விடுதலை வளாகத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான் செய்திகள்
அன்பு சகோதரர், சகோதரிகளே, எகிப்து நாட்டினின்று புறப்பட்டு, சீனாய் மலையைச் சென்றடைந்த இஸ்ரயேல் மக்களைக் குறித்து இன்றைய முதல் வாசகத்தில் (வி.ப. 19:1) வாசிக்கக் கேட்டபோது, உங்கள் நாட்டு மக்களைப்பற்றி எண்ணிப்பார்க்காமல் இருக்க இயலவில்லை. இங்கிருந்து, வில்நியூஸ் நகர் முடிய மனிதச் சங்கிலியை உருவாக்கிய 20 இலட்சத்திற்கும் அதிகமான எஸ்டோனியா, மற்றும் பால்டிக் நாடுகளின் மக்களை எண்ணிப்பார்க்காமல் இருக்க இயலுமா? தங்கள் விடுதலைக்காகப் போராடிய இஸ்ரயேல் மக்களுடன் நீங்களும், உங்களையே அடையாளப்படுத்திக் கொள்ள இயலும்.

உடன்படிக்கை ஒரு தளை அல்ல

சீனாய் மலையை வந்தடைந்த மக்கள், இறைவனின் அன்பை, அவர் ஆற்றிய புதுமைகள் வழியே ஏற்கனவே உணர்ந்திருந்தனர். இறைவனோடு ஓர் உடன்படிக்கையை உருவாக்கிய மக்கள் இவர்கள். உடன்படிக்கை என்றதும், அது நம்மை இறைவனோடு பிணைத்து விடும் ஒரு தளையைப்போல் உணரத்தேவையில்லை.
இறைவனின் உடன்படிக்கை நம் சுதந்திரத்தைப் பறிப்பது கிடையாது. இறைவன் இல்லாமல் வாழ்வது சுதந்திரத்தைத் தருவதாக ஒரு சில எண்ணலாம். ஆனால், அவ்விதம் வாழ்வோர், இவ்வுலகில் அனாதைகள் போல் இருக்கின்றனர் என்பதை உணர்வதில்லை.

உண்மையான வலிமை

எகிப்திலிருந்து வெளியேறிய மக்களைப் போல, நாம் இறைவனை தொடர்ந்து தேடவும், அவருக்குச் செவி மடுக்கவும் கடமைப்பட்டுள்ளோம். இன்றைய உலகில், மக்களின் சக்தி பல்வேறு அளவுகோல்களால் அளக்கப்படுகிறது. ஒரு சிலர், உரக்கப் பேசுவதால் சக்தி வாய்ந்தவர் என்று காட்டிக்கொள்ள விழைகிறார். வேறு சிலர், தங்கள் ஆயுதங்களைக் கொண்டு, மற்றவர்களை அழித்துவிடுவதாக அச்சுறுத்தும்போது, சக்தி வாய்ந்தவராக உணரக்கூடும்.
இவை எதுவுமே உண்மையான வலிமை கிடையாது. நன்னெறியைவிட்டு விலகி, வர்த்தக சந்தையின் வழிகளுக்கு அடிமையாவதால் நாம் சுதந்திரம் அடைய முடியாது. நுகர்வோர் கலாச்சாரத்திற்கும், தன்னலத்திற்கும், அடுத்தவரை அடக்கியாளும் வேட்கைக்கும் அடிமையாவதற்காக, மிகக் கடினமாகப் போராடி நீங்கள் பெற்ற சுதந்திரத்தை பலியாக்க வேண்டாம்.

இயேசு ஒருவர் மட்டுமே நம் தாகத்தைத் தீர்க்க முடியும்

தாகம் கொண்ட அனைவரும் தன்னிடம் வந்து பருகி, தங்கள் தாகத்தை தீர்த்துக்கொள்ள, இயேசு இன்றைய நற்செய்தியில் நம்மை அழைத்துள்ளார். வாழ்வு தரும் நீரால், தன் தூய்மையால், தன் அளவற்ற சக்தியால், இயேசு ஒருவர் மட்டுமே நம் தாகத்தைத் தீர்க்க முடியும். பாலை நிலத்தில், இஸ்ரயேல் மக்கள் வேற்று தெய்வங்களைத் தேடிச் சென்ற வேளைகளில், அவர்களை மீண்டும், மீண்டும் இறைவன் தன்னிடம் திரும்பி வரும்படி அழைத்தார்.
இறைவனால் தேர்ந்துகொள்ளப்படுவது என்றால், நம்மை மற்றவர்களிடமிருந்து பிரித்துவிடுவது அல்ல. மனித சமுதாயத்தில், நாம் புளிப்பு மாவாக இருந்து செயலாற்றவேண்டும். கூட்டில் தன் குஞ்சுகளை கண்ணும் கருத்துமாகக் காத்துவரும் கழுகு, குஞ்சுகள் வளர்ந்தபின், அவற்றை, கூட்டிலிருந்து வெளியேறும்படி தூண்டிவிடும். அதேபோல், இறைவனும், நம்மைத் தெரிவு செய்து, பாதுகாத்து, வளர்த்து, இறுதியில் நம்மை இவ்வுலகில் பணியாற்றுமாறு அனுப்புகிறார்.

எஸ்டோனியா மக்கள் நடுவே, துணிவுடன் செல்லுங்கள்

நம்பிக்கையற்றவர்கள் என்று தங்களையே அடையாளப்படுத்திக்கொள்ளும் எஸ்டோனியா மக்கள் நடுவே, நீங்கள் துணிவுடன் அருள்பணியாற்றச் செல்லுங்கள். தங்கள் வாழ்வோடும், நம்பிக்கையோடும் போராடும் பலருடன் நீங்கள் பயணிக்க அழைக்கப்பட்டுள்ளீர்கள்.
புனிதமான மக்கள் என்ற சாட்சியத்தை மற்றவர்களுக்கு வழங்குவீர்களாக. புனிதம் என்பது ஒரு சிலருக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட பேறு என்று எண்ணவேண்டாம். நாம் அனைவருமே புனிதத்தில் வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.
எஸ்டோனியா பயணத்திற்கு நாம் உருவாக்கியுள்ள விருது வாக்கில் கூறப்பட்டுள்ளது போல், “நம் உள்ளங்களை விழித்தெழச் செய்யவும்”, தூய ஆவியாரின் அருள்கொடைகளைப் பெறவும், இறைவன் துணை செய்வாராக!

Comments are closed.