பாதிக்கப்பட்டோரின் குரலுக்கு செவிமடுப்பது மிகவும் முக்கியம்

பாலின முறைகேடுகளால் பாதிக்கப்பட்டோர் மிகுந்த வேதனையில் இருப்பதால், அவர்களுடன் உரையாடலை மேற்கொள்வது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்றாலும், அவர்களின் குரலுக்கு செவிமடுப்பது கத்தோலிக்கத் திருஅவையின் முக்கியமான பணி என்று, இங்கிலாந்து கர்தினால், வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள் கூறியுள்ளார்.

செப்டம்பர் 13ம் தேதி முதல், 16ம் தேதி முடிய, போலந்து நாட்டின் Poznan நகரில்,  நடைபெற்ற ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் தலைவர்கள் கூட்டத்தின் இறுதியில், Zenit கத்தோலிக்க செய்திக்குப் பேட்டியளித்த, வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர், கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஆயர் பேரவைகளின் தலைவர்களுடன், திருத்தந்தை மேற்கொள்ளும் சந்திப்பில், பாலின முறைகேடுகளால் பாதிக்கப்பட்டோரின் குரலுக்கு செவிமடுப்பது மிகவும் முக்கியம் என்று கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய நாடு பிரிந்து போவது குறித்த கேள்வி எழுந்தபோது, ஐரோப்பிய நாடுகள் பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட ஒரு கூட்டமைப்பு என்றும், இந்த வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு ஒருங்கிணைந்து வாழ்வது ஐரோப்பாவின் எதிர்காலத்திற்கு அவசியம் என்றும் கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், தன் பேட்டியில் வலியுறுத்தினார்.

தலைமுறையினருக்கிடையே இருக்கவேண்டிய மனம் திறந்த உரையாடலை வளர்ப்பதற்கு, நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றம் நல்லதொரு தருணம் என்று, கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

Comments are closed.