மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 26)
பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும்”
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவராக விளங்கியவர் பா. ஜீவானந்தம். ஒருசமயம் தமிழக முதல்வராக இருந்த காமராஜர், ஜீவானந்தத்தின் வீட்டுக்குச் சென்றார். அந்த வீடு மிகச் சிறிய குடிசை வீடாக இருந்தது. அந்த வீட்டையும் அவர் வாழ்ந்த எளிய நிலைமையும் கண்ட காமராஜர் மிகவும் வேதனைப்பட்டார்.
அவர் ஜீவானந்தத்திடம், “இந்த சிறிய வீட்டில் எப்படி வசிக்கிறீர்கள்? விரைவில் வேறு ஒரு நல்ல வீட்டிற்கு ஏற்பாடு செய்கிறேன்!” என்றார் காமராஜர். அதற்கு ஜீவானந்தம், “பெருந்தகையீர்! இந்தக் குடிசை கூட இல்லாமல் நாட்டில் பல லட்சம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது நான் மட்டும் வசதியான வீட்டைத் தேடிக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்? எனக்கு இந்தக் குடிசையில்தான் நிம்மதியான வாழ்க்கை இருக்கிறது!” என்றார். எளிமைக்குப் பெயர் பெற்ற காமராஜரே, ஜீவானந்தத்தின் எளிமையைப் பார்த்து வியந்தார்.
எளிமைக்கு இலக்கணமாக, மக்களோடு மக்களாக, சாதாரண மக்களைப் போன்றே வாழ்ந்து வந்த பா. ஜீவானந்தத்தின் எளிமையை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களைப் பணித்தளத்திற்கு அனுப்புகின்றார். அவ்வாறு அவர் அனுப்புகின்றபோது, சீடர்களுக்கு சில அறிவுரைகளைச் சொல்கின்றார். அதில் ஓர் அறிவுரைதான், “பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும்” என்பதாகும். இதனை நம்முடைய இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
ஆண்டவர் இயேசு இவ்வாறு கூறுவதற்கு முதற்காரணம், இறையாட்சிப் பணி என்பது இறைவனை நம்பி செய்யப்படுகின்ற பணி. அது பணத்தையோ பொருளையோ, இன்ன பிறவற்றையோ நம்பி செய்யப்படுகின்ற பணி அல்ல. ஆகவே, இறைவனை நம்பிச் செய்யப்படுகின்ற பணிக்கு இறைவனை மட்டும் ஏந்திச் செல்லுங்கள், பொருட்களை அல்ல என்று இயேசு சொல்கின்றார்.
இயேசு கிறிஸ்து இவ்வாறு சொல்வதற்கு இரண்டாவது காரணம். விண்ணரசு பற்றிய நற்செய்தியைக் கேட்கக்கூடியவர்கள் சாதாரண மக்களாக, வறியவர்களாக, எளியவர்களாக இருப்பார்கள் (லூக் 15:1). இப்படி இருக்கும்போது அவர்களிடத்தில் போய் ஆடம்பரமாகவும் பகட்டாகவும் இருந்துகொண்டு நற்செய்தியை அறிவித்தோம் என்றால், அது மிகப்பெரிய இடறலாக இருக்கும் என்பதால் இயேசு அப்படிச் சொல்கின்றார்.
இதைவிட இன்னொரு காரணமும் இருக்கின்றது. அது என்னவென்றால், சீடர்கள் பல இடங்களுக்குச் சென்று நற்செய்தியை அறிவிக்க வேண்டும். அப்படியிருக்கும்போது தாங்கள் வைத்திருக்கின்ற பொருட்களை ஒவ்வொரு இடத்திற்கும் தூக்கிக்கொண்டு போனால், அதுவே மிகப்பெரிய பளுவாக இருக்கும். மாறாக குறைவான பொருட்களை அல்லது பொருட்களே இல்லாமல் பணி செய்தால் அந்தப் பணி சிறப்பாக இருக்கும் என்பதாலேயே ஆண்டவர் இயேசு அப்படிச் சொல்கின்றார்.
இவ்வாறு தன்னுடைய சீடர்களிடத்தில் பயணத்தின்போது எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் எனச் சொல்லும் இயேசு, தானும் அப்படி வாழ்ந்தார் என்பதுதான் நிதர்சன உண்மை. ஒரு சமயம் தன்னைப் பின்பற்ற விரும்பிய ஒருவரைப் பார்த்து, “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும் வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. ஆனால் மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்று கூறுவார். அதுதான் உண்மை. இயேசுவுக்கு என்று எதுவுமில்லை. அவர் உடுத்தியிருந்த உடையைக் கூட படைவீரர்கள் சீட்டுப் போட்டு எடுத்துக்கொண்டார்கள். அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையோ வேறொருவருடைய கல்லறையாக இருந்தது. இப்படித்தான் இயேசுவினுடைய வாழ்க்கை இருந்தது. ஆகையால், சீடர்கள் எளிமையாக இருக்கவேண்டும், எளிமையோடு பணிசெய்ய வேண்டும் எனச் சொன்ன இயேசு தானும் அப்படி இருந்தது, இயேசுவின் சீடர்களுக்கும் அவருடைய வழியைப் பின்பற்றி நடக்கும் ஒரு முன்மாதிரியாய் விளங்கினார்.
இன்றைக்கு இறையாட்சிப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் என்றில்லை, இறைமக்கள் சமூகம் கூட இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழாமல், பொருட்கள்மீதும் செல்வத்தின்மீது தங்களுடைய நம்பிக்கை வைத்து, அவை தரக்கூடிய சுகம்தான் நிரந்தரமானது என்ற மாயையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் இத்தகைய சூழ்நிலையில் இறைவன் தரும் ஆறுதலும் அமைதியும் மகிழ்ச்சியும்தான் நிரந்தரமானது என உணர்வது எப்போது?
ஆகவே, இறைமக்கள் சமூகமும் இறையடியார்களுமாகிய நாம் இறைவனை நம்பி மட்டும் நம்முடைய பணியைச் செய்வோம். அவர் தருகின்ற மகிழ்ச்சியே நிரந்தரமானது என்பதை உணர்வோம். தொடர்ந்து இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Comments are closed.