தூயவர்களான ஆன்ட்ரூ கிம், பால் சோங் மற்றும் அவருடைய தோழர்கள்

வாழ்க்கை வரலாறு

கொரியாவில் கிறிஸ்தவம் வளர்ந்து வந்ததற்கான நீண்ட நெடிய வரலாறெல்லாம் ஒன்றும் இல்லை. பதினாறாம் நூற்றாண்டில்தான் கிறிஸ்தவதிற்கான விதையானது அங்கே தூவப்பட்டிருக்கின்றது. அப்படியிருந்தபோதும் இன்றைக்கு அங்கே ஆழமான விசுவாசம் கொண்ட கிறிஸ்தவர்களைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கின்றது. இங்கே கொரியாவில் எப்படி கிறிஸ்தவம் வேறோன்றியது, யாரெல்லாம் அங்கே கிறிஸ்துவுக்காக தங்களுடைய இன்னுயிரைத் துறந்தார்கள் என்று பார்ப்போம்.

1592 ஆம் ஆண்டு, ஜப்பானியப் படையெடுப்பு கொரிய மண்ணில் நிகழ்ந்தபோது ஒருசில கிறிஸ்தவப் படைவீரர்கள் வழியாக கிறிஸ்தவம் அங்கே துளிர்விட்டது என்று சொல்வார்கள். இதற்குப் பிறகு 1777 ஆம் ஆண்டு சீனாவின் வழியாக கிறிஸ்தவ இலக்கியங்கள் கொரியாவிற்குக் கொண்டுவரப்பட்டு, அதன்மூலம் கொரிய நாட்டுக் கிறிஸ்தவர்கள் தங்களுடைய நம்பிக்கையில் உறுதியடைந்தார்கள். இதைத் தொடர்ந்து 1794 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து ஒரு குருவானவர் கொரிய மண்ணில் காலடி எடுத்துவைத்தபோது, ஏராளமான கிறிஸ்தவர்கள் அங்கு இருப்பது கண்டு அவர் ஆச்சரியப்பட்டுப் போனார். அவர் அவர்களுக்கு இறைவார்த்தையைப் போதித்தும் அவர்களை விசுவாசத்தில் இன்னும் உறுதிப்படுத்தியும் வந்தார். இப்படி கொரியாவில் கிறிஸ்தவம் படிப்படியாக வளரத் தொடங்கியது.

1836 ஆம் ஆண்டு, ஏராளமான மறைபோதகர்கள் கொரியாவிற்கு வந்து கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார்கள். இதனால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வேகமாக வளரத் தொடங்கியது. இதைப் பார்த்து பயந்துபோன கொரிய அரசாங்கம், ‘கிறிஸ்தவர்களை இப்படியே விட்டுவைத்தால், அவர்கள் வளர்ந்து, பெரிய இனமாக மாறிவிடுவார்கள்’ என்று சொல்லி 1839 -1867 வரையிலான காலகட்டங்களில் கிறிஸ்தவர்களைப் பிடித்து சித்ரவதை செய்து கொல்லத் தொடங்கினார்கள். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் இறந்துபோனார்கள்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் மூன்று பேர்களை நாம் இங்கே குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். ஒருவர் ஆன்ட்ரூ கிம் என்ற குருவானவர். இவர் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து, அவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தியதால், கொடூரமாகக் கொல்லப்பட்டார். இரண்டாமவர் பால் சோங் என்ற பொதுநிலையினர். இவரும் கிறிஸ்தவம் கொரிய மண்ணில் வளர்வதற்காக கடுமையாகப் பாடுபட்டார். அதனால் கொல்லப்பட்டார். மூன்றாமவர் கொலும்பா கிம். இவரும் சிறையில் வைத்து கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டார். இப்படி கொரிய மண்ணில் கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்தி உயிர்நீத்த மறைசாட்சிகள் ஏராளம்.

1984 ஆம் ஆண்டு, தூய திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் கொரியாவிற்குச் சென்றபோது மேலே சொல்லப்பட்ட மூன்று பேர் உட்பட 103 பேருக்கு புனிதர் பட்டம் கொடுத்து உயர்த்தினார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

கொரிய நாட்டு மறைசாட்சிகளான ஆன்ட்ரூ கிம், பால் சோங் மற்றும் அவர்களுடைய தோழர்களின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. இறைநம்பிக்கையில் உறுதியாக இருந்தல்

‘இறைநம்பிக்கையில் உறுதியாக இருத்தல்’ இதுதான் நாம் இந்த கொரிய நாட்டு மறைசாட்சிகளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமாக இருக்கின்றது. இவர்கள் யாவரும் எத்தகைய எதிர்ப்புகள், அச்சுறுத்தல் வந்தபோதும் தங்களுடைய விசுவாசத்திலிருந்து விலகவில்லை. மாறாக இறுதிவரைக்கும் உறுதியாக இருந்து, ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்ந்தார்கள். நாம் இந்த மறைசாட்சிகளைப் போன்று ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இன்று நாம் நினைவுகூருகின்ற ஆன்ட்ரூ கிம் என்ற குருவானார் அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகள், “கிறிஸ்தவர்கள் என்று நாங்கள் அழைக்கப்படுவதை நினைத்து பெருமிதம் கொள்கின்றோம். அதேநேரத்தில் கிறிஸ்துவின் போதனையை வாழ்வாக்காமல், பெயருக்கு கிறிஸ்தவர்களாக இருப்பதில் எந்தவொரு அர்த்தமில்லை”. எவ்வளவு அற்புதமான வார்த்தைகள் இவை. இதைதான் இயேசு கிறிஸ்து, “என்னை நோக்கி, “ஆண்டவரே, ஆண்டவரே” எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் நுழைவதில்லை, மாறாக விண்ணுலகில் இருக்கின்ற என் தந்தையின் திருவுளத்தின்படி நடப்பவரே நுழைவர்” என்று கூறுவார். (மத் 7:21).

ஆகையால், நாம் பெயரளவுக்கு கிறிஸ்தவர்களாக இல்லாமல், கிறிஸ்துவின் போதனையை வாழ்வாக்குகின்றவர்களாக, அதன்மூலம் அவருக்கு சான்று பகரக்கூடியவர்கள் ஆவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.