அன்னை மரியா திருத்தலத்தில் திருத்தந்தையின் உரை
அன்பு சகோதரர், சகோதரிகளே, நாம் இப்போது, விடியலின் வாயிலின் முன் நிற்கிறோம். இந்நகரை பாதுகாத்து வந்த சுற்றுச்சுவர், எதிரிகளால், அழிவுக்கு உள்ளாக்கப்பட்டபோது, இந்த வாயில் மட்டுமே தப்பியது. இதே வாயில்தான். அன்னை மரியாவின் திரு உருவப் படத்தையும் பாதுகாத்தது. கருணையின் அன்னையாம் கன்னி மரியா, நமக்கு எந்நேரத்திலும் உதவ காத்திருக்கிறார். மற்றவர்களைத் தாக்கமலேயே நம்மை பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்பதை, அவரே நமக்குக் கற்றுத்தருகிறார். கையில் குழந்தையைத் தாங்காமல், பொன்னிறக் கதிர்கள் ஒளிவீச அமர்ந்திருக்கும் இத்தாய், நம் அனைவரின் தாய். இத்தாயின் மகனாம் இயேசுவின் இதயம் நம் ஒவ்வொருவர் இதயத்திலும் பதிக்கப்பட்டுள்ளதை, அவர் உற்று நோக்குகிறார். கடந்த காலங்களில் நாம் நிறைய சுவர்களைக் கட்டியெழுப்பியுள்ளோம். ஆனால், தற்காலத்திலோ, ஒருவர் முகத்தை ஒருவர் நேரடியாகப் பார்த்து அவர்களை சகோதர சகோதரிகளாக ஏற்று நடத்தவேண்டிய தேவையை உணர்ந்துள்ளது சமூகம். ஒருவர் ஒருவரோடு நாம் இணைந்து நடந்து அதில் கிடைக்கும் மகிழ்வு, மற்றும், அமைதி அனுபவத்தின் வழியாக, சகோதரத்துவ மதிப்பீடுகளைப் பெறுவோமாக.
அன்னை மரியாவை தரிசிக்க வருவோரின் ஒருமைப்பாடு
இந்த இரக்கத்தின் அன்னை மரியாவை தரிசிக்க, பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் வந்தபடி உள்ளனர். நாடுகளுக்கிடையே இடம் பெறும் இத்தகையப் பயணங்கள், கருத்துப் பரிமாற்றங்களின், மற்றும், ஒருமைப்பாட்டின் சந்திப்புக்களாக மாறினால், எவ்வளவு நல்லதாக இருக்கும். இதன் வழியாக, நமக்கு இலவசமாக கிடைத்துள்ள கொடைகளை பகிர்ந்து, நாம் வளம் பெறலாம்.
சில வேளைகளில், உலகை திறந்த மனதுடன் அணுகும்போது, பல்வேறு போட்டிகளையும், பிரிவினைகளையும், பதட்ட நிலைகளையும், பகைமையையும், காண்பதுபோல் தெரிகிறது. அதாவது, மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஓநாயாக மாறும் நிலையைக் காண்கிறோம்.
ஆனால், நம் அன்னையோ, அனைத்து அன்னையர்களைப்போல், தன் குடும்பத்தை ஒன்றிணைத்துக் கொண்டுவரவே விரும்புகிறார். நம் சகோதரர், சகோதரிகளைத் தேடும்படி, அவர் நம்மிடம் கேட்கிறார்.
புது நாளை, புது வாயிலைத் திறக்கும் அன்னை மரியா
இவ்வாறு, ஒரு புது நாள், ஒரு புது வாயில் ஆகிய கதவை அவர் திறக்கிறார். துன்புறும் குடும்பங்களின், குழந்தைகளின் வீட்டு வாயில் நோக்கி அத்தாய், நம்மை வழி நடத்திச் செல்கிறார். துன்புறுவோரில் சிந்தப்படும் இரத்தத்தின் காயங்கள், இயேசுவின் காயங்கள். பிறரன்பெனும் குணப்படுத்தும் ஒளியை நாம் கொணரவேண்டுமென, அவர்கள் அழுகுரல் எழுப்புகின்றனர். வானகத்தின் கதவுகளைத் திறக்கும் திறவுகோல் பிறரன்பே.
அன்பு சகோதரர், சகோதரிகளே, இந்த நுழைவாயிலை நாம் கடந்து செல்லும்போது, அயலவருடன் கொள்ளும் அணுகுமுறையை தூய்மைப்படுத்தும் வல்லமையை நாம் அனுபவிக்கிறோம். மற்றவர்களின் குறைபாடுகளை கருணையுடன் நோக்கும் அதே வேளை, நம்மை மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என எண்ணாமல் செயல்பட, அன்னை மரியா நமக்கு உதவுவாராக. அனைவரையும் ஏற்கும் மனநிலையை அன்னை மரியா நமக்கு வழங்குவாராக. சுவர்களையல்ல, பாலங்களையும், தீர்ப்பையல்ல, இரக்கத்தையும் தேர்ந்துகொள்ள அன்னை மரியா உதவுவாராக. இப்போது செபமாலையின் மூன்றாவது மகிழ்வு மறையுண்மையின் 10 மணிகளை செபிப்போம்.
Comments are closed.