ஒவ்வொரு 5 விநாடிக்கு ஒரு சிறார் இறப்பு

உலகில் கடந்த ஆண்டில் தடுத்துநிறுத்தப்படக்கூடிய நோய்களால் 15 வயதுக்குட்பட்ட ஏறத்தாழ 63 இலட்சம் சிறார், அதாவது ஒவ்வொரு ஐந்து விநாடிகளுக்கு ஒரு சிறார் வீதம் உயிரிழந்துள்ளனர் என்று, ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பு வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகின்றது.

ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப், உலக நலவாழ்வு அமைப்பு, ஐ.நா. மக்கள் தொகை அமைப்பு, உலக வங்கி ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐந்து முதல் 15 வயதுக்குட்பட்ட சிறாரின் இறப்புக்கு, காயங்கள், குறிப்பாக, சாலை விபத்துக்களும், நீரில் மூழ்குவதும் முக்கிய காரணங்களாகச் சொல்லப்பட்டுள்ளது.

உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், இவ்வாண்டு முதல் 2030ம் ஆண்டுக்குள், ஐந்து வயதுக்குட்பட்ட ஐந்து கோடியே 60 இலட்சம் சிறார் இறக்கக்கூடும் என அவ்வறிக்கை எச்சரித்துள்ளது.

இவ்வாறு இறப்பவர்களில், பாதி பேர், புதிதாகப் பிறந்த குழந்தைகள் எனவும், மருந்துகள், சுத்தமானக் குடிநீர், மின்சாரம், தடுப்பூசிகள் ஆகியவை வழங்கப்பட்டால், ஒவ்வொரு குழந்தையின் வாழ்வையும் பாதுகாக்க முடியும் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (UN)

Comments are closed.