மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 20)

பாவங்களை மன்னிக்கும் இயேசு!

ரஷ்யாவை நிக்கோலாஸ் என்ற மன்னர் ஆண்டு கொண்டிருந்த தருணம். அவருடைய படையிலிருந்த தளபதி, ஒருநாள் இரவு தன்னுடைய டைரியை எடுத்து, தான் யார் யாருக்கு, எவ்வளவு கடன் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதைக் குறிக்கத் தொடங்கினார். இந்தப் பட்டியலை அவர் எழுதிய பிறகு, “இந்தக் கடனையெல்லாம் தீர்ப்பது யார்?” என்று எழுதி வைத்தார்.

ஏற்கனவே களைப்பாக இருந்த தளபதி, தான் பட்ட கடன் என்னும் துன்பக்கடலில் மூழ்கி, அமர்ந்த இடத்தில் அப்படியே தூங்கிவிட்டார். இதற்கிடையில் மாறுவேடம் பூண்டு, தமது படைத் தளபதிகளைப் பரிசோதனை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த மன்னர் நிக்கோலாஸ் அன்று இரவு பரிசோதனை செய்வதற்காக வந்தபோது, தளபதி தூங்கிக்கொண்டிருப்பதையும் அவர் அருகில் ஒரு டைரி திறந்த நிலையில் கிடப்பதையும் அந்த டைரியில், ‘யார் யாருக்குக் கடன் கொடுக்க வேண்டும்’ என்பதும் அதன் இறுதியில் “யார் இந்தக் கடனைத் தீர்ப்பது?” என்று எழுதப்பட்டிருப்பதையும் கண்டார்.

உடனே அவர், “யார் இந்தக் கடனைத் தீர்ப்பது?” என்று எழுதப்பட்டிருந்ததற்குக் கீழ், “மன்னர் நிக்கோலாஸ்” என எழுதிவிட்டுப் போனார். தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த அந்தத் தளபதி, தன்னுடைய டைரி திறந்து கிடப்பதையும் அதில், ‘யார் இந்தக் கடனைத் தீர்ப்பது?’ என்பதற்குக் கீழ் மன்னர் நிக்கோலாஸ் என்று எழுதப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்.

மறுநாள் மன்னர் அந்த டைரியில் குறிப்பிட்டிருந்தவாறு, அந்தத் தளபதியின் கடனை அடைக்க பெருந்தொகை தந்து உதவினார்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில், அந்த தளபதியின் கடனை எப்படி மன்னர் நிக்கோலாஸ் தீர்த்துவைத்தாரோ, அதுபோன்று நம் அனைவரது பாவக் கடனையும் ஆண்டவர் இயேசு தீர்த்துவிட்டார், மன்னித்துவிட்டார்.

இன்றைய நற்செய்தி வாசகமானது ஆண்டவர் இயேசு பாவத்தில் விழுந்து கிடந்த ஒரு பெண்ணின் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பதைக் குறித்துச் சொல்கின்றது. ஆண்டவர் இயேசு பாவிப் பெண்ணின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்த நிகழ்வு எத்தகைய அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றது. இந்த நிகழ்வின் வழியாக நாம் என்ன பாடத்தை கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இயேசு கிறிஸ்து பரிசேயரான சீமோனின் வீட்டிற்கு உணவருந்தச் செல்கின்றார். இயேசுவை தன்னுடைய வீட்டிற்கு உணவருந்த அழைத்திருக்கின்றோமே, அவருக்கு உரியமுறையில் விருந்தோம்பல் செய்யவேண்டுமே என்றெல்லாம் சீமோன் நினைக்கவில்லை. இதற்கு மத்தியில் ஆண்டவர் இயேசு சீமோனின் வீட்டில் இருப்பதை அறிந்த பாவிப் பெண் ஒருத்தி, இயேசுவின் அருகில் வந்து, அவருடைய பாதங்களை நறுமணத் தைலத்தால் கழுவி, கூந்தலால் துடைத்து முத்தி செய்கின்றார். இதைப் பார்த்து பதற்றமடைகின்ற சீமோன், ‘இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகின்ற இந்தப் பெண்மணி யார் என்று இவர் அறிந்திருப்பாரே, இவள் பாவியாயிற்றே” என்று முணுமுணுகின்றார். அப்போதுதான் இயேசு, சீமோன் தன்னை நேர்மையாளராகக் காட்டிக்கொள்வதையும் அடுத்தவரைப் பாவியென ஒதுக்குகின்ற போக்கினையும் கடுமையாகச் சாடுகின்றார்.

நேர்மையாளர் என தன்னைக் காட்டிக்கொண்ட சீமோனிடம், இயேசு ஒரு விருந்தினரை எப்படி வரவேற்கவேண்டும் எப்படி எல்லாம் உபசரிக்கவேண்டும் என்பதுகூடத் தெரியாமல் அடுத்தவரிடம் குறைகாணுகிறாயே, உண்மையில் உன்னிடத்தில் தவறு இருக்கின்றது என்று அவருடைய தவற்றினைச் சுற்றிக்காட்டுகின்றார். அடுத்து, பாவிப் பெண் என்று சமூகம் நினைத்த ஒருபெண்ணை, வீட்டிற்கு வரும் விருந்தினரை எப்படி உபசரிக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக முன்னிருத்துகின்றார். இங்கே மக்களுடைய பார்வைக்கு நேரமையாளராகத் தெரிந்த பரிசேயரான சீமோன் குற்றவாளியாகப் போய்விடுகின்றார், ஊரார் கண்ணுக்கு பாவியாகத் தெரிந்த பெண்மணியோ ஆண்டவருடைய பார்வைக்கு நல்லவராகத் தெரிகின்றார். ஆகவே, யாரையும் அவருடைய புறத் தோற்றத்தைப் பார்த்து எடைபோடக்கூடாது.

அடுத்ததாக, கடவுள் எல்லாரையும் அன்பு செய்கின்றார் என்றாலும் தன்னை அதிகமாக அன்பு செய்கிறவரை அவர் இன்னும் அதிகமாக அன்பு செய்கின்றார். இந்த உண்மையை இன்றைய இறைவார்த்தை மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது. பாவிப்பெண் இயேசுவின் மீதுகொண்ட அன்பை அளவுகடந்த விதமாய் வெளிப்படுத்துகின்றார். அவருடைய அன்பினால் தொடப்பட்ட இயேசு, அந்தப் பெண்மணியின் குற்றங்களை அனைத்தையும் மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார். ஆகையால், யாராரெல்லாம் கடவுளை அளவு கடந்த விதமாய் அன்பு செய்கின்றார்களோ அவர்களைக் கடவுள் அளவுகடந்த விதமாய் அன்பு செய்கிறார் என்பது உறுதி.

ஆகவே, நம்மை நேர்மையாளர் என்றும் பிறரைக் குற்றவாளி என்று கருதும் போக்கினை விடுவோம். ஆண்டவர் மீது அளவுகடந்த அன்பு கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.