மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 23)

பொதுக்காலம் இருபத்து ஐந்தாம் ஞாயிறு

உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் அனைவருக்கும் தொண்டராக இருக்கட்டும்!

அது ஒரு துறவறமடம். அந்தத் துறவறமடத்தில் அன்று இரவு பெரிய விருந்தொன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. விருந்தில் எல்லாத் துறவிகளும் சந்தோசமாகப் பேசிக்கொண்டு அறுசுவை உணவை உண்டுகொண்டிருந்தார்கள்.

திடிரென்று துறவிகள் கூட்டத்திலிருந்து எழுந்த ஜான் என்னும் வயதான துறவி அங்கிருந்த துறவிகள் அனைவருக்கும் பணிவிடை செய்யத் தொடங்கினார். இது துறவற மடத்தின் தலைவர் உட்பட எல்லாரையும் ஆச்சரியப்பட வைத்தது. ‘சிறியவர்கள்தான் பெரிய துறவிக்குப் பணிவிடை செய்யவேண்டுமே ஒழிய, பெரியவர்கள் சிறியவர்களுக்கு பணிவிடை செய்வது நல்லதல்ல‘ என்பதை உணர்ந்த இளந்துறவிகள் அவர் தங்களுக்குப் பணிவிடை செய்வதை அறவே தவிர்த்தார்கள்.

ஜான் எல்லாருக்கும் பணிவிடை செய்துகொண்டு வருகின்றபோது, பவுல் என்ற துறவிவிடம் வந்தார். அவர் துறவுமடத்தில் மிக முக்கியமான ஓர் ஆள். அவர் ஜான் தனக்குப் பணிவிடை புரிவதை தடுக்கவில்லை, மாறாக அவர் ஜான் செய்துவந்த பணிவிடைகளை அன்போடு ஏற்றுக்கொண்டார். இது துறவுமடத்தில் இருந்த மற்ற சீடர்களுக்கு ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் அதிர்ச்சியையும் தந்தது. விருந்து முடிகின்றவரைக்கும் மற்ற சீடர்கள் அவரிடம் பேசாமல் அமைதியாக இருந்தார்கள். விருந்து முடிந்த பின்னரே அவர்கள் அவரிடம் பேசத் தொடங்கினார்கள்.

“ஜான் வயதில் எவ்வளவு பெரிய மனிதர். அவர் உங்களுக்குப் பணிவிடை புரிவதை நீங்கள் அனுமதித்தீர்களே, இது உங்களுக்கு நல்லதாகத் தெரிகின்றதா?” என்று கேட்டார்கள். அதற்கு பவுல் என்ற துறவி அவர்களிடம், “ஜான் சிறியவர்களாகிய நமக்கு பணிவிடைசெய்வதன் வழியாக, அதாவது தன்னுடைய தாழ்ச்சியினால், மிகப்பெரிய ஆசிர்வாதத்தைப் பெற நினைத்தார். நீங்கள்தான் அவர் அந்தப் பலனை அடையவிடாமல் தடுத்துவிட்டீர்கள். ஆனால் நான் அப்படியில்லை, அவர் எல்லாருக்கும் பணிவிடை செய்வதன் வழியாகக் கிடைக்கின்ற ஆசிர்வாதத்தை அவருக்குக் கொடுக்க நினைத்தேன். அதனால்தான் அவர் பணிவிடை புரிந்தபோது அன்போடு ஏற்றுக்கொண்டேன்” என்றார். எல்லாரும் பதில்சொல்ல முடியாமல் அமைதியானார்.

நம்மோடு வாழுகின்ற சக மனிதர்களுக்குப் பணிவிடை செய்கின்றபோது நாம் எத்தகைய ஆசிர்வாதத்தைப் பெறுகின்றோம் என்பதை இந்த நிகழ்வானது மிக அருமையாக எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலம் இருபத்து ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் ‘முதன்மையானவராக இருக்க விரும்புகின்றவர், அனைவருக்கும் கடைசியானவராக, தொண்டராக இருக்கட்டும் என்னும் செய்தியைத் தருவதாக இருக்கின்றன. நாம் அதை குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

இன்று நாம் வாழும் காலகட்டத்தில் எல்லாரும் பெரியவராக, எல்லாருக்கும் பெரியவராக இருக்க ஆசைப்படுகின்றோம். இதனால் எவ்வளவு பிரச்சனைகளை, எவ்வளவு சண்டை சச்சரவுகளை அனுதினமும் சந்திக்கின்றோம் என்பதை நாம் அறிவோம். இயேசுவோடு இருந்து, இயேசுவாகவே மாறவேண்டியவர்கள் அவருடைய சீடர்கள். ஆனால், இயேசுவின் சீடர்கள்கூட தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதத்தில் ஈடுபட்டார்கள் என்பதுதான் வேதனையாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய பாடுகளைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது சீடர்களோ தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதத்தில் ஈடுபடுகின்றார்கள். அப்போதுதான் இயேசு அவர்களிடம், உண்மையில் யார் பெரியவர் என்ற செய்தியை அவர்களுக்கு எடுத்துச் சொல்கின்றார். சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதத்தில் ஈடுபடுவதற்கு மிக முக்கியமான காரணமாக இயேசு மலைக்குச் செல்லும்போது தன்னோடு பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூன்றுபேரையும் கூட்டிக்கொண்டு போனதை சொல்லலாம். ஏனென்றால், அவர்கள் மூவரும் இயேசுவுக்கு மிக நெருக்கமாக இருந்ததினால் தாங்கள்தான் மற்றவர்களை விடப் பெரியவர்கள் என ஆணவத்தில் பேசியிருக்கலாம். அதனால் சீடர்களுக்கு மத்தியில் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் வந்திருக்கலாம் என உறுதியாகச் சொல்லலாம். ‘நாமோ கல்வாரியில் படவேண்டிய பாடுகளைக் குறித்து பேசிகொண்டிருக்கும்போது சீடர்கள் இப்படி யார் பெரியவர் என்ற வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்களே’ என இயேசு வருந்தியிருக்கலாம். ஆனாலும் இயேசு அதனை வெளிகாட்டிக்கொள்ளவில்லை.

நான்தான் பெரியவன், எல்லாம் தெரிந்தவன் என்ற ஆணவத்தில் இருக்கின்றபோது எத்தகைய அழிவு ஏற்படுகின்றது என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. அங்கு நாம் வாசிக்கின்றோம், “(பொறாமையும்) கட்சி மனப்பான்மை(யும்) உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ்செயல்களும் நடக்கும்” என்று. ஆம், நான்தான் பெரியவன் என்று வாழ்கின்றபோதுதான் சமூகத்தில், குடும்பத்தில் அதிகமான குழப்பங்கள் நடக்கின்றன. அது மட்டுமல்லாமல் எல்லாவிதமான கொடுஞ்செயல்களும் நடக்கின்றன.

தொடக்க நூல் பதினோறாம் அதிகாரத்தில் பாபேல் என்ற இடத்தில் மக்கள் கோபுரம் கட்டுகின்ற நிகழ்வினைக் குறித்து வாசிக்கின்றோம். அவர்கள் அந்த கோபுரத்தைக் கட்டுகின்றபோது உலகத்தில் தாங்கள்தான் மிகப்பெரிய கோபுரத்தைக் கட்டுகின்றோம் என்ற ஒருவிதமான ஆணவத்தோடு கட்டினார்கள். கடவுள் அவர்களின் எண்ணங்களை அறிந்தவராய் அவர்களை உலகம் முழுவதுமாய் சிதறடிக்கின்றார். மரியாவின் பாடலில் கூட, “உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை அவர் சித்தரிப்பார், வலியோரை அரியணையிலிருந்து அவர் தூக்கி விடுவார் என்றுதான் வாசிக்கின்றோம் (லூக் 1: 52). ஆகவே, ஆணவம், செருக்கு போன்றவை இருக்கும் இடத்தில் அழிவு அதிகமாக இருக்கும் என்பதை இதன்வழியாக நாம் அறிந்து கொள்ளலாம். இயேசு நான் பெரியவன் என்ற ஆணவத்தினால் வருகின்ற அழிவினைக் குறித்து நன்றாக அறிந்ததினாலோ என்னவோ சீடர்கள் யார் பெரியவர் என்ற வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் மாறாக, “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் என்கிறார். அப்படியானால் உண்மையில் பெரியவர் என்பவர் பட்டம், பதவிகள், அதிகாரத்தைத் தன்னுடைய கையில் கொண்டிருப்பவர் அல்ல, மாறாக பிறருக்குச் சேவை பெரியவர் என்னும் உண்மையை மிக அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்கின்றார்.

இயேசு தன்னுடைய சீடர்கள் ‘நான் பெரியவன்’ என்ற ஆணவத்தை, செருக்கை அகற்றி, தாழ்ச்சியோடு வாழவேண்டும் என்பதற்காக ஒரு குழந்தையை அவர்கள் நடுவே நிறுத்தி, அவர்களுக்குக் கூறுகின்ற அறிவுரைதான் இன்னும் சிறப்பானதாக இருக்கின்றது. “இத்தகைய சிறுபிள்ளைகளும் ஒன்றை ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கின்றார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கின்றார்” என்கிறார். குழந்தைகள் தூய்மைக்கும், தாழ்ச்சிக்கும், உண்மையான கள்ளம் கபடற்ற தன்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கக்கூடியவர்கள். இவர்களைப் போன்று தூய்மையான மனத்தினராக, தாழ்ச்சி நிறைந்தவர்களாக வாழ்கின்றபோது நாம்தான் உண்மையில் பெரியவர்கள் (?) என்பதை இயேசு மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றார். ஆகையால், ஒருவர் உண்மையிலே பெரியவர், முதல்வர் என்றால் அவர் அடிப்படையில் அடுத்தவருக்கு சேவை செய்கின்றவராகவும் தம்மையே தாழ்த்திக்கொண்டு வாழவேண்டும் என்பதுதான் இயேசுவின் ஆழமான போதனையாக இருக்கின்றது.

இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் அடுத்தவருக்குப் பணிவிடை புரிகின்ற நல்ல மனப்பான்மையையும் உள்ளத்தில் தாழ்ச்சியும் கொண்டிருக்கின்றோமா? என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் அடுத்தவருக்கு பணிவிடை புரிவதை, அடுத்தவருக்குத் தாழ்ந்து போவதை மிகவும் கேவலமாக நினைக்கின்றோம். அது உண்மையில்லை, ஏனென்றால், ஆண்டவர் இயேசுவே, “பணிவிடை பெற அல்ல, பணிவிடை புரியவே வந்தேன்” என்கின்றார். (மத் 20: 28). எனவே, நாம் அடுத்துவருக்குத் தொண்டு அல்லது பணிவிடை செய்து வாழ்கின்றபோதும் நம்மையே நாமே தாழ்த்திக்கொண்டு வாழ்கின்றபோதும் இறைவனால் மேலும் மேலும் உயர்த்தப்படுவோம் என்பது உண்மையாகின்றது.

அமெரிக்க அதிபர்களில் புகழ்பெற்ற பலர் இருந்தாலும் அமெரிக்க அதிபர் என்று சொன்னால், சட்டென நம்முடைய நினைவுக்கு வரக்கூடியவர் அபிரகாம் லிங்கன் அவர்கள்தான். அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு.

ஒரு சமயம் நியூயார்க் நகரில் வந்திருந்த ஒரு பெரியவர் ஆபிரகாம் லிங்கனைச் சந்தித்து அவரிடம், “அதிபர் அவர்களே! நாங்கள் வாழும் நியூயார்க்கு மாகாணத்தில் கடவுளும் அதிபர் ஆபிரகாம் லிங்கனும்தான் அமெரிக்காவைக் காப்பாற்றப் போகின்றார்கள் என்று நம்புகின்றோம்” என்றார். இதைக் கேட்டு ஆபிரகாம் லிங்கன் ஆணவத்தின் உச்சிக்குச் செல்லவில்லை. மாறாக, அவர் மிகவும் பொறுமையாக, “ஐயா! நீங்கள் சொல்வதில் பாதி உண்மையும் பாதிப் பொய்யும் இருக்கின்றது” என்றார். அதாவது கடவுள்தான் பெரியவர், தான் ஒரு சாதாரண மனிதர் என்பதுதான் லிங்கன் அவருக்கு அளித்த பதிலின் சாராம்சமாக இருக்கின்றது. ஆபிரகாம் லிங்கன் அந்தளவுக்கு தன்னையே தாழ்சிக்கொண்டு ஒரு சாதாரண மனிதரைப் போன்று வாழ்ந்தார். அதன்தால்தான் கடவுள் அவரை உயர்த்துகின்றார்.

நாம் இப்படி உள்ளத்தில் தாழ்ச்சியைக் கொண்டு வாழும்போது கடவுளால் மேலும் மேலும் உயர்த்தப்படுவோம் என்பது உண்மையாகின்றது. தாழ்ச்சி உள்ளவர்களை கடவுளின் மக்களாக நாம் உறுதியாகச் சொல்லலாம். இப்படிப்பட்டகளுக்கு கடவுள் உதவி செய்வார், அவர்களை பகைவர்களிடமிருந்து காப்பாற்றப்படுவார் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துச் சொல்கின்றது.

ஆகவே, நாம் வாழும் இந்த சமூகத்தில் நான்தான் பெரியவன் என்ற ஆணவத்தோடு வாழாமல், உள்ளத்தில் தாழ்ச்சியை, உடனிருப்போருக்கு பணிவிடை புரிகின்ற நல்ல மனப்பான்மையைக் கொண்டு வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.