அக்லோனா இறைவனின் அன்னை வளாகத்தில் திருப்பலி

இந்திய, இலங்கை நேரம் இத்திங்கள் மாலை 4.50 மணிக்கு ரீகா நகரிலிருந்து, ஹெலிகாப்டரில், அக்லோனா நகருக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். ஒரு மணி 30 நிமிடங்கள் பயணம் செய்து, உலகப் புகழ்பெற்ற அக்லோனா, இறைவனின் அன்னை திருத்தலம் சென்றடைந்த திருத்தந்தையை, ஆயர் Janis Bulis அவர்களுடன், இரு சிறார் நின்று மலர்கள் கொடுத்து வரவேற்றனர். திருத்தந்தையின் திருப்பலியில் கலந்துகொள்வதற்காக அத்திருத்தல வளாகத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகள், கார்மேகம் சூழ்ந்து மழைவரும் என்ற எதிர்பார்ப்பில், குளிருக்குரிய ஆடைகளையும், நீர்புகா மழைச்சட்டைகளையும் அணிந்திருந்தனர். வெண்மையும் சிவப்பும் கொண்ட லாத்வியா கொடிகளையும், மஞ்சளும் வெண்மையும் கொண்ட வத்திக்கான் கொடிகளையும் மக்கள் ஏந்தியிருந்தனர். இறைவனின் அன்னை திருத்தல வளாகத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில் ஆற்றிய மறையுரையில், மற்றவர்களை ஏற்றுக்கொள்வதற்கு, நம் உள்ளங்களைத் திறக்கும்போது, நாம் காயமடையக் கூடும். சமுதாய வாழ்வில், அரசியல் உலகில் ஏற்பட்ட பழைய மோதல்கள், மக்களின் உள்ளங்களில், மீண்டும், மீண்டும் தோன்றலாம். அத்தகையைச் சூழல்களில் எவ்வாறு மன்னிக்கமுடியும் என்பதை, அன்னை மரியாவிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்று கூறினார்.
அன்னை மரிக்கு திருத்தந்தை செபமாலை
இத்திருப்பலியின் இறுதியில் லாத்வியா அரசுத்தலைவருக்கும், ஏனையோருக்கும் னந்றி தெரிவித்தார் திருத்தந்தை. இந்நாட்டை அன்னை மரியா,எப்போதும் பாதுகாத்து வருவாராக என்று கூறினார் திருத்தந்தை. “உம்மையே அன்னையாக வெளிப்படுத்தும்” என்ற தலைப்பில் லாத்வியா நாட்டில் திருத்தந்தை நிகழ்த்திய கடைசி நிகழ்வு இத்திருப்பலியாகும். அதன்பின்னர் லாத்வியா மக்களுக்கு நன்றி சொல்லி விடைபெற்று, லித்துவேனிய நாட்டின் வில்நியூசுக்கு ஹெலிகாப்டரில் சென்று, அந்நகர் திருப்பீட தூதரகத்தில் இரவு உணவருந்தி உறங்கச் செல்வது திருத்தந்தையின் இத்திங்கள் தின பயணத்திட்டத்தில் உள்ளது.
ஒருவர் ஒருவரை மதித்து, தோழமையைத் தேடுவதிலும், புரிந்துகொள்வதிலும், உரையாடலின் ஆயுதங்களோடு, தூய ஆவியார் நம்மை உடுத்துவதற்கு அனுமதிப்போமாக என்ற சொற்களையும், இத்திங்களன்று தன் டுவிட்டரில் பதிவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்செவ்வாயன்று எஸ்டோனியா நாடு சென்று, பயண நிகழ்வுகளை நிறைவேற்றி, அன்று மாலை உரோமைக்குப் புறப்படுவார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் திருத்தந்தையின் பால்டிக் நாடுகளுக்கான மற்றும் அவரின் 25வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வரும்.

Comments are closed.