இறைஇரக்கம் ஒவ்வொருவரையும் தேடுகின்றது

இரக்கத்தின் திட்டம், தெரிவு செய்தல், உருவாக்குதல் ஆகிய மூன்று சொற்களை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை திருப்பலியில் மறையுரையாற்றினார்.

திருத்தூதரும், நற்செய்தியாளருமான புனித மத்தேயுவின் விழாவான, செப்டம்பர் 21, இவ்வெள்ளி காலையில், வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித மத்தேயு இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டு, திருத்தூதராக உருவாக்கப்பட்டது பற்றி மறையுரையில் விளக்கினார்.

வரி வசூலிப்பவரான மத்தேயு, பணத்திற்காக தன் மக்களைக் காட்டி கொடுப்பவராகவும், ஊழல் நிறைந்தவராகவும் நோக்கப்பட்டார், ஆயினும் இத்தகைய மிகவும் பழிக்கப்பட்ட இடங்களிலிருந்து இயேசு பலரைத் தேர்ந்துகொண்டார் என்று கூறினார் திருத்தந்தை.

திருஅவையின் வாழ்விலும், பல கிறிஸ்தவர்கள், பல புனிதர்கள், மிகவும் தாழ்நிலையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றுரைத்த திருத்தந்தை, நம் பாவ நிலையிலும், ஆண்டவர் நம்மீது இரக்கம் வைத்து, கிறிஸ்தவராக, திருத்தூதராக  நம்மைத் தேர்ந்தெடுத்துள்ளார், எனவே, நாம் எங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

இறைவனின் தேர்வு

நாம் நம்மையே நோக்குவதற்குப் பதிலாக, பிறரையும், அவர்களின் பாவங்களையும் நோக்கி, அவை பற்றிப் பேசுகின்றோம், ஆனால் நம்மையே குற்றம் சொல்வது நல்லது என்று கூறியத் திருத்தந்தை, இறைவன் நம்மை எங்கேயிருந்து தேர்ந்தெடுத்து, இங்கே நம்மை வைத்துள்ளார் என சிந்தித்துப் பார்ப்போம் என்றும், கடவுள் நம்மைத் தேர்ந்துகொள்ளும்போது, ஏதோ ஒரு பெரிய காரியத்திற்காகத் தேர்ந்தெடுக்கிறார் என்பதை நினைத்துப் பார்ப்போம் என்றும் கூறினார்.

ஆண்டவர் நீதிமான்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தார் என்பதையும் நினைவுகூர்வோம் என்றுரைத்த திருத்தந்தை, இறைவனின் இரக்கம் ஒவ்வொருவரையும் தேடுகின்றது, ஒவ்வொருவரையும் மன்னிக்கின்றது என்றும், ஆண்டவரே எனக்கு உதவும் என்று மட்டும் நாம் கேட்க வேண்டும் என அவர் விரும்புகிறார் என்றும் கூறினார்.

இறைவனின் இரக்கம்

இறைவனின் இரக்கம் என்பது ஒரு பேருண்மை, அது, இறைவனின் இதயத்தின் மிக அழகான மறையுண்மை என்றும், இறைவனின் இதயத்திற்கு நேரிடையாகச் செல்ல விரும்பினால், இரக்கத்தின் பாதையைத் தெரிந்து கொள்ள வேண்டும், அந்த இரக்கத்தால் நடத்தப்பட நம்மை அனுமதிக்க வேண்டும் என்றும், இவ்வெள்ளி காலை மறையுரையில் திருத்தந்தை கூறினார்.

மேலும், இறைவனின் இதயத்தை நீங்கள் அடைய விரும்பினால், இரக்கத்தின் வழிகளை எடுக்க வேண்டும் மற்றும், இரக்கத்தால் நடத்தப்பட உங்களையே அனுமதிக்க வேண்டும் என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாகவும் இவ்வெள்ளியன்று வெளியாயின

Comments are closed.