட்டு வந்துவிட்டான். மறுநாள் காலை, தந்தை அவனைக் கூப்பிட்டார். தனக்குப் பயங்கரமாக அடிவிழப் போகிறது என்று பயந்துகொண்டே சென்ற அந்தச் சிறுவனை தந்தையானவர் கட்டியணைத்து கண்ணீர் சொரிந்து சொன்னார். “மகனே நீ உன் தவற்றை ஒத்துக்கொண்டாயே அதுபோதும்”. தந்தை இவ்வாறு சொன்னதைக் கேட்டு மகனும் கண்ணீர் விட்டு அழுதான்.

இப்படி நடந்த தவற்றை ஒத்துக்கொண்டு அதற்காகக் கண்ணீர் சிந்தியவர்தான் பின்னாளில் நம் இந்திய தேசத்தின் தந்தையாக உயர்ந்த காந்தியடிகள் அவர்கள். காந்தியடிகள் தவற்றுக்காக மனம் வருந்தினார், பின்னாளில் அதுபோன்று தவறு நடவாதவாறு பார்த்துக்கொண்டு தேசத் தந்தையாக உயர்ந்தார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஒருவரைக் குறித்துப் படிக்கின்றோம். அவர் வேறு யாருமல்ல ஏரோது அரசன்தான். அவன் ஆண்டவர் இயேசு செய்துவந்த செயல்களையும் அவரைக் குறித்து மக்கள் பலவாறாக பேசுவதையும் கேள்விப்பட்டு, “யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே! என்று குற்ற உணர்ச்சி மிகுதியால் அவரைக் காண வாய்ப்புத் தேடுகின்றான்.

ஏரோது மன்னன் தன்னுடைய சகோதரனின் மனைவியோடு வாழ்ந்து வந்ததை, திருமுழுக்கு யோவான் கண்டித்ததால், அவருடைய சாவுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றான். இவ்வளவு பெரிய தவற்றைச் செய்தபிறகும்கூட ஏரோது மன்னன் எந்தவொரு குற்றவுணர்ச்சியும் இல்லாமல், அந்தக் குற்றத்திற்காக மனம் வருந்தாமல், குற்றத்திலிருந்து திருந்தி நடக்காமல், தொடர்ந்து அந்த குற்றத்திலே, பாவத்திலே விழுந்து கிடக்கின்றான். இவனை என்னவென்று சொல்வது?.

ஏரோது மன்னனைப் போன்று பலர் தாங்கள் வாழ்கின்ற வாழ்க்கை தவறான வாழ்க்கை என்று தெரிந்த பிறகும் கூட, அதற்காக மனம் வருந்தாமல், அதிலிருந்து வெளியே வராமல் அப்படியே சீழ்பிடித்து சாவதைப் பார்க்க முடிகின்றது. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இத்தகைய போக்கினை விரும்பவில்லை. தவறு செய்கின்ற ஒருவர் அதற்காக மனம் வருந்தி அதிலிருந்து வெளியே வருவதுதான் இயேசு விரும்புகிறார். பாவிப் பெண்ணும் சரி, சக்கேயும் சரி தாங்கள் வாழ்ந்த வாழ்க்கை பாவமான வாழ்க்கை என்று உணர்ந்ததும் அதற்காக மனம்வருந்தி, அதிலிருந்து வெளியே வர, இயேசுவை காண வந்தார்கள். புது வாழ்வினைப் பெற்றுக்கொண்டார்கள். நாமும்கூட செய்த தவற்றினை நினைத்து அப்படியே மனம் புளுங்கிக்கொண்டிருக்காமல் அதனை இறைவனிடத்தில், அவருடைய அடியார்களாகிய குருக்களிடத்தில் எடுத்துச் சொல்லி, நல்ல ஒப்புரவு அருட்சாதனம் செய்து, குற்றத்திலிருந்து வெளியே வந்து, திருந்தி நடப்பதே சிறப்பான ஒரு செயலாகும்.

ஆகவே, செய்த தவற்றினை நினைத்து குற்றவுணர்ச்சியோடு இராமல், இறைவனிடத்தில் அதனை எடுத்துச் சொல்லி, மனம்வருந்துவோம், வாழ்வுக்கான வழியைத் தேடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.