மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 25)
இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகின்றவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்”
மாவீரன் அலெக்ஸ்சாண்டருடைய படையில் படைவீரன் ஒருவன் இருந்தான். அவன் படைவீரன் என்ற பெயருக்கு எந்தவிதத்திலும் தகுதியில்லாமல் இருந்தான். சில சமயங்களில் அவன் போர் நடந்துகொண்டிருக்கும்போது, போர்க்களத்திலிருந்து வெளியேறி தனியாக ஓர் இடத்தில் போய் அமர்ந்துகொள்வான். போர் முடிந்தபிறகு மற்ற படைவீரர்களோடு அவன் சேர்ந்துகொள்வான்.
இப்படி பயந்து பயந்து நடுங்கிக் கொண்டிருந்த அந்த ‘பயந்தாங்கோழி’ படைவீரனைக் குறித்து மாவீரன் அலெக்ஸ்சாண்டர் கேள்விப்பட்டார். தன்னுடைய படையில் இப்படி ஒரு வீரான என்று அவரே ஆச்சரியப்பட்டார். பின்னர் அவர் அந்தப் படைவீரனை தன்னிடத்தில் வரச் சொல்லி ஆணையிட்டார். அரசரின் ஆணைக்கிணங்க அந்தப் படைவீரனும் வந்தான். அப்போது மாவீரன் அலெக்ஸ்சாண்டர் அந்தப் படைவீரனிடத்தில் கேட்டார், “உன்னுடைய பெயர் என்ன?”. அவன் சற்று நடுக்கத்தோடு சொன்னான், “என்னுடைய பெயர் அலெக்ஸ்சாண்டர்”. என்று.
உடனே மாவீரன் அலெக்ஸ்சாண்டர் அந்தப் படைவீரனைப் பார்த்துச் சொன்னார், “அலெக்ஸ்சாண்டர் என்ற பெயரை வைத்துக்கொண்டு இப்படி பயந்துகொண்டு இருப்பதா? ஒன்று பெயரை மாற்று. இல்லையென்றால் பயந்து பயந்து சாகும் இந்தப் போக்கை மாற்று”.
அலெக்ஸ்சாண்டர் என்ற பெயரை வைத்துக்கொண்டு பயந்துகொண்டிருப்பது எப்படி கூடாத ஒருவிசயமோ, அதுபோன்றுதான் கிறிஸ்தவர்களாக இருந்துகொண்டு கிறிஸ்துவின் போதனைக்கேற்ப வாழாததும். ‘கிறிஸ்தவர்கள் என்றால் கிறிஸ்துவின் போதனைக்கு ஏற்பவும் அவருடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கின்றவர்களாகவும் இருக்கவேண்டும். அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துச் சொல்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு போதித்துக்கொண்டிருக்கும்போது, அவரைப் பார்ப்பதற்காக அவருடைய தாயும் அவருடைய சகோதரர்களும் வருகிறார்கள். அவர்கள் வந்த செய்தி இயேசுவிடத்தில் தெரிவிக்கப்பட்டபோது, இயேசு அவர்களிடம், “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிரவர்களே என் தாயும் சகோதர்களும் ஆவார்கள்” என்கின்றார்.
இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளில் இருந்து நாம் இரண்டு உண்மைகளைக் கற்றுக்கொள்ளலாம். ஒன்று, இறையாட்சிக் குடும்பம் என்பது இரத்த உறவுகளைக் கடந்தது என்பதாகும். இரண்டு, இயேசுவைப் பெற்றெடுத்தவர் மட்டும் அவருக்குத் தாயில்லை. அவருடைய வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கிறவர்களும் அவருக்குத் தாயாகிறார்கள் என்பதாகும். இந்த இரண்டு காரியங்களைக் குறித்து இப்போது சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு மனிதராக ஒரு குடும்பத்தில் பிறந்தாலும் அவர் தன்னை ஒரு குறுகிய வட்டத்திற்குகுள் அடக்கிக் கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக பன்னிரெண்டு வயதில் இயேசு காணாமல்போய் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டபோது அவருடைய தாயார் அவரிடம், “நானும் உன்னுடைய தந்தையும் உம்மை மிகுந்த கவலையோடு தேடிகொண்டிருந்தோமே?” என்று கேட்கின்ற போது இயேசு, “நான் என் தந்தையின் அலுவலில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்கின்றார். அதாவது தான் ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கு மட்டும் சொந்தமில்லை, தந்தைக் கடவுளின் எல்லாம் மக்களுக்கும் சொந்தம் என்பதை இயேசு சொல்லாமல் சொல்கின்றார். மேலும் இயேசு எல்லாரும் தன்னுடைய உயிரெனவே பார்த்துப் பழகினர். ஆகையால், இயேசுவின் இறையாட்சிக் குடும்பம் என்பது பரந்து விரிந்தது, அது எல்லா மக்களையும் உள்ளடக்கியது என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
அடுத்ததாக, இயேசுவின் தாயாக அவருடைய சகோதர சகோதரியாக நம்மாலும் மாற முடியும். எப்போது என்றால், நாம் அவருடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கின்றபோது. ஒருவேளை நாம் கிறிஸ்தவர்களாக இருந்தும் அவருடைய வார்த்தையைக் கேட்டு நடக்கவில்லை என்றால் நாம் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட தகுதியற்றவர்கள் ஆகிப்போய்விடுகின்றோம்.
யூதர்கள் இப்படித்தான், “நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர். ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை” என்று சொல்லி பெருமை பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் திருமுழுக்கு யோவான் அவர்களிடம், “ஆபிரகாம் உங்களுக்குத் தந்தை என்று பெருமை பாராட்டவேண்டாம், கடவுள் நினைத்தால் இந்தக் கற்களிலிருந்தும் ஆபிரகாமிற்கு பிள்ளைகள் தோன்றச் செய்வார்” என்பார். அதாவது ஒருவருடைய பிறப்பினால் அவருக்குப் பெருமை கிடையாது. மாறாக அவருடைய வாழ்க்கையினாலேயே அவருக்குப் பெருமை உண்டு என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம், பெயரளவுக்கு கிறிஸ்தவர்களாக இருக்காமல், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடக்க முயற்சிப்போம். பிறப்பினால் பெருமை வரும் என்ற குறுகிய எண்ணத்தை விடுத்து, வாழ்கின்ற வாழ்வினால் மட்டுமே பெருமை என்பதை உணர்வோம். இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Comments are closed.