மக்களுக்கு நெருக்கமாக, மனத்தாழ்மையுடன் இருக்கும் நல்லாயன்

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி வழங்கிய மறையுரையில், நயீன் நகர கைம்பெண்ணின் மகனை இயேசு உயிர்பெற்றெழச் செய்த புதுமையை எடுத்துரைத்து, இயேசுவின் அதிகாரம், அவர் இறைச் சட்டங்களை போதித்ததிலிருந்து வரவில்லை, மாறாக, அவர் கனிவும் மனத்தாழ்மையும் உடையவராக, மக்களுக்கு நெருக்கமாக இருந்ததிலிருந்து வந்தது என்றார் திருத்தந்தை.

அக்காலத்து சட்ட வல்லுனர்கள், மக்களிடமிருந்து விலகி நின்று, ஒரு பேராசிரியர் போல் போதித்தனர், ஏனெனில், அவர்களுக்கு மக்கள் மேல் எவ்வித அக்கறையும் இருக்கவில்லை; ஆனால், இயேசுவோ, பெரும்பான்மையான வேளைகளில், மக்களோடு இருந்தார், அவ்வாறு இல்லாதபோது, இறைவனோடு செபித்துக் கொண்டிருந்தார், எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு மக்களோடு மக்களாக வாழ்ந்து, அவர்கள் கண்களை உற்று நோக்கி, அவர்களைத் தொட்டு குணமாக்கி, அவர்களுக்கு செவிமடுத்து அவர்களை அரவணைத்ததிலிருந்தே அவரின் அதிகாரம் பிறந்தது என மேலும் உரைத்த திருத்தந்தை, நயீன் நகர கைம்பெண்ணின் மகனை உயிர்ப்பித்த புதுமையிலும், கூட்டத்தின் அருகே சென்று உயிரை மீட்டுத் தந்தார், ஏனெனில், அவர் தன் இதயத்தின் வழியாக இங்கு சிந்தித்தார் என உரைத்தார்.

இயேசு கனிவுள்ளவர், அவர் ஒரு நாளும் தன் வாழ்வில் கோப வார்த்தைகளை உதிர்த்ததில்லை, மற்றும், மற்றவர்களுக்கு தண்டனை வழங்கியதில்லை, கோவிலை வியாபாரக்கூடமாக மாற்றியதைக் கண்டபோது, சாட்டையால் அவர்களை இயேசு துரத்தியபோதும், தந்தையாம் இறைவன் மீது கொண்ட அன்பினாலேயே அவ்வாறு செய்தார் என எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வோர் ஆயரும், அருள்பணியாளரும் இயேசுவைப்போல், கனிவும் மனத்தாழ்மையும் கொண்டவராக, மக்களுக்கு நெருக்கமாக இருப்பதிலிருந்து தங்கள் அதிகாரத்தைப் பெறவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார், திருத்தந்தை தன் மறையுரையில்.

புனித வெள்ளியன்று மக்களால் கேலி செய்யப்பட்டபோதும், சிலுவையிலறையும் என கூக்குரலிடப்பட்டபோதும், இயேசு பதில்மொழி வழங்காது, அமைதியில்,  செபத்தில் ஈடுபட்டார். அந்த செப வாழ்வு, அவருக்கு, அதிகாரத்தையும், பலத்தையும், வழங்கியது எனவும் தன் மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்

Comments are closed.