ரெடோநெழ் நகர தூய செர்ஜியுஸ்

அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மை சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி, உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்கு செவிசாய்த்தார் (எபி 5:7)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் செர்ஜியுஸ், 1315 ஆம் ஆண்டு, ரஷ்யாவில் உள்ள ரோஸ்டவ் வெளிகி என்ற இடத்தில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். நாட்டில் அவ்வப்போது ஏற்பட்ட உள்நாட்டுப் போர்களின் காரணமாக இவரது குடும்பம் அங்கு இங்கு என்று அலைகழிக்கப்பட்டது, அதனாலேயே குடும்பம் வறுமையில் வாடத் தொடங்கியது. கடைசியில் இவரது குடும்பம் ரெடோநெழ் என்ற இடத்தில் குடியேறி அங்கேயே வாழத் தொடங்கியது.

இப்படி செர்ஜியுசின் குடும்பம் அங்கு இங்கு என்று அலைகழிக்கப்பட்டதால், அவரால் சரியான கல்வியறிவு பெறமுடியவில்லை. இதற்கிடையில் செர்ஜியுசின் பெற்றோர் திடிரென இறந்துபோனார்கள். இதனால் அவரும் அவருடைய சகோதரரும் மாஸ்கோவிற்கு அருகில் இருந்த ஒரு காட்டிற்குச் சென்று, அங்கு துறவிகளைப் போன்று வாழத் தொடங்கினார்கள். சிறுதுகாலம் செர்ஜியசோடு இருந்த அவருடைய சகோதரர், அதன்பிறகு மாஸ்கோவில் இருந்த வேறொரு துறவுமடத்திற்குச் சென்று, அங்கு துறவியாக வாழத் தொடங்கினார்.

இந்நிலையில் செர்ஜியுஸ் காட்டில் தனியாக இருந்துகொண்டு, ஜெப தவ வாழ்க்கை வாழ்வதைக் கேள்விப்பட்ட பல இளைஞர்கள் அவரிடத்தில் வந்து, தங்களை அவருடைய சீடர்களாக ஏற்றுக்கொள்ளக் கேட்டார்கள். அவரும் அதற்கு முழு சம்மதம் தெரிவித்ததால், அவர்கள் அவரோடு இருந்துகொண்டு ஜெப தவ வாழ்க்கை வாழ்ந்துவந்தார்கள்.

காட்டில் ஜெர்சியுசும் அவரோடு சேர்ந்து பல இளைஞர்களும் ஜெப தவ வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட பொதுமக்கள், அப்படிப்பட்டவர்கள் வாழ்கின்ற புண்ணிய மண்ணில் நாமும் வாழ்ந்தால் நமக்கு நிறைய ஆசிர்வாதம் கிடைக்கும் என்று நம்பி, அவர்கள் துறவுமடம் இருந்த இடத்தில் வீடுகளைக் கட்டி அங்கு வாழத் தொடங்கினார்கள். அந்த இடத்திற்கு SERGIEV POSAD என்றும் பெயரிட்டு மகிழ்ந்தார்கள்.

இப்படியே நாட்கள் போய்க்கொண்டிருக்க செர்ஜியுசைப் பற்றிய செய்தி, மாஸ்கோவில் இருந்த மன்னருக்குத் தெரியவந்தது. அவர் செர்ஜியுசை வந்து சந்தித்து, தனக்குப் பின் தன்னுடைய பதவியை ஏற்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், செர்ஜியுசோ தனக்கு எந்தவொரு பதவியும் வேண்டாம் என்று மறுப்புத் தெரிவித்து விட்டார். அதேநேரத்தில் அவருக்கு அவ்வப்போது ஆலோசனைகள் சொல்லிவந்தார்.

ஒருசமயம் மாஸ்கோவின் மன்னர் டர்டர் என்பவரோடு போர்தொடுக்கச் சென்றபோது, செர்ஜியுஸ் அவரிடம், “மன்னா! நீ எதற்கும் அஞ்சாதே! ஆண்டவராகிய கடவுள் உன்னோடு இருக்கின்றார், அவர் உன்னை முன்னின்று ஆசிர்வதித்து வழிநடத்துகிறார்” என்று சொல்லி அனுப்பிவைத்தார். போரில் மாஸ்கோவின் மன்னருக்கே வெற்றி கிடைத்தது. இதனால் அவர் செர்ஜியுசை மிக உயர்வாக மதிக்கத் தொடங்கினார், அவருக்கு வேண்டியமட்டும் ஏதாவது செய்ய நினைத்தார். ஆனால் செர்ஜியுசோ தனக்கு எதுவும் வேண்டாம் என்று மிக எளிமையாக வாழ்ந்து வந்தார். செர்ஜியுஸ் தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியை ஜெபத்திலேதான் செலவழித்தார். அவருடைய ஜெபத்திற்கு வல்லமை இருக்கின்றது என்ற நம்பி, நிறையப் பேர் அவருடைய ஜெப உதவியை நாடிவந்தர்கள். அவரும் அவர்களுக்காக ஜெபித்தார். இப்படி ஜெப மனிதராகவே வாழ்ந்துவந்த ஜெர்ஜியுஸ் 1392 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1452 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய சொர்ஜியுசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. ஜெபிக்கின்ற மனிதர்களாக வாழ்வோம்

தூய சொர்ஜியுசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, அவருடைய வாழ்வின் பெரும்பகுதி ஜெபத்திலே கழிந்தது என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது. அவரை நினைவுகூரும் நாம் ஜெபத்திற்கு முதன்மையான இடம் கொடுக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏனென்றால் தந்தை பியோ கூறுவதுபோல, “ஜெபம்தான் விண்ணகம் அடைவதற்கான திறவுகோல்”. ஆகவே, அப்படிப்பட்ட ஒன்றிற்கு நம்முடைய வாழ்வில் எத்தகைய இடம் கொடுக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி இது. அவனும் அவனுடைய படைவீரர்களும் ரஷ்யாவில் போர்தொடுத்து, தோல்விமுகத்தோடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். காரணம் அங்கு நிலவிய சீதோஷன நிலை அவர்களுக்கு ஏற்றதாய் இல்லை. அதனாலேயே அவர்கள் தோல்வி கண்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் அவர்கள் பாரிசை நோக்கித் திரும்பி வந்துகொண்டிருந்தபோது இருட்டிவிட்டது. அதனால் படைவீரர்கள் ஓரிடத்தில் கூடாரம் அமைத்து, அங்கேயே இரவு தங்கத் தொடங்கினார்கள்.

இரவில் எல்லாரும் தூங்கியபிறகு நெப்போலியன் தன்னுடைய படைத் தளபதியோடு கூடாரங்களுக்கு இடையே நடந்து சென்றார். அப்போது ஒரே ஒரு கூடாரத்தில் மட்டும் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அதைக் கண்ட நெப்போலியன் தன்னுடைய படைத்தளபதியிடம், “அது யாருடைய கூடாரம்?, அதில் அவர் என்ன செய்துகொண்டிருக்கின்றார்? என்று பார்த்துவரவும்” என்று சொல்லி அனுப்பினார். படைத்தளபதியும் அங்கு சென்று பார்த்தார். அது ஜெனரல் ப்ரௌத்தின் கூடாரம், அதில் அவர் முழந்தாள்படியிட்டு ஜெபித்துக் கொண்டிருந்தார். படைத்தளபதி அங்கு கண்டதை அப்படியே நெப்போலியனிடம் வந்து சொன்னார். “சரி காலையில் அவரிடத்தில் பேசிக்கொள்ளலாம்” என்று சொல்லி அனுப்பிவிட்டு அவர் தூங்கப் போனார்.

மறுநாள் நாள் காலையில் நெப்போலியன் ஒருபடைவீரனை அனுப்பி, ஜெனரல் ப்ரௌத்தை கூப்பிட்டு வருமாறு சொன்னார். சிறுது நேரத்தில் ஜெனரல் ப்ரௌத் அங்கு வந்தார். அப்போது நெப்போலியன் அவரிடம், “நேற்று இரவு நீங்கள் தூங்குவதற்கு வெகுநேரமாயிற்றோ?” என்று கேட்டார். அதற்கு ஜெனரல் ப்ரௌத், “ஆமாம் மன்னா!, வழக்கமாக நான் ஒவ்வொருநாளும் ஜெபிப்பேன். நான் செய்கின்ற ஜெபம்தான் எனக்கு ஆற்றலையும் வல்லமையும் கொடுக்கும். நேற்றைய நாளில் நாம் வருவதற்குத் தாமதமாகிவிட்டதால், ஜெபித்துவிட்டு தூங்குவதற்கு வெகுநேரமாகிவிட்டது” இப்படிச் சொல்லிவிட்டு அவர் தொடர்ந்து சொன்னார், “சாப்பிடாமல் கூட இருப்பனே ஒழிய, ஜெபிக்காமல் ஒருநாளும் இருக்கமாட்டேன்”. அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு நெப்போலியன் மிகவும் வியந்து போனார்.

ஆம், ஜெபம்தான் நம்முடைய வாழ்வின் ஆற்றலின் ஊற்று. அதனைச் செய்யாமல் இருக்கின்றபோது நாம் வெறும் காற்றில்லாத பலூன்களே.

ஆகவே, தூய ஜெர்ஜியுஸ் போன்று ஜெபத்தின் வல்லமையை உணர்ந்து, ஜெபிக்கின்ற மனிதர்கள் ஆவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.